Aran Sei

ஹிட்லரின் போர்க் கப்பல்: 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் கடலில் மூழ்கிய ஹிட்லர் ஜெர்மனியின்  கார்ல்ஸ்ரூ 80 ஆண்டுகளுக்குப் பிறகு நோர்வே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1940ம் ஆண்டு பிரிட்டன் நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனியின் இந்த போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்தது.  கடலுக்கடியில் பொருத்தப்பட்டுள்ள மின்சார கேபிள்களை செப்பனிடும் பணியின் போது, மூழ்கிய கப்பலின் சிதைந்தபாகம், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கடியில் கிடக்கும் இந்த கப்பலின் காட்சிகள் கடந்தவாரம் நார்வேயின் NRK தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

1920களின் மத்தியில் உருவாக்கப்பட்ட கார்ல்ஸ்ரூ, 1929ல் ஜெர்மன் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர்  தொடங்குவதற்கு முன்னர் இது ஒரு பயிற்சி கப்பலாக உபயோகிக்கப் பட்டது. கார்ல்ஸ்ரூ போர்களில் உபயோகப்படுத்தப்பட்ட சமயத்தில், இதன் கட்டமைப்பும் ஆயுதங்களும் பல முறை மேம்படுத்தப்பட்டு, ஜெர்மனியின் மிக முக்கியமான போர்க் கப்பல்களில் ஒன்றாக உருமாற்றப்பட்டது.

1940 ஏப்ரல் 9 தேதி, ஜெர்மன் படைகள் நார்வே மீது படையெடுக்கத் தொடங்கியபோது, ​​ கிறிஸ்டியன்சாண்ட் நகரத்தைத் தாக்க கார்ல்ஸ்ரூ பிற போர்க்கப்பல்களை வழிநடத்தியது. ​​கார்ல்ஸ்ரூவில் மேம்பட்ட துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் இருந்ததாலும் மற்ற சிறிய கப்பல்களின் துணை இருந்ததாலும் கிறிஸ்டியன்சாண்ட் நகரின் கடல் அரண்களை சில மணி நேரத்தில் அழிக்கப்பட்டன. கப்பல்களிலிருந்த ஜெர்மன் ராணுவ வீரர்கள் கிறிஸ்டியன்சாண்டில் இறங்கி ஜெர்மனின் போர்விமானங்களின் உதவியுடன்மற்ற நகரங்களைச் சென்றடைந்தனர்.

வீரர்களை இறக்கிய பின் ஜெர்மனியை நோக்கிப் பயணிக்கும்போது  எச்.எம்.எஸ் எனும் பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல், கார்ல்ஸ்ரூவை ஒளிந்திருந்த தாக்கியது. கப்பல் குழுவினர் கார்ல்ஸ்ரூவை கரையொதுக்க முயன்றும் கப்பலுக்குள் நீர் நுழைந்ததால், முயற்சியைக் கைவிட்டு, கப்பலில் இருந்தவர்களை படகின் உதவியோடு வெளியேற்றி கப்பலை மூழ்கடித்தனர்.

கப்பலின் தலைவர், குழுவினர் மற்றும் மூழ்கியதைக் கண்டவர்கள் அளித்த சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாகக் கடந்த 80 ஆண்டுகளாக கார்ல்ஸ்ரூவின் இருப்பிடம் ஒரு மர்மமாகவே இருந்தது. 2017ம் ஆண்டு இதன் இருப்பிடம் தெரியவந்தபோதும் இப்போது தான் புகைப்படம் மற்றும் சோனார் ஸ்கேன்களின் உதவியால் இது மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மனிய போர்க்கப்பல் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்