Aran Sei

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் – உரிமைக்காக ஒன்றிணைந்த தமிழர்களும் முஸ்லீம்களும்

Image Credit : jdslanka.org

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ” முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை” இடித்ததை எதிர்த்து வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம்களின் முழு அடைப்புப் போராட்டம் மற்றும் தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களின் இடைவிடாத முயற்சியுடன் உலகமக்களின் ஓங்கிய குரல், ஒரு காலத்தில் தங்கள் கண்களை உறுத்திய நினைவுச் சின்னத்தை அதிகாரிகள் சட்டபூர்வமானதாக்குவதை கட்டாயப்படுத்தியது.

முன்மாதிரியான ஒற்றுமையுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து நாட்டின் ஒட்டு மொத்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை அசைவற்று நிற்கச் செய்தனர்.

“இந்த நினைவுச்சின்னம் சட்டவிரோதமானது. இது இங்கு இருக்கக் கூடாது” என்று முன்னர் கூறிய அதே துணை வேந்தர் சிவகொழுந்து ஸ்ரீ சத்குணராஜா தானே முன்வந்து அடையாளமாக புனித சாம்பலைப் பூசியும் இடிபாடுகளில் இருந்த இரண்டு கற்களை வைத்தும் அதன் மீது மலர்களைத் தூவியும் ஒரு சாதாரண விழாவை நடத்தினார். பிரார்த்தனைகளுக்கு நடுவே மிகுந்த பயபக்தியுடன் கணுக்கால் அளவு நீரில் நின்று நடத்திய இந்த நிகழ்வு நினைவுச் சின்னத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான முதல் படியாக இருந்தது. இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

அர்ப்பணிப்பு விழாவிற்கு செல்லும் வழியில், வளாகத்திற்குள் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளைப் பார்த்து நிலைமையை சுமுகமாக கையாள அரசு தனக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.

“நான் பல்கலைகழக மானியக் குழுவிற்குக் கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டில் (நமக்கு) பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சம்பந்தன் இன்று இந்திய தூதரகம் செல்கிறார். இது சரியான ஒப்புதலுடன் நடக்கிறது. மாணவர்களை அமைதிப்படுத்த இரண்டு கற்கள் குறியீடாக வைக்கப்பட்டன. மேலும் அவர்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அவர்களிடம் கூறப்பட்டது. இப்போதைக்கு கட்டப் போவதில்லை. பின்னர் கட்டப்படும். ஆசிகளுக்கான விழா நடைபெறும்,” என்று கோப்பாய் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியிடம் துணை வேந்தர் கூறியது படமாக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்தோ அல்லது ” இந்த நினைவுச்சின்னம் வடக்கு, கிழக்கு ஒற்றுமைக்குத் தடையாக உள்ளது” என்று கூறிய அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்காவிடமிருந்தோ எந்த எதிர்விளைவும் இதுவரை வரவில்லை.

நாடகத்தின் முடிவு

“இந்த நினைவுச்சின்னத்தை இங்கு வைத்திருப்பதால், நான் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு படையினரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது” என்று செய்தியாளர்களிடம் துணை வேந்தர் சிவகொழுந்து ஸ்ரீ சத்குணராஜா கூறினார்.

“அது நேரத்தை வீணாக்குகிறது. ஒரு கல்வியாளராக, ஒரு காலத்தில் நான் எல்லா உணர்திறன்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கண்டதும், இதனை ஒரு நல்ல வழியில் சட்டபூர்வமானதாக்க வேண்டும் என எண்ணினேன். கடவுள் அருளால் அந்த நாடகம் இந்த வகையில் முடியும் வண்ணம் நடத்தப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நினைவுச் சின்னம் சட்ட விரோதமானது என்பதை மாணவர்கள் முற்றிலும் நிராகரிக்கின்றனர். தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு ஊடகங்களிடம் பேசிய மாணவர் தலைவர்களில் ஒருவரான மசனையா தர்சிகன், “2018-ம் ஆண்டில் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து மாணவர்களால் அனுமதி பெறப்பட்டு, அது சுட்டிக்காட்டிய இடத்தில் நிறுவப்பட்டது,” என்று கூறினார்.

“அந்த நினைவுச்சின்னம் போரில் இறந்தவர்களை நினைவுபடுத்துவதற்காகவும், எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகம் அது போன்ற ஒரு பேரழிவைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகவும் நிறுவப்பட்டது,” என்று அவர் கூறினார்.

துணை வேந்தர் மீது நம்பிக்கைக் கொண்டு, அவர் இதை நிறுவுவது தொடர்பாக ஏதாவது பிரச்சனையை எதிர் கொண்டால் மாணவர்கள் அவருடன் நிற்போம், அவருக்கு ஆதரவு தருவோம்,” என்று கூறினார் தர்சிகன்.

மேலும் அவர், இந்த நினைவுச்சின்னம் பிரச்சனையால், ஒரு துணை வேந்தர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Image Credit : jdslanka.org
உண்ணா விரதப் போராட்டம் நடத்திய மாணவர்கள் – Image Credit : jdslanka.org

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தலைவர் அனுஷன் தங்களுடைய முதன்மையான கோரிக்கை நினைவுச்சின்னம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்பதும் அதற்கான அடிக்கல் நடப்பட வேண்டும் என்பதும் ஆகும் எனக் கூறினார்.

“முதல் அடியை சாதித்துள்ளோம். நாங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம், ஆனால் இது தொடரும். இதன் வடிவம் மாறக் கூடும். வளாகத்திற்குள் இராணுவமும் காவல்துறையினரும் இருப்பதையும், புலனாய்வுத் துறையினர் எங்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து முழு அடைப்பு நடந்தது.
சமூகமும், அரசியல் கட்சிகளும் காட்டிய ஒற்றுமை எதிர்காலத்திலும் மிக முக்கியமானது என்று மாணவர்கள் கூறினர்.

சிலோன் ஆசிரியர் சங்கம், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட நிகழ்வை குறித்து, தங்கள் வலுவான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ள அறிக்கை, “சிலோன் ஆசிரியர் சங்கம் இந்த ஜனநாயக உரிமை மீறலையும், பிரச்சினைகளை உருவாக்கும் விதத்தில் செயல்படுவதையும் வன்மையாக கண்டிப்பதுடன் தனது அருவருப்பையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. இது போரில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் இருக்கும் அவர்களை மிகவும் துன்புறுத்துவதாகும்,” என்று கூறுகிறது. தனது அறிக்கையில், தமிழர்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் இராணுவ அதிகாரத்தை திரட்டுவதை வன்மையாக கண்டித்துள்ளார்.

(www.jdslanka.org இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்