Aran Sei

உலக இந்து அமைப்பின் “முஸ்லிம் ரெஜிமென்ட்” அவதூறு – நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தல்

Major Abdul Rafey Khan of Garhwal Rifles was awarded Vir Chakra posthumously. On Sept 17, 1965, he displayed “exemplary courage and devotion to duty and made the supreme sacrifice of his life.

“தேசத் துரோகி என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஓடும் ரயிலில் அடித்துக் கொலை”. அடுத்து வரும் காலங்களில் இது போன்ற செய்திகள் வரக்கூடும் என்று யாராவது சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ?

‘என்ன இது பைத்தியக்காரத்தனம், நாட்டுக்காக உயிரையும் பணயம் வைத்துப் பணியாற்றும் இராணுவ வீரர்களைச் சந்தேகத்தின் பேரில் யாராவது அடித்துக் கொல்வார்களா’ என்றுதான் யாருக்கும் தோன்றும். ஆனால் சற்றே மிகையாகத் தோன்றினாலும் அப்படி ஒரு அபாயம் ஏற்படாது என்று உறுதியாகச் சொல்ல முடியாத வகையில் வெறுப்பு அரசியல் போய்க் கொண்டிருக்கிறது.

120 முன்னாள் இராணுவ வீரர்கள் இணைந்து குடியரசு தலைவருக்கு விண்ணப்பம் ஒன்றை சென்ற அக்டோபர் 14-ம் தேதி எழுதி இருந்தார்கள். அதில், “முஸ்லிம் ரெஜிமென்ட்” என்பது பற்றிய பொய்யான செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும், அது தொடர்பாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற முறையில் குடியரசு தலைவர் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தப் பொய் பிரச்சாரம் 2013- ஆம் ஆண்டில் தொடங்கியது. “120 கோடி இந்துக்கள் – உலக இந்துக்களின் ஒற்றுமை” என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பின்வருமாறு ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது.

அதில் 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்திய இராணுவத்தின் “முஸ்லிம் ரெஜிமென்ட்” என்ற படைப்பிரிவு பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட மறுத்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து அந்தப் படை பிரிவு கலைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு, இந்த ட்வீட் நூற்றுக்கணக்கான முறை பிற கணக்குகளில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது என்று கூறிய முன்னாள் இராணுவ வீரர்கள், 18 கணக்குகளை உதாரணமாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.

இந்த அவதூறு பரப்புரை 2013- ஆம் ஆண்டிலேயே தலை தூக்கி இருந்தாலும், தற்போது சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டு அது நீடித்து வரும் நிலையில் அது மறுபடியும் வேகமாகப் பரப்பப் படுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இந்திய இராணுவத்தில் முஸ்லிம் ரெஜிமென்ட் என்று ஒரு படைப்பிரிவு 1965- ஆம் ஆண்டிலும் சரி அதற்குப் பின்பும் சரி இருந்ததே இல்லை என்பதையும் அவர்கள் அம்மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

முன்னாள் கடற்படை தளபதி இலட்சுமிநாராயணன் ராம்தாஸ் தலைமையில் முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் என 120 முன்னாள் இராணுவ வீரர்கள் விடுத்திருக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களின் மனுவை மேல்நடவடிக்கைக்காகப் பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்குக் குடியரசு தலைவர் அனுப்பியுள்ளார். மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நேரடியாக மனுதாரர்களுக்குத் தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்தைக் குடியரசு தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

முஸ்லிம் இராணுவ வீரர்கள் பல்வேறு படைப்பிரிவுகளில் பணியாற்றி நாட்டுக்கான தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்கள் என்று கூறியுள்ள 120 முன்னாள் இராணுவ வீரர்கள், எடுத்துக்காட்டாக 1965 ஆம் ஆண்டுப் போரில் தனிமனிதனாக ஆறு பாகிஸ்தானிய டாங்குகளை நிர்மூலம் செய்து களத்திலேயே உயிர் நீத்த “அசல் உத்தர்” போர்க்கள நாயகன் ஹவில்தார் அப்துல் ஹமீதை நினைவு கூர்ந்துள்ளனர்.

மேலும் 1965  ஆம் ஆண்டுப் போரில் தனது சொந்த சித்தப்பாவான பாகிஸ்தான் இராணுவ மேஜர் ஜெனரல் சாஹிப்ஜாதா யாக்கூப் கானை எதிர்த்துப் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த மேஜர் அப்துல் ரபே கானையும் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

மேலும் 1948 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரில் இன்னுயிர் ஈந்த பிரிகேடியர் முகமது உஸ்மானின் தியாகத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு வந்து விடுமாறு ஜின்னா நேரில் வந்து அழைத்த போதும் அதை ஏற்க மறுத்து இந்தியாவையே தாய்நாடாக வரித்துக்கொண்டவர்தான் உஸ்மான் என நெகிழ்ச்சியோடு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நமது இராணுவ வீரர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் தோளுக்குத் தோள் நின்று போரிடுகின்றனர். தமது குழுவில் உள்ள சக வீரர்களின் மதம், மொழி, சாதி எதையும் பொருட்படுத்தாமல் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, தோழமை, சகோதரத்துவம் என்ற உணர்வுகளுடன் இணைந்து போரிடுகின்றனர்.

அப்படியிருக்கையில், இது போன்ற அவதூறு பரப்புரைகள் ஒட்டு மொத்த இராணுவத்தின் மன உறுதியைக் குலைத்து இராணுவத்தின் செயல்திறனைக் குலைக்கக் கூடியது என்றும் அது எதிரி நாடுகளுக்குச் சாதகமாக ஆகி விடும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர், முன்னாள் இராணுவ வீரர்கள். இந்தக் பொய் செய்தியைப் பரப்பும் பதினெட்டு சமூக ஊடகக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

அம்மனுவில் முன்னாள் இராணுவ வீரர்கள் குடியரசு தலைவருக்கு முன் வைத்துள்ள கோரிக்கைகள்

  • “முஸ்லிம் ரெஜிமென்ட்” குறித்து பொய் செய்தி பரப்பும் தனிநபர்கள் குறித்தும் அவர்களின் முந்தைய கால நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
  • அவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்துவதுடன் அவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடுக்க வேண்டும்.
  • இத்தகைய அவதூறு பதிவுகளுக்கு எதிராக எதுவும் செய்யாமல் வாளாவிருந்த முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்
  • பொய்யான தேச துரோகச் செய்திகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் மீது உடனுக்குடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். அதன் மூலம் தேசப் பாதுகாப்புக்கு ஊறு ஏதும் நேராமல் காக்க வேண்டும்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்