Aran Sei

பிரெஞ்சு ஆசிரியர் தலை துண்டிப்பு – மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலா?

Image Credits: Scroll

ண்மையில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்குக் காட்டிய பிரெஞ்சு ஆசிரியர் தனது பள்ளிக்கு வெளியே தலை துண்டிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதனை ஒரு “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கூறியுள்ளார்.

ஆசிரியரைத் தாக்கிய நபரை (அடையாளம் வெளியிடப்படவில்லை) கைது செய்ய முயன்றபோது, காவலர்கள் சுட்டதில் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்துள்ளார் என்று ‘தி இந்து‘வில் செய்தி வெளியாகியுள்ளது.

சார்லி ஹெப்டோ என்ற வார இதழ் மற்றும் தலைநகரில் உள்ள யூதச் சந்தை மீதான 2015 ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், பிரான்ஸில் ஒரு இஸ்லாமிய வன்முறை அலை உருவானது.

பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர்கள் தாங்கள் இந்தத் தாக்குதலை “ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கொலை” என்று கருதுவதாகக் கூறியுள்ளனர்.

பிரெஞ்சு தலைநகரின் மையத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்குப் புறநகர்ப் பகுதியான கான்ஃப்லான்ஸ் செயிண்ட்-ஹொனொரைனில் ஆசிரியர் பணிபுரிந்த நடுநிலைப் பள்ளிக்கு அருகில், மாலை 5:00 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தக் கொலை “ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலின் அடையாளங்களைக் கொண்டுள்ளது” என்று இம்மானுவேல் மக்ரோன் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கூறியுள்ளார்.

“முழு தேசமும்” ஆசிரியர்களைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகவும், “தெளிவற்ற தன்மை வெல்லாது” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

18 வயது கீழ் உள்ள ஒரு நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதித்துறை வட்டாரம் பிரான்ஸ்-பிரஸ் ஏஜென்சிக்குத் (ஏஎஃப்பி) தெரிவித்துள்ளது. அனைவரும் தாக்குதலில் ஈடுபட்டவருடன் தொடர்புடையவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அவர் மிகவும் நல்லவர்’

பாதிக்கப்பட்டவர் ஒரு வரலாற்று ஆசிரியராக இருந்தார். அவர் சமீபத்தில் முகமது நபி அவர்களின் கேலிச்சித்திரத்தைக் கருத்துச் சுதந்திரம் குறித்த வகுப்பு விவாதத்தின் ஒரு பகுதியாகக் காட்டினார் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கேலிச்சித்திரத்தைக் காண்பிப்பதற்கு முன் இஸ்லாமிய மாணவர்களை அறையை விட்டு வெளியேறும்படி ஆசிரியர் கேட்டுக்கொண்டது “சர்ச்சையை” கிளப்பியிருக்கக்கூடும் என்று ஒரு பள்ளி மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

“என் மகனைப் பொறுத்தவரை, அவர் மிகவும் நல்லவர், அவர் மிகுந்த நட்பான, இரக்கமான ஒரு நபர்,” என்று நோர்டின் சோவதி என்பவர் ஏஎஃப்பியிடம் கூறிள்ளார்.

“ஆசிரியர் இஸ்லாமிய மாணவர்களிடம் ‘வெளியே செல்லுங்கள் – உங்கள் உணர்வுகளைப் புண்படுத்த நான் விரும்பவில்லை’, என்று கூறியதாக என் மகன் என்னிடம் சொன்னான்,” என அந்தப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நீதித்துறை வட்டாரத்தின்படி, தாக்குதல் நடத்தியவரின் அடையாள அட்டையில் அவர் 2002-ல் மாஸ்கோவில் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணையாளர்கள் முறையான அடையாளத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆசிரியரின் தலையின் படம் அடங்கிய ஒரு ட்வீட்டை வெளியிட்டுப் பின்னர் முடக்கிய ஒரு கணக்கைக் குறித்து விசாரிப்பதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

