Aran Sei

டிரம்பின் 2016-ம் ஆண்டு தேர்தல்: நியாயமான வெற்றியா?

Image Credits: WSJ

டொனால்ட் டிரம்பின் 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் குழு லட்சக்கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வாக்களிப்பதில் இருந்து தடுத்ததாக, லண்டனின் சேனல் 4 நியூஸ் குறிப்பிடுகிறது. முகநூலில் தவறான விளம்பரங்களைக் கொண்டு அவர்களை குறிவைத்தது இந்த புலனாய்வு மூலம் தெரியவந்துள்ளது.

2016-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், டிரம்புக்காக வேலை செய்த டிஜிட்டல் குழு, தரவுகளை பயன்படுத்தி வாக்காளர்களை எட்டு வகை ‘இலக்குகளாக’ பிரிந்ததும், அவர்களுக்காக வெவ்வேறு வகை விளம்பரங்களை தயாரித்து குறிவைத்ததும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் 35 லட்சம் ஆப்பிரிக்க அமெரிக்க வாக்காளர்கள் “தடுக்கப்பட வேண்டியவர்கள்” என்று வகைப்படுத்தப்பட்டனர் – அதாவது, டிரம்புக்கு வாக்களிக்க வாய்ப்பில்லாத வாக்காளர்கள், ஆகையால் வாக்களிப்பதில் இருந்து தடுக்க வேண்டிய வாக்காளர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டனர்.

டிரம்பின் பிரச்சார குழு, ஆப்பிரிக்க அமெரிக்க வாக்காளர்கள், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவாக வாக்களிப்பதை தடுக்க முயன்றதாக சேனல் 4 குற்றம் சாட்டியுள்ளது. இனப் பிரச்சினைகளில் ஹிலாரியின் நடவடிக்கைகளைத் தவறாகக் திரித்து காட்டும் விளம்பரங்களின் மூலம் இவர்களை குறிவைத்ததாக தெரியவந்துள்ளது.

டிரம்பின் பிரச்சாரக் குழுவினர் சேனல் 4-ன் இச்செய்தியை மறுத்துள்ளனர். “இது போலிச் செய்தி” என்று டிரம்பின் தகவல் தொடர்பு இயக்குனர் டிம் முர்டாக் கூறியுள்ளார். “ஜனாதிபதி டிரம்ப் ஆப்பிரிக்க அமெரிக்க வாக்காளர்களுடன் நம்பிக்கை அடிப்படையிலான உறவை உருவாக்கியுள்ளார்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே முகநூலில் தவறான தகவல்களும், விளம்பரங்களும் பரவுகின்றன எனும் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. டிரம்புக்கான ஆப்பிரிக்க அமெரிக்க வாக்காளர்களிடையேயான ஆதரவு 2020-ல் மீண்டும் ஒற்றை இலக்க சதவீதம் என்ற மோசமான நிலையில் இருக்கிறார்.

கிட்டத்தட்ட 20 கோடி அமெரிக்க வாக்காளர் தொடர்பான தரவுகளின் தொகுப்பை சேனல் 4 செய்தி பெற்றது. இதில் போட்டி நிலவரம் இழுபறியாக இருந்த 16 முக்கிய மாநிலங்களில் ‘தடுக்கப்பட வேண்டியவர்கள்’ பட்டியலில் விகிதாச்சார ரீதியில் அதிகமாக கருப்பின மக்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவற்றில் சில மாநிலங்களில் டிரம்ப் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

ஜார்ஜியாவில் 32% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் 61% ‘தடுக்கப்பட வேண்டியவர்கள்’ பிரிவில் உள்ளனர். வட கரோலினாவில் 22% மட்டுமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இருப்பினும் 46% இந்த பிரிவில் இணைக்கப்பட்டனர். விஸ்கான்சினில் 5.4% மட்டுமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இருக்கிறார்கள், இருந்தாலும் 17% ‘தடுப்பு’ பிரிவில் இணைக்கப்பட்டன.

‘தடுக்கப்பட வேண்டியவர்கள்’ பிரிவில் இணைக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்பது இந்த விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அக்டோபர் 2016 இல், ட்ரம்பின் குழு ஹிலாரி கிளின்டனின் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை குறைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க வானொலி நிலையங்களில் விளம்பரங்களை ஒலிபரப்பத் தொடங்கியது. 1996-ல் ஹிலாரி கிளின்டன் ‘கறுப்பின ஆண்கள் “சூப்பர் வேட்டைக்காரர்கள்”‘ என்று கூறிய கருத்தை சுட்டிக்காட்டும் வகையில் இந்த விளம்பரங்கள் அமைந்திருந்தன.

இந்தப் பிரச்சாரம் முகநூலில் “தவறான பதிவுகள்” மூலம் ஆப்பிரிக்க அமெரிக்க வாக்காளர்களை குறிவைத்தது – பொதுவில் வெளியாகாத இந்தப் பதிவுகள் யாருக்குக் காட்டப்படுகின்றன என்பதை இப்பிரச்சாரக் குழு கட்டுப்படுத்தியது.

நன்றி : theprint.in

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்