Aran Sei

வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?

Image Credit : thewire.in

ரு வாரத்திற்கு முன்பு, நாடு தழுவிய சதித் திட்டத்தால் தேர்தலை ‘திருடி’ விட்டதாக, அடிப்படை இல்லாமல் தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கும் தங்கள் தவறான மாபெரும் தலைவருக்கு, ஆதரவாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் தெருக்களில் பேரணிகளை நடத்தியும், நடனமாடியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

“முதுகில் குத்தி விட்டார்கள்” என்ற அண்டப்புளுகை இன்னும் 70% குடியரசுக் கட்சி வாக்காளர்கள்‌ நம்பிக்கொண்டிருப்பதால், இந்த அரசியல் இயக்கத்துக்கு இன்னும் ஆதரவான அலை வீசிக்கொண்டிருக்கிறது. மக்களை திசை திருப்புவதில் நவீன வித்தகராகத் திகழ்ந்த டிரம்ப், இப்போதைக்குத் தேசிய அரசியலிலிருந்து விலகும் எண்ணத்தில் இல்லை. அவர் அரசையும், அமெரிக்கச் சமூகத்தையும் தகர்த்து வருகிறார்.

ஜோ பைடனின் வெற்றி டிரம்பின் திட்டங்களைப் பாதித்து மட்டுப் படுத்திவிட்டது. ஆனால் இன்னும் வரப் போகும் கணிசமான காலத்திற்கு டிரம்ப்வாதம் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும். எதிர்பார்க்கும் இயல்புநிலை திரும்பும் என்று பலரும் ஏங்கிக் கொண்டிருப்பதை அடைவதற்கு முனிவர்களின் பொறுமையும், கோடிக்கணக்கான மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவதும் அவசியம்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் - Image Credit : thewire.in
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் – Image Credit : thewire.in

அமெரிக்காவின் டிரம்ப் அதிர்ச்சி/பாசம் முடிவின்றித் தொடர்கிறது; தோற்றுப்போன டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு வாழ்த்துச் செல்ல மறுக்கிறார். டிரம்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள “பொதுச் சேவைகள் நிர்வாகம்”, ‘சட்டப்படியும்’, ‘நிகழ்வுகள்’ மற்றும் ‘உறுதியான செய்திகள்’ படியும், ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று விட்டதை தாமதமாகவேனும் அங்கீகரித்துள்ளது. உண்மைகள், விடாப்பிடியானவைதான்.

இருந்தாலும் மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா, அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களில் தக்க ஆதாரங்கள் இல்லாமலேயே டிரம்பின் சட்ட வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அடிப்படை இல்லாத சதி மற்றும் தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்த ஏராளமான வழக்குகளை நீதிமன்றங்கள் குப்பை எனத் தூக்கி எறிந்துவிட்டன. சட்ட நிறுவனங்கள் டிரம்பைக் கைவிட்டு விட்டன. சட்டத்தின் ஆட்சிக்கும், நடைமுறை சாட்சிகளுக்கும் அடிப்படையில் நேர்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துள்ள குடியரசுக்கட்சி ஆதரவு நீதிபதிகள் தங்களது சுயேச்சை நிலையை வெளிப்படுத்தி வருவதால் டிரம்பின் கண்களுக்குத் துரோகிகளாகத் தெரிகிறார்கள்.

மிச்சிகன் நீதிபதி, டிரம்ப் நாட்டின் ஒட்டு மொத்த வாக்காளர்களையும் இழிவு படுத்துவதாகவும், தேர்தலை திருட முயல்வதாகவும் நேரடியாகவே குற்றம் சாட்டினார். பொய் சாட்சி தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படி தவிர்க்க வேண்டும் என நன்கு அறிந்த டிரம்பின் தனி வழக்கறிஞர் ரூடி ஜிலியானி, பென்சில்வேனியா நீதிமன்றத்தில் ‘பழம்பெரும் கட்சி’ (GOP) என அழைக்கப்படும் குடியரசுக் கட்சியின் வழக்கில், தேர்தல் முறைகேடு நடந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக உறுதியாகக் கூற முடியாமல் தவிக்கிறார்.

இதனிடையே, 2020 தேர்தல்கள்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பாதுகாப்பாக நடந்த தேர்தல் என அறிவித்ததற்காக ஒன்றிய அரசின் தலைமைத் தேர்தல் பாதுகாப்பு அதிகாரி கிரிஸ் க்ரெப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிரம்பின், ‘உண்மைகள் அற்ற தனது முழு வெற்றி’ என்ற அனுமானத்தில் கிரிஸ் க்ரெப்பின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பிற்கு இடமே இல்லை.

