Aran Sei

‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்

லகெங்கிலும் உள்ள நாடுகளின் தலைவர்கள் புதன்கிழமை அன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மாநகரில் ஏற்பட்ட கொந்தளிப்பு தொடர்பாக அதிர்ச்சியுடனும் அதிருப்தியுடனும் எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் இவற்றை “அதிர்ச்சியூட்டும் காட்சிகள்” என்று அழைத்து கண்டனம் செய்துள்ளார். “ஜனநாயக ரீதியான அதிபர் தேர்தலின் முடிவு மதிக்கப்பட வேண்டும்” என்று நேட்டோ பொதுச் செயலாளரும் முன்னாள் நார்வே பிரதமருமான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், “இந்த கொடூரமான காட்சிகளை” கண்டித்து “உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று எச்சரித்து ட்வீட் செய்துள்ளார்

ஐரிஷ் தாவோசீச் மைக்கேல் மார்ட்டின்: “ஐரிஷ் மக்களுக்கு அமெரிக்காவுடன் ஆழமான தொடர்பு உள்ளது, இது பல தலைமுறைகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. என்னைப் போலவே பலரும் வாஷிங்டன் மாநகரில் இருந்து வெளியாகும் காட்சிகளை மிகுந்த அக்கறையுடனும் திகைப்புடனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், “தூண்டிவிடும் பேச்சுகள் வன்முறைச் செயல்களாக மாறும் என்பது ஜெர்மன் ரைஷ்டாகின் [ஹிட்லர் ஆட்சியில்] படிகளில், இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில்.” நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் “அமெரிக்க வாக்காளர்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஜனநாயகத்தை மிதித்துத் துவைப்பதை நிறுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு ட்ரையன்: “அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறையானது ஜனநாயகத்தின் மீதான கடுமையான தாக்குதல் ஆகும். அதை நான் கண்டிக்கிறேன். அமெரிக்க மக்களின் விருப்பமும் வாக்குகளும் மதிக்கப்பட வேண்டும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் “அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த இழிவான காட்சிகளுக்கு” கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா உலகெங்கிலும் ஜனநாயகத்தை ஆதரித்து நிற்கிறது, இப்போது அமைதியான, ஒழுங்கான அதிகார மாற்றம் நடக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்: “அமெரிக்கா நியாயமாகவே தனது ஜனநாயகத்தில் பெருமிதம் கொள்கிறது, சட்டபூர்வமான, சரியான அதிகார மாற்றத்தை சீர்குலைப்பதற்கான இந்த வன்முறை முயற்சிகளுக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் இந்தக் காட்சிகளை “முற்றிலும் திகிலூட்டுவை” என்றும் “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றும் அழைத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுக்கான தூதுக்குழுவின் தலைவராக இருக்கும், போலந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ராடெக் சிகோர்ஸ்கி, “அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தின் கீழ், டொனால்ட் டிரம்பை மனநிலை சரியில்லாதவர் என்று உடனடியாக அறிவித்து அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தக் காட்சிகள் “மிகவும் வருத்தம்” அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். “இந்த வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம், அமெரிக்காவின் மிகச்சிறந்த ஜனநாயக பாரம்பரியத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிடம் அரசு அதிகாரம் அமைதியான வழியில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, வான்கூவர் வானொலி நிலையமான நியூஸ் 1130 இடம் : “நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என்பது வெளிப்படையானது, நிலைமையை நிமிடம் கண்காணித்து வருகிறோம். அமெரிக்க ஜனநாயக நிறுவனங்கள் வலுவானவை என்று நான் கருதுகிறேன், விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்கு வரும்.” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் : “அமெரிக்க நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். வாஷிங்டன் மாநகரில் இன்றிரவு நிகழ்ந்த காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனிடம் அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பது உறுதி செய்யப்படும்என்று நாங்கள் நம்புகிறோம். ” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஸ்பெயினின் பிரதமர், பெட்ரோ சான்செஸ் : “வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து வரும் செய்திகளை நான் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமை மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஜோ பைடனின் அதிபர் பதவிக் காலம் அமெரிக்க மக்களை ஒன்றிணைக்கும், பதற்றத்தின் காலத்தை அமெரிக்க கடந்து செல்லும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், “ஜனநாயகத்தில் வாக்களிப்பது மக்களின் உரிமை, அவர்களின் குரலைக் கேட்டு, பின்னர் அந்த முடிவை அமைதியாக அமல்படுத்துவது, ஒருபோதும் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்படக் கூடாது. இன்றைய நிகழ்வுகளால் நம்மைப் போலவே பேரழிவிற்குள்ளான அனைவரையும் நாம் நினைவில் கொள்கிறோம். ஜனநாயகம் மேலோங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” என்று கூறியுள்ளார்.

கொலம்பியாவின் ஜனாதிபதி ஐவன் டியூக் : “அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்வாளர் வாக்கு எண்ணிக்கையில் இன்று நிகழ்ந்த வன்முறைச் செயல்களை நாங்கள் நிராகரிக்கிறோம், காங்கிரஸின் உறுப்பினர்களுக்கும் அனைத்து அமெரிக்க நிறுவனங்களுக்கும் எனது ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

‘இந்த நாள் வரலாற்றில் இடம் பெறும்’

ரஷ்யாவின் ஐக்கிய நாடுகளுக்கான துணைத் தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி வாஷிங்டனில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக “மைதான பாணியிலான படங்கள் வாஷிங்டனில் இருந்து வருகின்றன,” என்று ட்வீட் செய்துள்ளார். 2014 ல் உக்ரேனில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டங்களில், ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார்,

