Aran Sei

யாருக்கு ஓட்டுப் போட்டேன்? – போட்டுடைத்த ட்ரம்ப்

நேற்று (அக்டோபர் 24), புளோரிடாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்களித்ததாக `ஏ.எஃப்.பி’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ட்ரம்ப் தன்னுடைய வீடு இருக்கும் புளோரிடாவில் வாக்குச் சாவடியாக  மாற்றப்பட்ட நூலகத்திற்குச் சென்று வாக்களித்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது .

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியுள்ளார்

“நான் டிரம்ப் என்ற ஒருவருக்கு வாக்களித்தேன்.” என்று ட்ரெம்ப் வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வந்தபோது புன்னகையுடன் கூறினார் என்று ’ஏ.எஃப்.பி’ தெரிவித்துள்ளது. நவம்பர் 3- ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்குச் சராசரியாக 5.5 கோடி அமெரிக்க வாக்காளர்கள் தபால் வாக்குகள் மூலமும், கொரோனா தொற்று  காரணமாக முன்கூட்டியே தொடங்கப்பட்ட வாக்குப் பதிவு மையங்களின் மூலமும் ஏற்கனவே வாக்களித்து விட்டனர்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனை விட, ட்ரம்ப் பின்தங்கியிருப்பதாக வெளிவந்த கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. வழக்கமாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மூன்று விவாதங்களில் பங்கேற்பார்கள். ஆனால்  ட்ரம்ப் மற்றும் பிடென் இருவரும் இரண்டு விவாதங்களில் பங்கேற்க மட்டுமே சம்மதித்தனர். அதிலும், ட்ரம்ப் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், இரண்டாவது விவாதத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த கடைசி ஜனாதிபதி விவாதத்தின் போது டிரம்ப், அமெரிக்காவிற்குக் கொரோனா தொற்று தடுப்பூசி சில வாரங்களுக்குள் வந்துவிடும் என்று கூறினார். “எங்களிடம் தயாராக ஒரு தடுப்பூசி உள்ளது. இது சில வாரங்களுக்குள் அறிவிக்கப்படும். அது விரைவில் விநியோகத்திற்கு வரும்” என்று டிரம்ப் அந்த விவாதத்தில் கூறியதாக ‘ஸ்க்ரோல்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் ட்ரெம்பின் வாக்குறுதிகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், அடுத்த ஆண்டு கோடைக்காலம் வரை கொரோனா தடுப்பூசி கிடைக்காது என்றும் அமெரிக்காவின் உயர் சுகாதார அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர். மேலும் அமெரிக்காவில் 2,24,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர் என்றும், தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 85 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தரவுகள் சொல்கின்றன என்று ‘ஸ்க்ரோல்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா அரசியலமைப்புச் சட்டத்தின் படி, இரண்டு முறைதான் ஒருவர் ஜனாதிபதியாகச் செயல்பட முடியும். ஒருவேளை இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால், இது ஜனாதிபதியாக அவர் பணியாற்ற இருக்கும் இரண்டாவது மற்றும் கடைசி முறையாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்