ஜோ பைடனின் வெற்றி உரையைக் கேட்கும் ஆதரவாளர்கள் - Image Credit : thewire.in
ஜோ பைடனின் வெற்றி உரையைக் கேட்கும் ஆதரவாளர்கள் – Image Credit : thewire.in

ஜார்ஜியாவில் குடியரசுக் கட்சியின் மாநிலச் செயலாளர் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடந்ததாகக் கூறியுள்ள நிலையிலும், முடிவுகள் தொடர்பான சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையிலும், குடியரசுக் கட்சித் தலைவர்கள் டிரம்பின் இழிவான சட்ட சவால்களை ஆதரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தீவிர வலதுசாரியான டிரம்பைத் திருப்திப்படுத்த, அவரது பழைமைவாத குடியரசுக் கட்சியின் முக்கியப் பிரிவினர் அவரை ஆதரிப்பது, குழப்பம், திசை திருப்புதல், கலவரங்கள் ஆகியவற்றை விதைக்கவும், பைடனிடம் ஆட்சிப் பொறுப்பை மாற்றிக்கொடுப்பதற்குத் தொடர்ந்து தடையை உண்டாக்கவும், அதன் மூலம் அமெரிக்காவை மேலும் பிளவுபடுத்தவும், பிரிவினையைத் தூண்டி நாட்டை நிர்வகிக்க இயலாமல் செய்யவும் டிரம்பை அனுமதித்துள்ளது.

சில ஆய்வாளர்கள் டிரம்ப் ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்வதாகக் கூறுகின்றனர். அதனை திறமையாக நிறைவேற்ற இயலாமல் இருந்தாலும், அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். டிரம்பின் தோல்வியுறும் அரசு திட்டம் – அல்லது அரசு நிர்வாகத்தைச் சீர்குலைப்பது- தொடர்ந்து நடந்து வருகின்றது.

டிரம்ப் என்ன செய்கிறார்?

டிரம்ப், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட, வெல்வதற்கு மேலும் மேலும் வாய்ப்பு குறைந்து செல்லும் சட்ட சவால்கள் மூலம் பதவியில் நீடிப்பதற்குத் திட்டமிடுகிறார் அல்லது தனது ஆதரவு வாக்காளர்களை அணி திரட்டி 2024 தேர்தலிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நிற்க அவர் முயற்சிக்கலாம், அல்லது பழம்பெரும் கட்சி (GOP) யின் “கிங் மேக்கராக” இருக்க விரும்பலாம். டிரம்ப் பதவியிலிருந்து விலகுவதைப் படிப்படியாகவே செய்விப்பதன் மூலம், ஜார்ஜியாவில் 2021 ஜனவரியில் நடைபெறவிருக்கும் இரண்டு செனட் இடங்களுக்கான தேர்தல் வரை தனது பரப்புரையை அவர் நடத்துவார் என்ற நம்பிக்கையில் குடியரசுக் கட்சி அவரது கரத்தைப் பலப்படுத்திக்கொண்டிருக்கலாம்.

குடியரசுக் கட்சி ஜார்ஜியாவில் தோல்வி அடைந்தால், செனட் சபையில் இரண்டு கட்சிகளும் 50-50 இடங்களைப் பெற்றிருக்கும். துணை அதிபரும், செனட் அவைத் தலைவருமான கமலா ஹாரிஸ் தீர்மானிக்கும் வாக்கைக் கொண்டிருப்பார். ஆனால் குடியரசுக் கட்சியின் தலைமை, குறிப்பாக 2024 தேர்தலில் போட்டியிட குறி வைத்திருக்கும் டெட் குரூஸ், மார்க்கோ ரூபியோ, ஜோஷ் ஹாவ்லே, இன்னும் பலரும்-மீண்டும் ஒரு டிரம்ப்வாத எதிர்ப்பைத் தூண்டி விடத் தயாராக இல்லை. டிரம்ப் பெற்ற ஏழு கோடியே நாற்பது லட்சம் வாக்குகள், கட்சிக்கு உள்ளும் புறமும் தன்னை சக்தி வாய்ந்த நபராகக் காட்டிக்கொள்ள அவருக்கு உதவும்.

எனவே, பைடன் பதவியேற்றதும் டிரம்ப் அரசியல் களத்திலிருந்து மறைந்து விடுவார் எனத் தோன்றவில்லை. டிரம்ப் வான்வழியாக, ஒரு தொலைக்காட்சி வலைப் பின்னலுடன் இணைந்து, அவரது மதக்குழு போன்ற தொண்டர்களின் போதகராகவும், தீவிர மற்றும் பாசிச வலதுசாரிகளை இணைக்கும் பசையாகத் தொடர்வார் என்று கூறலாம்.

