Aran Sei

‘நான் சாமுவேல்’ – கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள்

Image Credits: France 24

யங்கரவாத தாக்குதல்களால் ஏற்கெனவே அதிர்ச்சியில் உள்ள பிரான்ஸ் நாட்டில் மதவாத பயங்கரவாதி ஒருவரால் ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பெரு நகரங்களிலும் புற நகர்ப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

‘தி கார்டியனில்’ வெளியான செய்தியின்படி, 47 வயதான சாமுவேல் பேட்டி பாரிஸிலிருந்து வடமேற்கில் 20 மைல் தொலைவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். சமீபத்தில் அவர், 2015-ம் ஆண்டில் சார்லி ஹெப்டோ வெளியிட்டிருந்த முகமது நபி பற்றிய கேலிச்சித்திரத்தை, கருத்துச் சுதந்திரம் குறித்த வகுப்பு விவாதத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்குக் காட்டியுள்ளார்.

கேலிச்சித்திரத்தைக் காண்பிப்பதற்கு முன் இஸ்லாமிய மாணவர்களின் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பாமல் அவர்களை வகுப்பு அறையை விட்டு வெளியேறும்படி சாமுவேல் கூறியதாகப் பிற ஆசிரியர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

கார்ட்டூன்களை தனது வகுப்பு மாணவர்களுக்குக் காண்பித்ததற்காகச் சமூக வலைத்தளங்களில் பல அச்சுறுத்தல்களுக்கு ஆசிரியர் சாமுவேல் உள்ளானதாக பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு அரசு வழக்கறிஞர் ஜீன்-பிரான்சுவா ரிக்கார்ட் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து அப்துல்லாக் அன்சோரோவ் என்ற 18 வயதான நபர் சாமுவேல் பணி புரிந்த பள்ளிக்கு வெளியே சாமுவேலை 30 செமீ நீளமான கசாப்புக் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய அப்துல்லாக் அன்சோரோவைக் காவலர்கள் சுற்றி வளைத்தபோது அவர் காவலர்களை தாக்க முயற்சித்துள்ளார். ஆகையால், அவரை காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

அப்துல்லாக் அன்சோரோ செச்சென்யாவைச் சேர்ந்த பெற்றோருக்கு மாஸ்கோவில் பிறந்தவர். அவருக்கு ஆறு வயதாகும் போது அவர்கள் பிரான்சுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அவரது குடும்பத்துக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.

சுதந்திரப் பேச்சு உரிமைக்கு ஆதரவாகவும் சாமுவேல் பேட்டிக்கு அஞ்சலி செலுத்தவும் பாரிசிலும் பிரான்சின் பிற முக்கிய நகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கொலைத் தாக்குதல் சார்லி ஹெப்டோ படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு நடத்தப்படும் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் ஆகும். நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக அந்தப் பத்திரிகை கார்ட்டூன்களை மறுபடியும் வெளியிட்டிருந்தது. சென்ற மாதம் ஒரு பாகிஸ்தானி இளைஞர் சார்லி ஹெப்டோவின் முன்னாள் அலுவலகத்துக்கு வெளியே இரண்டு பேரைக் கத்தியால் தாக்கிக் காயப்படுத்தினார்.

முகமது நபி குறித்த கார்ட்டூன்களை வெளியிட்ட பிரெஞ்சு அரசியல் கேலிப் பத்திரிகையான சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர் என்பது நினைவூகூரத்தக்கது.

“பேட்டி தனது வேலையைத்தான் செய்தார். அதைச் செய்யும் போது மரியாதையுடன் செய்திருக்கிறார். இந்தப் பயங்கரவாதிகள் சமய உணர்வு இல்லாதவர்கள், அதிகாரத்தைக் கைப்பற்ற மதத்தைப் பயன்படுத்துகின்றனர்” என்று லியோன் மசூதியின் மூத்த தலைவரும், ஒரு மூத்த முஸ்லிம் தலைவருமான கமல் கப்தானே கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னணி அரசியல்வாதிகள், சமூக உரிமை அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பாரிஸில் உள்ள ‘குடியரசு சதுக்கத்தில்’ அணிவகுத்து, “நான் சாமுவேல்” என்று பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தினர்.

இது, 2015-ம் ஆண்டு சார்லி ஹெப்டோவின் அலுவலகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 12 பேருக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது எழுப்பிய “நான் சார்லி” என்ற முழக்கத்தின் எதிரொலியாகும்.

மற்றவர்கள் “சிந்தனையில் சர்வாதிகாரம் வேண்டாம்”, “நான் ஒரு ஆசிரியர்” மற்றும் “துக்கத்தில் உள்ள பள்ளிகள்” போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். கைதட்டும் சாதனைகளுக்கு இடையில், மற்றவர்கள் “கருத்துச் சுதந்திரம், கற்பிப்பதற்கான சுதந்திரம்” என்று முழங்கினர் அல்லது “மார்சே கீதத்தை” பாடினர்.

ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னர், கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் “அனைவரும் நமது ஆசிரியர்களை ஆதரிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார், “ஆதரவும் ஒற்றுமையும் இன்றியமையாதது” என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் எங்கள் வரலாற்றின் விளைவு: சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற மதிப்புகள் வெறும் வார்த்தைகளாக இருக்க முடியாது” என்று பாரிஸில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பிரெஞ்சு தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். “நாம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது அதற்கு உதவுகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்