“மதத்தில் நம்பிக்கை அற்றவர்கள் தலைவர்” என விவரிக்கப்பட்டிருக்கும் – மக்ரோனுக்கு எதிரான அச்சுறுத்தலைக்கொண்ட செய்தி இதே தாக்குதலை நடத்தியவர்களால் வெளியிடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

‘இங்கு எப்போதும் எதுவும் நடக்காது’

பள்ளியின் மாணவர்கள் சிலர் பெற்றோருடன் சேர்ந்து தெருவில் கூடி செய்திகளுக்காகத் தொலைபேசிகளை அவ்வப்போது பார்த்தது தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக வழக்கமாக அமைதியான சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.

அருகிலேயே வசிக்கும் மோகந்த் அமரா தனது நாயுடன் நடந்து செல்லும்போது, ​​“இங்கு எப்போதும் எதுவும் நடக்காது” என்றார்.

“இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது – தலைவெட்டப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது,” என்று 15 வயதான வர்ஜீனி கூறியுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் மாணவராக இருந்தார். வர்ஜீனி அவரைப் பற்றி “நல்ல நினைவுகள்” இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பள்ளிக்கு அருகில் சந்தேகத்துக்குரிய ஒரு நபர் நடமாடுவதை பற்றி அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்றதாகக் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

அவர்கள் இறந்த நபரைக் கண்டுபிடித்தபின் சந்தேகத்துக்குரிய  நபரையும் கண்டுபிடித்தனர். அவரைக் கைது செய்ய முயன்றபோது பிளேடைக் கொண்டு அவர் காவலர்களை அச்சுறுத்த முயன்றுள்ளார்.

அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கடுமையாகக் காயப்படுத்தினர். பின்னர் அவர் காயங்களுடன் இறந்தார் என்று நீதித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

‘அருவருப்பானது’

வெடிகுண்டு பொருத்தப்பட்ட உடுப்பு இருப்பதாகச் சந்தேகித்து அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு, வெடிகுண்டு அகற்றும் பிரிவு அனுப்பப்பட்டது.

செய்தி வந்த பின்னர் பிரான்சின் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை விவாதத்தை நிறுத்தியது. செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமர்வுத் தலைவர் ஹியூஸ் ரென்சன், இந்தத் தாக்குதலை “அருவருப்பானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“எங்கள் அனைவரின் சார்பிலும், பாதிக்கப்பட்டவரின் நினைவைக் கௌரவிக்க  விரும்புகிறேன்,” எனும் ஹியூஸ் ரென்சனின் கருத்தை எம்.பிக்கள் ஆமோதித்துள்ளனர்.

கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் “குடியரசுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.

பாரிஸில் 2015 ஜனவரியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒரு காவலர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதில், தாக்குதல் நடத்தியவர்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் மீது விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும் இந்தக் கொலை நடந்துள்ளது.

பாரிஸில் உள்ள நோட்ரே-டேம் கதீட்ரலுக்கு வெளியே ஒரு காவல் அதிகாரியைச் சுத்தியலால் தாக்கிய இஸ்லாமிய அரசுப் போராளிக் குழுவின் உறுப்பினர் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இது நடந்துள்ளது.

கடந்த மாதம், சார்லி ஹெப்டோ முகமது நபி அவர்களின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதைப் பழிவாங்குவதற்காக 25 வயதான பாகிஸ்தான் நபர் ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தியைக்கொண்டு இரண்டு பேரைக் காயப்படுத்திய பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மூன்று நாள் இடைவெளியில் பதினேழு பேர் கொல்லப்பட்டிருப்பது பிரான்சில் இதுவரை 250 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற இஸ்லாமிய வன்முறை அலைகளைக் குறிக்கும் வகையில் உள்ளது என்று ‘தி இந்து‘ செய்தி குறிப்பிடுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்