நான் மதக் குழு போன்றவர்கள் என்று கூறியது கொஞ்சம் அவசரமானதாக இருக்கலாம்.

அவரது வாக்காளர்கள் தமது வேட்பாளருக்கு விசுவாசமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 2016-ல் பெற்றதை விட, இந்தத் தேர்தலில் டிரம்ப், ஒரு கோடியே பத்து லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் பெற்ற 7.4 கோடி வாக்குகளை யாரும் புறக்கணித்து விட முடியாது. பைடன் இந்தத் தேர்தலில் வெற்றி பெற எட்டுக் கோடி வாக்குகளைப் பெற வேண்டியிருந்தது. இது, இதுவரை எந்த அதிபர் தேர்தலையும் விட அதிகமானது. 1932-ல் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் பெற்றதை விட இது அதிகம்.
ஆனால் இறுதியில் ஒரு சில மாநிலங்களில், பெற்ற ஒப்பீட்டளவில் மிகக் குறைவான வாக்குகள்தான் ஜனநாயகக் கட்சியின் பக்கம் வெற்றியை ஈட்டியது.

இருந்தாலும், தேர்தலுக்குப் பின், புரூக்கிங்ஸ் நிறுவனம் கொடுத்துள்ள ஒரு அறிக்கை “மதக்குழு” போன்ற ஆதரவாளர்கள் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது. புரூக்கிங்க்ஸ் நாடு முழுவதும் ஒவ்வொரு வேட்பாளரும் வென்ற கவுன்டிகளின் எண்ணிக்கையையும், அவை அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கைகளில் பங்காற்றும் விகிதத்தையும் கணக்கிட்டது. டிரம்ப் 2500 கவுன்டிகளிலும், பிடேன் 477 கவுன்டிகளிலும் வென்றுள்ளனர்.

இனவாதத்திற்கு எதிரான போராட்டம் - Image Credit : thewire.in
இனவாதத்திற்கு எதிரான போராட்டம் – Image Credit : thewire.in

ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரங்களையும் மாநகரங்களையும் சேர்ந்தவர்கள். டிரம்பிற்கு வாக்களித்தவர்களில் மிக அதிகமானவர்கள் வெள்ளை இனத்தவர், நெருக்கம் குறைந்த, சிறிய கிராமப்புறங்களை, தொழில்வளர்ச்சி இல்லாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், டிரம்ப்பிற்கு வாக்களித்தவர்கள் (2500 கவுன்டிகள்) அமெரிக்காவின் 30% பொருளாதார நடவடிக்கைகளில் பங்களிப்பு செலுத்துபவர்கள். பைடனின் 477 கவுன்டிகளைச் சேர்ந்தவர்கள் 70% பங்களிப்பு செலுத்துகின்றனர்.

MAGA தொப்பி அணிந்த, கொடி ஏந்தி வந்த முரட்டுத்தனமான டிரம்ப்வாதிகள் என்ற சித்திரத்திற்கு மாறாக, டிரம்ப் வெற்றி பெற்ற, பெரும் எண்ணிக்கையிலான கவுன்டிகளின் சமுதாயங்களை விரக்தியில் இருப்பவை என்றே சித்திரிக்க முடியும். இந்தச் சமுதாயங்களில் மன அழுத்தம், தற்கொலை, போதைப் பொருட்கள் மற்றும் மது அடிமைத்தனம், குடும்ப மற்றும் காவல்துறை வன்முறை வீதங்கள் அதிகமாக உள்ளன.

அந்த அறிக்கை, “2020-ன் தேர்தல் வரைபடம் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த பெரிய, அடர்த்தியான, மாநகர கவுன்டிகளுக்கும், குடியரசுக் கட்சிக்கு வாக்களித்த பெரும்பாலும் சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புற கவுன்டிகளுக்குமிடையே மிகப்பெரும் பிளவைப் பிரதிபலிக்கிறது. நீல அமெரிக்காவும் சிவப்பு அமெரிக்காவும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட பொருளாதாரங்களைப் பிரதிபலிக்கின்றன. ஒன்று தொழில்முறை மற்றும் டிஜிட்டல் சேவைகளில் பணியாற்றும் கல்லூரிப் பட்டம் பெற்ற தொழிலாளர்களைக் கொண்டது, மற்றொன்று அதிகமாக வெள்ளை இனத்தவரைக் கொண்ட, குறைவான படிப்பும், “பாரம்பரிய” தொழில்களை அதிகமாக நம்பி இருப்பவர்களைக் கொண்டது.” என்று கூறுகிறது.

