Aran Sei

பொது இடங்களில் புர்கா தடை – ஸ்விட்சர்லாந்து கருத்துக் கேட்பில் பெரும்பான்மை முடிவு

Image credit : ndtv.com

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதைத் தடை செய்வது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பில், 51.21 சதவீதம் வாக்காளர்கள் முழு தடையை ஆதரித்து வாக்களித்துள்ளனர் என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

ஸ்விட்சர்லாந்தில் 26 கேன்டன்களில் பெரும்பான்மையானவற்றில் தடைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன.

ஸ்விட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் முன்னணி குழுவான, ஸ்விஸ் மக்கள் கட்சி என்ற வலதுசாரி கட்சி இந்த தடையை வலுவாக ஆதரித்துள்ளது. அவர்களது பிரச்சார பதாகை ஒன்று “இஸ்லாமிய தீவிரமயமாக்கலை நிறுத்துவோம்” என்ற முழக்கத்தோடு, நிகாப் அணிந்த ஒரு பெண்ணின் சுழிக்கும் கண்களுடனான படத்தை கொண்டுள்ளது.

அரசாங்கமும், நாடாளுமன்றமும் நாடு தழுவிய தடையை எதிர்த்து வந்தன. “முட்டாள்தனமான, பலன்றற, இஸ்லாமிய வெறுப்பு ‘புர்கா எதிர்ப்பு’ சட்டத்தை எதிர்ப்போம்” என்று தடைக்கு எதிரான பதாகைகள் பிரச்சாரம் செய்தன.

பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் இதே போன்ற தடைகளைத் தொடர்ந்து ஸ்விட்சர்லாந்தில் இந்தக் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது.

‘இது தீவிரவாத இசுலாமுக்கு எதிரானது’ என்று தடையை ஆதரிப்பவர்களும், ‘இது பாலின, இனவாத நடவடிக்கை’ என்று இந்த முடிவை எதிர்ப்பவர்களும் வாதிடுவதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.

மொத்த வாக்காளர்களில் 50.8 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அவர்களில் 14.26 லட்சம் வாக்காளர்கள் தடையை ஆதரித்தும், 13.59 லட்சம் வாக்காளர்கள் தடையை எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஸ்விட்சர்லாந்தின் மக்கள் தொகையில் 5.5% பேர் முஸ்லீம்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் யுகோஸ்லேவியாவில் வேர்களைக் கொண்டவர்கள்.

முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடை அணிவதை அவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை என்று தி வயர் தெரிவிக்கிறது. “ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணியும் பெண்கள் 30 பேர் மட்டுமே உள்ளனர்” என்று இனஸ் எல்-ஷெய்க் என்ற பெண்ணுரிமை முஸ்லீம் பெண்களின் குழு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

“இந்த கருத்துக் கேட்பு பரிந்துரை பயனற்றது என்பதோடு மட்டுமின்றி, அதன் வாசகங்கள் இனவாதமும் பாலினவாதமும் கொண்டவை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறையின்படி 86 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1 லட்சம் பேர் வாக்கெடுப்பு நடத்தும்படி கையெழுத்திட்டால் அது நாடு தழுவிய வாக்கெடுப்புக்கு இட்டுச் செல்கிறது.

இந்தத் தடையின்படி, கடைகளிலும் கிராமப் புறங்களிலும் கூட யாரும் முகத்தை முழுவதுமாக மறைப்பது அனுமதிக்கப்படாது. ஸ்விட்சர்லாந்தின் இரண்டு பிராந்தியங்கள் ஏற்கனவே இத்தகைய தடையை அமல்படுத்தியுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்