Aran Sei

ட்ரம்புக்கு நோபல் பரிசா?

credit: scmp.com

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை 2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாட்டைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதி கிறிஸ்டியன் டைபிரிங்க் க்ஜெட்டே (Christian Tybring-Gjedde) பரிந்துரை செய்துள்ளார்

ஆண்டுதோறும் உலக அமைதிக்காக பங்களிப்பு செய்தவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு வழங்கப்படும் நபரை ஐந்து நபர்களைக் கொண்ட நோபல் குழு தீர்மானிக்கும். அந்தக் குழுவை நார்வேயின் பாராளுமன்றம் நியமிக்கிறது.

அண்மையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்துக்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை பரிந்துரைப்பதாக கூறும் கிறிஸ்டியன் டைபிரிங்க், இந்த ஒப்பந்தத்தைப் பின்பற்றினால் மற்ற வளைகுடா நாடுகளும் வளமை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுவரையில் நோபல் பரிசு பெற்றவர்களைக் காட்டிலும் நாடுகளுக்கு இடையில் அமைதியை உருவாக்க டிரம்ப் அதிக முயற்சிகளை எடுத்துள்ளார் என்று கிறிஸ்டியன் டைபிரிங்க் தனது முன்மொழிவு குறிப்பில் கூறியுள்ளதாக  பி.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டருக்கு பிறகு வந்த அதிபர்கள் ஒன்று போரை தொடங்கினர் அல்லது பன்னாட்டு ஆயுதமேந்திய போர்களில் அமெரிக்காவை பங்கெடுக்க வைத்துள்ளனர் என்றும் 39 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்த மரபை டிரம்ப் உடைத்தார் என்றும் கிறிஸ்டியன் டைபிரிங்க் குறிப்பிட்டுள்ளார்.

தான் டிரம்பின் “மிகப் பெரிய ஆதரவாளர்” இல்லை என்று கூறும் கிறிஸ்டியன் டைபிரிங்க், நோபல் பரிசு வழங்கும் குழு விவரங்களின் அடிப்படையில் டிரம்பை மதிப்பீடு செய்ய வேண்டுமே தவிர அவர் சில நேரங்களில் நடந்து கொண்டதை வைத்து முடிவெடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

அண்மை ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் டொனால்டு டிரம்ப் செய்துள்ளதை காட்டிலும் மிக மிகக் குறைவாகவே அமைதி உண்டாக்குவதற்கு வேலைகளைச் செய்துள்ளனர் என்றும் குறிப்பாக, 2009-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் “பராக் ஒபாமா எதையுமே செய்யவில்லை” என்றும் கிறிஸ்டியன் டைபிரிங்க் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகளுக்கான உயர்நிலை ஆய்வு மையத்தில் தகராறு மேலாண்மை ஆய்வுத் திட்டத்தின் இயக்குநர் டேனியல் சேர்வர், “இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரை எதையும் செய்து விடப் போவதில்லை. ஏனென்றால், இசுரேலும் அமீரகமும் போர் நிலையில் இல்லை” என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

“இறுதியில், இது வளைகுடா பகுதியில் ஒட்டுமொத்த அமைதியை மேலும் சிக்கலானதாக்கி விடலாம்” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறையில் தூதுவராக பணியாற்றியவரும் தற்போது கென்டக்கி பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத் துறையின் பேராசிரியருமான கேரி கெவன்.

குடியேற்றக் கொள்கை, அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அந்நிய நாடுகளுக்கு வழங்கப்படும் உதவி போன்றவற்றின் மீது அதிபர் டிரம்பின் நிலைப்பாடு ஆகியவை அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதற்கு தடைகளாக இருக்கும் என்கிறார் கேரி கெவன்.

டிரம்ப் அரசின் பிற வெளியுறவு முயற்சிகள் பற்றியும் ஐயப்பாடுகளே தொடர்கின்றன என்று கூறுகிறார், சேர்வர். குறிப்பாக, வட கொரியாவுடன் அணு ஆயுத நீக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முறிவு, ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஆகியவற்றை அவர் சுட்டிக் காட்டுகிறார். ”டிரம்ப் அரசு வெளியுறவு கொள்கையிலோ அல்லது உலகில் அமைதியை உருவாக்குவதிலோ வெற்றி அடையவில்லை. மாறாக, அது தோல்வி அடைந்துள்ளது” என்கிறார் சேர்வர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்