Aran Sei

டைம் இதழின் தலைசிறந்த சிறுமி விருது – இளம் விஞ்ஞானி கீதாஞ்சலி ராவ்

Image Credits: TIME

ந்திய வம்சாவழியை சேர்ந்த கீதாஞ்சலி ராவ் எனும் 15 வயது சிறுமி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இளம் விஞ்ஞானியான இவரை டைம்ஸ் இதழ் ‘இந்த ஆண்டின் சிறந்த சிறுமியாக’ (Kid of the Year) தேர்வு செய்து உள்ளது. அந்த இதழ், ஒரு சிறுமியைத் தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் இதழ் அரசியல், அறிவியல், இலக்கியம், சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து கவுரவிக்கும். இந்த ஆண்டு தொழில்நுட்பத் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கொலராடா மாகாணத்தில் உள்ள லோன்டிரீ நகரத்தில் வசித்து வருகிறார்.

இந்த ஆண்டுக்கான போட்டிக் களத்தில் 8 முதல் 16 வயதுக்கு உள்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட சிறார்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இறுதியில் கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாசுபட்ட குடிநீரை தூய்மையாக்குவது, போதைப்பொருட்களுக்கு அடிமை, இணையவழி தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகளை இவர் கண்டுபிடித்துள்ளார்.

டைம்ஸ் இதழின் சிறப்பு பதிப்புக்காக நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ஏஞ்சலினா ஜோலிக்கு காணொலி வழியாகக் கீதாஞ்சலி ராவ் பேட்டியளித்துள்ளார். அப்போது, ஒரு பணியை மேற்கொள்ளும் போது அவர் எவ்வாறு செயல்படுவர் என்பது குறித்து பேசிய கீதாஞ்சலி ராவ், “கவனித்து, தகவல்களை சேகரித்து, ஆராய்ச்சி செய்து, அதை உருவாக்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு சிக்கலையும் சரிசெய்ய முயற்சிக்காதீர்கள், உங்களை உற்சாகப்படுத்தும் ஒன்றில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

நீங்கள் ஒரு சராசரி விஞ்ஞானியைப் போல் தோற்றமளிக்கவில்லை எனும் ஏஞ்சலினா ஜோலியின் கேள்விக்குப் பதிலளித்த கீதாஞ்சலி ராவ், “நான் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் வெள்ளையர்கள் தான் விஞ்ஞானிகளாகக் காண்பிக்கப்படுகிறார்கள். இது ஏதோ, வயது, பாலினம் மற்றும் தோலின் நிறத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒன்றை போல் உள்ளது. இதை நான் மாற்ற விரும்பினேன்.” என்றுகூறினார்.

“என்னால் இதைச் செய்ய முடியும் என்றால் நீங்களும் இதைச் செய்யலாம். யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்