Aran Sei

மியான்மர் இராணுவ ஆட்சியின் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இலங்கை – ஜனநாயக செயல்பாட்டாளர்கள் கண்டனம்

Image credit : thehindu.com

மியான்மரை ஆளும் இராணுவ குழுவின் வெளியுறவுத் துறை அமைச்சரை இணையவழி BIMSTEC கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளதை மியான்மரின் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.

BIMSTEC என்பது வங்கதேசம், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட பிராந்திய கூட்டமைப்பு ஆகும். அதன் தற்போதைய தலைமைப் பொறுப்பில் இலங்கை உள்ளது. இந்த கூட்டமைப்பின் ஏப்ரல் 1-ம் தேதி அமைச்சர்கள் கூட்டத்துக்கு மியன்மார் அரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா, மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் வுன்னா மவுங் ல்வின்-க்கு அனுப்பிய கடிதத்தில், “17-வது அமைச்சர்களின் சந்திப்பு, மாண்புமிகு அமைச்சரின் பங்கேற்பால் மதிப்படையும். இந்த சந்திப்பின் போது நெருக்கமாக உறவாடுவதை எதிர்பார்த்து உள்ளேன்” என்று எழுதியுள்ளார்.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று, ஜனநாயகத்துக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆங் சான் சூச்சி-ம் ஆளும் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக ராணுவம் குற்றம் சாட்டியிருந்தது.

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு – ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்த இராணுவம்

 

இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர், பலர் சிறையிலிடப்பட்டனர், 18 பேர் உயிரிழந்தனர். இராணுவ அரசு சமூக வலைத்தளங்களை முடக்கியும், பத்திரிகையாளர்களை கைது செய்தும் போராட்டத்தை நசுக்க முயற்சித்து வருகிறது.

ஃபேஸ்புக்கை அடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராம் முடக்கம் – கலவரத்தை தடுக்க மியான்மர் ஆட்சிக்குழு நடவடிக்கை

இந்நிலையில், ராணுவ ஆட்சியின் அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் மியான்மரின் குடிமக்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட பலர் இலங்கையின் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ பக்கத்தில்  கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

“இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு BIMSTEC-ன் வரம்புக்குள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுளது. BIMSTEC மியான்மரை வெளியேற்றினால் தவிர, அந்நாட்டை ஒதுக்கி வைக்க இலங்கைக்கு அதிகாரம் இல்லை” என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சக செயலாளர் அட்மிரல் (ஓய்வு) ஜெயந்த் கொலம்பேஜ் கூறியுள்ளார்.

இலங்கையும், மியான்மரும் இரண்டு நாடுகளுமே தேரவாத பிரிவு புத்தமதத்தை பின்பற்றுவதால் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன என்று தி ஹிந்து கூறுகிறது.

நேற்று, இலங்கை தலைநகர் கொழும்புவில் மியான்மர் தூதரகத்துக்கு வெளியில் மியான்மரில் போராடும் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த 40 செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்