Aran Sei

கமலா ஹாரிஸுக்கு பெருகும் ஆதரவு – ட்ரெண்ட் ஆகும் ‘மை நேம் இஸ்’

Image Credits: Cincinnati

ஜார்ஜியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பெயரைத் தவறாக உச்சரித்ததில் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், ‘MyNameIs’ (என் பெயர்) மற்றும் ‘IstandwithKamala’ (நான் கமலாவுடன் நிற்கிறேன்) என்ற ஹேஷ்டேக்குகளுடன் இணையதள பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சனிக்கிழமை, கடுமையான போட்டி நிலவும் ஜார்ஜியாவின் மேகான் நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேர்தல் பேரணியின் போது, ​​செனட் உறுப்பினர் டேவிட் பெர்டூ, கமலா ஹாரிஸின் பெயரைத் தவறாக உச்சரித்தார்.

“கா – மஹ்-லா? கஹ்-மஹ் – லா? கமலா-மாலா-மாலா?’ எதுவாக இருந்தாலும், எனக்குத் தெரியாது,” என்று அவர் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் கூறினார்.

தவறான உச்சரிப்பு கமலா ஹாரிஸின் ஆதரவாளர்களை ஆத்திரப்படுத்தியதுள்ளது. கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங், “நான் இதை எளிமையாக விளக்குகிறேன்: நீங்கள் முன்னாள் செனட்டர் டேவிட் பெர்டூவின் பெயரை உச்சரிக்க முடிந்தால், ‘எதிர்கால’ துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பெயரையும் உச்சரிக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.

பெர்டூவைக் கண்டித்து, ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவின் (ஏஏபிஐ) பிடென் பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளர் அமித் ஜானி, “மதவெறியை பின்னுக்கு தள்ளும்” ‘My Name Is’ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

ஜார்ஜியாவிலிருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பும் டேவிட் பெர்டூ, கமலா ஹாரிஸின் பெயரைக் கேலி செய்யும் விதத்தில் தவறாக உச்சரித்ததால் பின்னடைவை எதிர்கொள்கிறார் என்று பஸ்ஃபீட் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெர்டூவின் செய்தித் தொடர்பாளர், செனட்டர் பெயரைத் தவறாக உச்சரித்தார், ஆனால் அவர் இதன் மூலம் எதையும் குறிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளரின் பெயரைத் தவறாக உச்சரித்ததால் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பலர் தங்கள் பெயர்களின் தோற்றத்தையும் அர்த்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர் ப்ரீத் பராரா, ” #மை நேம் இஸ் ப்ரீத், அதாவது காதல்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

“#மை நேம் இஸ் மீனாட்சி. இந்து தெய்வத்தின் பெயரையும், என் பாட்டியின் பெயரையும் நினைவுகூரும் வகையில் எனக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனது பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ளவும், மரியாதையையும், கவுரவத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்து வலுவான பெண்கள் என்னை வளத்தார்கள் – குறிப்பாக எங்களை கண்டு அஞ்சும் @sendavidperdue போன்ற இனவெறி பிடித்த வெள்ளை ஆண்களிடமிருந்து அதனை காப்பாற்ற வேண்டும்,” என்று வழக்கறிஞரும் எழுத்தாளருமான மீனா ஹாரிஸ் அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மினசோட்டாவை  சேர்ந்த ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் இல்ஹான் ஓமரும், “#மை நேம் இஸ் இல்ஹாம், என்னை இல்ஹான் என்று அழைப்பதை நான் விரும்புகிறேன். எம் ஒலியை நான் ஒருபோதும் விரும்பவில்லை. அரபியில் இதன் பொருள் “உத்வேகம்”. என் தந்தை எனக்கு இல்ஹாம் என்று பெயரிட்டு, மற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாழ்க்கையை நடத்த என்னை ஊக்கப்படுத்தினார். அவரது நினைவில், தன்னை முன்னிறுத்தி கொள்ளும் நபரைத் தவிர்த்து விட்டு உண்மையான ஊக்குவிக்கும் நபருக்கு நான் வாக்களிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்