Aran Sei

அமெரிக்க அதிபர் டிரம்ப் – கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம் சாட்டி பதவி நீக்க தீர்மானம்

மெரிக்க அதிபர் டிரம்ப், சென்ற வாரம் புதன் கிழமை தலைநகர் வாஷிங்டனில் கிளர்ச்சி செய்யும்படி ஒரு கும்பலை தூண்டி விட்டதாக குற்றம் சாட்டும் பதவிநீக்க தீர்மானத்தை, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்துள்ளனர் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டாவது முறை பதவிநீக்க தீர்மானத்தை எதிர்கொள்ளும் ஒரே அதிபர் ஆகிறார், டிரம்ப்.

டிசம்பர் 2019-ல் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, அது பிப்ரவரி 2020-ல் மேலவையில் தோற்கடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா – வன்முறையைத் தூண்டிய அதிபர் டிரம்பை உடனடியாக பதவி நீக்கக் கோரும் எதிர்க்கட்சியினர்

திங்கள் அன்று, அமெரிக்க அரசியல் சட்டத்தின் 25-வது திருத்தத்தின் கீழ், அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்குவதற்கு உதவும்படி துணை அதிபர் மைக் பென்ஸ்-ஐ கேட்டுக் கொள்ளும் தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது.

அந்தத் திருத்தம், மிக மோசமான நிலைமைகளில் ஒரு அதிபரை அமைச்சரவை உறுப்பினர்கள் நீக்குவதற்கான வழிமுறைகளை தருகிறது.

ஆனால், சென்ற வாரம் நடந்த நாடாளுமன்ற வன்முறை தாக்குதல் வரை, அதிபர் டிரம்பின் தீவிர விசுவாசியாக இருந்த மைக் பென்ஸ், அத்தகைய நடவடிக்கையை ஆதரிக்000கப் போவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்திருந்த இந்தத் தீர்மானத்தை, டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், தடுத்து விட்டனர் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பதவிநீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம், பிரதிநிதிகள் சபையில் நாளை (புதன்கிழமை) நடைபெறும். பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அது நாடாளுமன்ற மேலவையான செனட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சென்ற வாரம், அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை இறுதி செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத் தொடரைக் கலைக்கும் வகையில், நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்

தேர்தல் முடிவுகளை இறுதி செய்து அறிவிக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தை தடுத்து சீர்குலைக்கும் முயற்சியின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கொலை தாக்குதல் நடத்தும் நிலை இருந்தது என்பதைக் காட்டும் புதிய வீடியோ ஒன்று காட்டுவதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, அவரது ஆதரவான கும்பல் மத்தியில் உரையாற்றிய அதிபர் டிரம்ப் “கடுமையாக சண்டை போடுங்கள்” என்று பேசியிருந்தார். கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோற்றுப் போன அதிபர் டிரம்ப், தேர்தல் முடிவுகளை எப்படியாவது மாற்றி விடுவது என்று முயற்சி செய்து வந்தார்.

அந்த முடிவுகளின்படி, ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ம் தேதி அதிபர் பதவியை ஏற்கவுள்ளார். டிரம்பின் பதவிக்காலம் அன்று முடிவடைகிறது.

அடுத்த வாரம் ஜோ பைடன் பதவி ஏற்பது மேலும் வன்முறையின்றி நடப்பதை உறுதி செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது தொடர்பான ஏற்பாடுகளை ஒரு வாரம் முன்னதாகவே நாளை முதல் தொடங்கவிருப்பதாக அமெரிக்க இரகசிய பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்துள்ள, அதிபரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, போதுமான வாக்குகள் உள்ளன என்று அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டேவிட் சிசிலைன் ட்வீட் செய்துள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்த வழக்கு மேலவையில் (செனட்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அங்கு அது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

இப்போது, மேலவை கூட்டம் புதிய அதிபர் பதவி ஏற்பது வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கார்டியன் செய்தி கூறுகிறது. டிரம்பின் பதவிக் காலம் முடிந்த பிறகு, அவர் மீதான பதவி நீக்க வழக்கு மேலவையில் உறுதி செய்யப்பட்டால் அவரை எதிர்காலத்தில் எந்த ஒரு அரசியல் சட்ட பதவியையும் வகிப்பதிலிருந்து மேலவை தடை செய்ய முடியும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்