நிலைமை இதை விட மேலும் சிக்கலானது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்க நகரங்களில் மிக அதிகமான மன அழுத்தமும், தற்கொலைகளும், காவல்துறை வன்முறைகளும் நிகழ்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது: அமெரிக்க வாக்காளர்களுக்கிடையே பொருளாதார ரீதியாகவும், புவி அமைப்பு சார்ந்தும், இனப் பிரிவினை ரீதியாகவும் பிளவுகள் உள்ளன. அவை அமெரிக்கச் சமூக இணைப்பில் ஆழமான பிளவையும், சிதைவையும் வெளிப்படுத்துகின்றன.

இதனுடன் செய்திகளுக்கான எதிரெதிர் ஆதாரங்களையும் சேர்த்துப் பாருங்கள். குடியரசுக் கட்சியின் ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சிஎன்என், எம்எஸ்என்பிசி, ஏபிசி ஆகிய எதிரெதிர் செய்தி நிறுவனங்கள் அமெரிக்கச் சமூகத்தில் கடக்க முடியாத பிளவு ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க வாக்காளர்களின் மனச் சித்திரங்கள், அவர்களுக்கு இடையேயான பிளவை ஆழப்படுத்துகின்றன. மனதளவில், அவர்கள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு உண்மைகளை நம்புபவர்களாக வாழ்வதாகத் தோன்றுகிறது.

இது எல்லாவற்றின் பொருள் என்னவென்றால், செல்வந்தர்களின் ஆட்சி, எதேச்சதிகாரம், மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகள், இனவாதம், ஆதாரமற்ற உண்மைகள், தீவிரவாதம், மக்களாட்சிக்கு எதிரான கருத்துகள் ஆகியவற்றைக் கொண்ட, அரசியல் வேட்பாளராகவும், போர்த்தந்திரமாகவும், உத்தியாகவும் டிரம்ப் இன்னமும் உள்ளார் என்பதே.

இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் தன்னால் இயன்ற அளவு ஆட்சி மாற்றத்தைச் சீர்குலைப்பதில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும், ஜனநாயகக் கட்சியினர், ஜனவரி 20, 2021 அன்று ஆட்சி மாற்றத்திற்கான குழுக்களையும், பணிக் குழுக்களையும் அமைப்பதில் முனைப்பாக உள்ளனர்.

பொது எதிரி இல்லாத நிலையில், ஜனநாயகக் கட்சியில் அதன் சொந்த இடது- வலது குழுவாதம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பைடன் மிதவாத குடியரசுக் கட்சியினரை தன் வசம் இழுக்க முயல்கிறார்.

கொரோனா பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மில்லெனியல்கள் (2K கிட்ஸ்), இனவாத எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை ஜனநாயகக் கட்சி நிறைவேற்ற முடியுமா என்பது ஒரு விடை தெரியாத கேள்வி. தெருப் போராட்டங்களின் அரசியலைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் களம் இன்னும் அடிப்படையில் பிளவுபட்ட சமூகத்தின் பிரதிபலிப்பாக, வெடித்தெழக் காத்திருக்கும் எரிமலையாக இருக்கிறது. பைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மோசடியானது என்று வாதிடும் கிளர்ச்சியுற்ற தீவிர வலது சாரிகள் எதிர்க்கட்சிகளால் திரட்டப்படுகின்றனர்.

அவர்கள் சதித்திட்ட கோட்பாடுகளைப் பரப்பவும், அரசியல் அச்சுறுத்தல்களையும், வன்முறைகளையும் இப்போதுள்ளதை விட அதிக வலுவான பன்னாட்டுத் தொடர்புகளுடனும், திட்டங்களுடனும் செயல்படுத்தலாம். உள்நாட்டில் அவர்களது வன்முறை அதிபரின் மாளிகையின் உந்துதலால் இந்த ஆண்டு தீவிரமாகி உள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்: தீர்மானிக்க இயலாத, நம்பிக்கையில்லாத நிலைமைகள் மற்றும் டிரம்ப் வாதத்தால் விளையும் நாச வேலைகள் எல்லை தாண்டியவை. இருந்தாலும், கற்பனையான, ‘இயல்புநிலை’ நிலவிய பொற்காலத்துக்குத் திரும்பிப் போவதற்கு வாய்ப்பு மிகக் குறைவே.

நீதிமன்றங்கள், மாநில, கவுன்டி மட்ட தேர்தல் அதிகாரிகள், தீர்மானமான பொதுமக்கள் கருத்து ஆகியவற்றின் மூலம் அமெரிக்க அரசியல் முறை ஒரு மிகப்பெரிய அழுத்தச் சோதனையில், மயிரிழை அளவில் தப்பி விட்டதாகத் தோன்றுகிறது.

– இந்திரஜித் பர்மார்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்