“விக்டோரியா நூலண்ட் நடத்திய நாடகத்தைப் போல, யாராவது அமெரிக்க ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவுப் பண்டங்களை விநியோகிப்பார்களா என்று சிலர் கேட்கிறார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார். 2013-ம்  ஆண்டில், ​​அப்போதைய அமெரிக்க உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் விக்டோரியா நூலண்ட் உக்ரைனுக்கு சென்ற போது அரசை எதிர்த்து போராடிய எதிர்ப்பாளர்களுக்கு உணவு வழங்கி ஆதரவு தெரிவித்திருந்தார்.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வாஷிங்டனில் நடந்த நிகழ்வுகள் “கவலை அளிப்பதாக” அறிக்கை வெளியிட்டுள்ளது. “அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடக்கும் உள்நாட்டு நிகழ்வுகளை நாங்கள் கவலையுடன் கவனித்து வருகிறோம், அந்த நிகழ்வுகள் இன்று அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்ததில் முடிந்துள்ளது”, அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (OAS) சமீபத்திய தேர்தல் முடிவுகளை மறுக்கும் எதிர்ப்பாளர்களால்” நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நிராகரிப்பதாகக் கூறியுள்ளது. “அரசு நிறுவனங்களின் சுயேச்சை ஜனநாயகத்தின் தூணாக உள்ளது. அவை எந்த வித அழுத்தமும் இன்றி செயல்பட வேண்டும்,” என்று அது அறிக்கை வெளியிட்டுள்ளது. “நிறுவனங்களுக்கு எதிராக வன்முறையையும் காழ்ப்புணர்ச்சியையும் பயன்படுத்துவது ஜனநாயக செயல்பாட்டிற்கு எதிரான கடுமையான தாக்குதலாகும்.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளின் நீண்ட இரத்தக் களறியான வரலாற்றைக் கொண்டுள்ள தென் அமெரிக்க நாடுகளில் பலர் புதன்கிழமை அமெரிக்க தலைநகரில் நடந்த கலவரத்தை அதே போனற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியாக சித்தரித்தனர்.

“இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி … ஜனநாயகத்தின் மீதான தெளிவான, முற்றிலும் வெட்கக்கேடான தாக்குதல்” என்று பிரேசிலின் குளோபோநியூஸ் தொலைக்காட்சியில் ஒரு செய்தியாளர் கூறினார்.

அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்: “வாஷிங்டன் மாநகரத்தில் இன்று நிகழ்ந்த கடுமையான வன்முறைச் செயல்களையும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பையும் நாங்கள் கண்டிக்கிறோம். மக்களின் விருப்பத்தை மதிக்கும் ஒரு அமைதியான ஆட்சி மாற்றம் அமெரிக்காவில் நிகழும் என்று நாங்கள் நம்புகிறோம், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு எங்கள் வலுவான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த முயற்சி செய்து வரும் நாடு வெனிசுலா. அமெரிக்காவில் நடக்கும் குழப்பங்கள் தொடர்பாக, வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம் “இந்த பரிதாபகரமான அத்தியாயத்தின் மூலம், அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்புக் கொள்கைகளால் பிற நாடுகளில் ஏற்படுத்திய குழப்பத்தை, இப்போது தான் எதிர்கொள்கிறது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

“இந்த வன்முறை நிகழ்வுகள் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்க மக்கள் இறுதியாக நிலைத்தன்மையும் சமூகநீதியும் அடங்கிய ஒரு புதிய பாதையை கண்டடைவார்கள் என்று வெனிசுலா நம்புகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வெனிசுலாவின் தலைமை அரசு வழக்கறிஞர் தாரெக் வில்லியம் சாப், பெட்லாம் “அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு எதிரான ஒரு சதித்திட்டம்” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பகிர்ந்துள்ளார்

பிரேசிலின் முக்கிய அரசியல் பார்வையாளரான எலியன் கான்டான்ஹேட் : “டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்துச் சிதறடிக்கிறார். இந்த நாள் வரலாற்றில் இடம் பெறும். வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டிய ஒரு அதிபர்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

2006-ம் ஆண்டில் தனது சொந்த நாட்டில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்திய பிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராம, “உலகெங்கிலும் உள்ள ஜனநாயகங்களுக்கு அவமரியாதை”, என்றும் “அமெரிக்கா விரைவில் இந்த இந்த அசிங்கமான அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும்” என்றும் கூறியுள்ளார்.

எல்லோருமே இந்த டிரம்ப் ஆதரவு வன்முறை கும்பலின் செயல்களை கண்டிக்கவில்லை

டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, அமெரிக்க அதிபர் தேர்தல் மோசடி தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

வாஷிங்டனில் நிகழ்ந்த குழப்பமான காட்சிகளைப் பற்றி கேட்ட தனது ஆதரவாளரிடம் : “நான் இன்று நடந்த எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் டிரம்புக்கு ஆதரவாக உள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா? எனவே எனது பதில் உங்களுக்கு ஏற்கனவே தெரியும்” என்று போல்சனாரோ கூறியுள்ளார்

“தேர்தல் மோசடி பற்றிய தகவல்கள், நிறைய வந்திருந்தன,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால் பிரேசிலின் நாடாளுமன்ற கீழவையின் தலைவரான ரோட்ரிகோ மியா, 2022-ல் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முயற்சியில் போல்சனாரோ தோல்வியுற்றால், பிரேசிலில் என்ன நடக்கக்கூடும் என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை அமெரிக்காவில் அரங்கேறும் “பயங்கரமான அத்தியாயம்” அளிக்கிறது என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

தி கார்டியன் நாளிதழில் வெளியான தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்