Aran Sei

அமெரிக்க அரசின் மீது சோலார் விண்ட்ஸ் தாக்குதல் – ரசிய பின்னணி உள்ளதா?

மெரிக்க ஒன்றிய அரசின் அனைத்து முக்கியமான துறைகளிலும் ஊடுருவிய சோலார் விண்ட்ஸ் உளவு மென்பொருள் தாக்குதல், சிஸ்கோ, இன்டெல் போன்ற தனியார் நிறுவனங்களையும் பாதித்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த “சோலார் விண்ட்ஸ்” என்ற தனியார் நிறுவனம், கணினி பாதுகாப்பு மென்பொருட்களை உருவாக்கி விற்கிறது. இந்த மென்பொருளை அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளும், முன்னணி மென்பொருள் நிறுவனங்களும், உலகெங்கிலும் உள்ள அரசுத் துறைகளும், தனியார் நிறுவனங்களும் வாங்கி பயன்படுத்துகின்றன.

இந்த ஆண்டு மார்ச் மாதம், சோலார் விண்ட்ஸின் கணினிகளை ஊடுருவிய கணினி ஹேக்கர்கள், அதன் கணினி பாதுகாப்பு மென்பொருளுக்கான ஒரு புதுப்பித்தல் (அப்டேட்) நிரலில், உளவு பார்க்கும் நிரல்களை யாருக்கும் தெரியாமல் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

இந்த அப்டேட் நிரலைப் பயன்படுத்தி தமது மென்பொருட்களை அப்டேட் செய்த, சோலார் விண்ட்சின் 18,000 வாடிக்கையாளர்களின் கணினிகளில் இந்த உளவு பார்க்கும் நிரல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன.

இந்தத் தாக்குதல் இதுவரையில் இல்லாத அளவு பெரிய இணைய தாக்குதல் என்றும், இது ஒரு உலகளாவிய தாக்குதல் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பல அரசு நிறுவனங்களும், முன்னணி மென்பொருள் நிறுவனங்களும் அடங்கும். ஒரு தனிப்பட்ட நிறுவனத்தை குறி வைக்காமல், பல நிறுவனங்களுக்கு மென்பொருள் விற்கும் ஒரு நிறுவனத்தின் மென்பொருள் வினியோகத்தை குறி வைத்ததன் மூலம், இந்த கணினி ஹேக்கர்கள் ஆயிரக்கணக்கான அமெரிக்க நிறுவனங்களின் தகவல் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டிருக்கின்றனர்.

அமெரிக்க உள்நாட்டுத் துறை அனுப்பிய மின்னஞ்சல்கள் இந்த உளவு மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டு வந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

ராய்ட்டர்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அமெரிக்க ஒன்றிய அரசின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, வணிகத் துறை, நிதித் துறை, மற்றும் தேசிய ஆரோக்கிய கழகமும் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க எரிசக்தித் துறை இயக்கும் அணுசக்தி நிலையங்களும், தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையமும் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக politico.com செய்தி வெளியிட்டுள்ளது.

எரிசக்தித் துறையும், வணிகத் துறையும் தமது கணினிகள் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கின்றன. மற்ற துறைகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை.

இந்தத் தாக்குதலை அமெரிக்க இணையபாதுகாப்பு நிறுவனமான ஃபயர்-ஐ டிசம்பர் 8-ம் தேதி முதன்முதலில் அறிவித்தது. தனது கணினிகள் தாக்கப்படுவதை அறிவிக்கும் பதிவு ஒன்றை அது வெளியிட்டது. “இந்தத் தாக்குதல் குறிப்பிட்ட சில அரசாங்க வாடிக்கையாளர் தொடர்பான தகவல்களை பெறுகிறது” என்று அந்நிறுவனத்தின் தலைமை அலுவலர் கெவின் மாண்டியா தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தனியார் நிறுவனங்களில், மைக்ரோசாஃப்ட் தனது கணினிகள் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. தனது இணையபாதுகாப்பு சேவைகளுக்கான வாடிக்கையாளர்களை இந்தத் தாக்குதல் பாதித்துள்ளது என்று அது முன்பே கூறியிருந்தது. மைக்ரோசாஃப்டின் கணினிகளும் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியுள்ளதை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய ஹேக்கர்கள், கலிஃபோர்னியா அரசு மருத்துவமனைகள் துறையிலும், கென்ட் மாநில பல்கலைக் கழகத்திலும் ஊடுருவியுள்ளனர் என்று cnet.com செய்தி தெரிவிக்கிறது.

சோலார் விண்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஏடி&டி, ப்ராக்டர் & கேம்பிள், மெக்டனால்ட்ஸ் ஆகிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் அடங்கும். மேலும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு தனியார் கார்ப்பரேட்டுகளும், அரசுத் துறைகளும் சோலார் விண்ட்ஸ்-ன் மென்பொருளை பயன்படுத்துகின்றனர்.

இந்தப் பட்டியலில் உலகின் முன்னணி 500 நிறுவனங்களில் 425-ம், அமெரிக்காவின் முன்னணி 10 தொலைதொடர்பு நிறுவனங்களும் உள்ளிட்டு 33,000 நிறுவனங்கள் உள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்த உளவு மென்பொருளை நிறுவிக் கொண்ட 24 நிறுவனங்களை திங்கள் கிழமை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அடையாளம் கண்டிருக்கிறது. அவற்றில் சிஸ்கோ, இன்டெல், என்விடியா, விஎம்வேர், பெல்கின் போன்ற நிறுவனங்கள் அடங்கும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் (President) பிராட் ஸ்மித், “இது குறிப்பிட்ட இலக்குகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, உலகின் முக்கியமான கட்டமைப்புகள் மீதான நம்பிக்கை மீதும் நம்பகத்தன்மை மீதும் ஆன தாக்குதல்” என்று கூறியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் இணையபாதுகாப்பு தலைவர், அலெக்ஸ் ஸ்டாமோஸ், “இதுவரையில் பொதுவில் விவாதிக்கப்படும் அனைத்து செயல்பாடுகளும் அமெரிக்க வழக்கமாக செய்யும் நடவடிக்கைகளின் எல்லைகளுக்குள் வருபவைதான்” என்று ட்வீட் செய்துள்ளார்.

“இத்தகைய கணினி தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் ஓபாமாவுக்கும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்குக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சோலார் விண்ட்ஸ் நிறுவனமும், பிற இணைய பாதுகாப்பு நிறுவனங்களும் இந்தத் தாக்குதலுக்கு ஏதோ அன்னிய அரசின் பின்னணி இருக்கிறது என்று சொன்னாலும் எந்த நாட்டையும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அமெரிக்க ஊடகங்கள் சென்ற வாரம் முழுவதும் ரசிய உளவு நிறுவனம் ஒன்றின் குழுதான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக செய்தி பரப்பி வந்தன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதிபர் டிரம்பின் நிர்வாகமோ, அடுத்த மாதம் அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடனின் குழுவோ இது வரை முன் வைக்கவில்லை.

அமெரிக்காவில் உள்ள ரசிய தூதரகம், அந்தத் தாக்குதலுக்கும் ரசியாவுக்கும் தொடர்பில்லை என்று ஒரு அறிக்கையை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது. “தகவல் தொழில்நுட்ப வெளியில் கெடுநோக்கிலான தாக்குதல்கள் ரசியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், தேசிய நலன்களுக்கும், தேசங்களுக்கு இடையேயான உறவுகள் பற்றிய எங்களது நிலைப்பாட்டுக்கும் விரோதமானவை” என்று அது தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்