Aran Sei

‘ ட்ரம்ப் தவறான முன்னுதாரணம் ‘ – ஜனநாயகக் கட்சி விமர்சனம்

Credits: Indian Express

கொரோனா நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்.

வால்டர் ரீட் மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு வந்ததும் பால்கனியில் நின்றுகொண்டு அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் கையசைத்தார்.

அக்டோபர் 2-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலினா ட்ரம்ப் இருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தொடக்கத்தில் இரண்டு பேரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் அதிகரித்ததால் வெள்ளியன்று வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

மருத்துவமனையில் இருந்த ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து வெளியேறி காரில் அமர்ந்தபடி சாலையில் இருந்த மக்களுக்குக் கையசைத்தார். பிறகு மருத்துவமனை திரும்பினார்.

இந்நிலையில், நான்கு நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு திங்கட்கிழமை மாலை ட்ரம்ப் ஹெலிகாப்டரில் வெள்ளை மாளிகை வந்தடைந்தார்.

சமீபத்தில் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில்,

“மருத்துவமனையில் இருந்த நாட்களில் கொரோனா பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள்.

கொரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாம். நாம் கொரோனா நோயைத் தோற்கடிப்போம். இந்த நோய்த்தொற்று உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காதீர்கள்.

நம்மிடம் சமீபத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த மருத்துவக் கருவிகளும் மருந்துகளும் உள்ளன. நம்மால் இந்த நோய்த்தொற்றை எளிதாகக் கையாள முடியும்.

கடந்த இரண்டு நாட்களாகவே நான் மிகவும் உற்சாகமாக, இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல புத்துணர்வாக உணர்கிறேன். மீண்டும் நாட்டுக்கான பணிகளைத் தொடங்குவோம்.

கொரோனாவால் முடங்கிப் போக வேண்டாம். இதற்கான தடுப்புமருந்துகளை நாம் விரைவில் உற்பத்தி செய்வோம்.” எனக் கூறியிருக்கிறார்.

மற்றுமொரு ட்வீட்டில் ட்ரம்ப் விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் இதழில் பத்திரிகையாளர் மிராண்டா டெவின் எழுதியுள்ள கட்டுரையில்,

“ஜோ பிடன் போல இந்த சைனீஸ் வைரச்-க்குப் பயந்துகொண்டு ஐந்து மாத காலம் அதிபர் ட்ரம்ப் தனிமைப்படுத்திக்கொண்டு பதுங்கியிருந்தால், உலகின் வலிமை மிக்க நாடான அமெரிக்கா பேரழிவைச் சந்தித்திருக்கும்.

 

அதிபர் ட்ரம்ப் மீண்டும் தேர்தல் பிரச்சாரக் களத்துக்குத் திரும்பி வரும்போது ஜனநாயகவாதிகளின் கீழ்த்தரமான தந்திரங்களையும் இந்த சைனீஸ் வைரஸையும் எதிர்கொண்ட, வீழ்த்த முடியாத நாயகனாகத் திகழ்வார்.” எனக் கூறியுள்ளார்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதும் முகக்கவசத்தைக் கழற்றியது குறித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் என்சிபி செய்தித் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,

”முகக்கவசம் அணிவது கட்டாயம். அது நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, உயிர்களைக் காக்க உதவுகிறது. ட்ரம்ப்பின் செயல்கள் அமெரிக்கர்களுக்குத் தவறான முன் உதாரணமாகக்கூடும்.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதனால் உயிரிழந்துள்ளார்கள். கொரோனாவைப் பெரிதாகக் கொள்ள வேண்டாம் என்று அவர் சொல்கிறார்.

கொரோனா பேரழிவு எல்லா நாடுகளிலும் பரவி வரும் தீவிர நோய்த்தொற்று. கொரோனா நோய்த்தொற்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று யாரும் எண்ணவிட வேண்டாம்.” என்று ஜோ பிடன் எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்