Aran Sei

ஸ்காட்லாந்து இங்கிலாந்தை விட்டு பிரியுமா? – கருத்துக் கேட்பு நடத்த ஆளும் கட்சி உறுதி

நிக்கோலா ஸ்டர்ஜன் - Image Credit : thehindu.com

ரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவை (ஹாலிரூட்) தேர்தல்களில் தனது ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி பெரும்பான்மை பெற்றால், ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கான பரிந்துரைக்கும் கருத்துக் கேட்பை நடத்தப் போவதாக அக்கட்சியின் தலைவரும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சருமான நிக்கலா ஸ்டர்ஜன் கூறியுள்ளார்.

மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள்: ஸ்காட்லாந்தை ஏன் பின்பற்ற வேண்டும்? – சினேகா பெல்சின்

கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பிறகு கருத்துக் கேட்பு நடத்துவதற்கான திட்டத்தை ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி முன் வைத்திருக்கிறது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளைக் கொண்ட தீவான பிரிட்டனையும், அயர்லாந்து தீவின் வடக்கு பகுதியான வட அயர்லாந்தையும் உள்ளடக்கியது ஐக்கிய முடியரசு. 400 ஆண்டுகளுக்கும் முன்பாக ஸ்காட்லாந்து இங்கிலாந்துடன் இணைந்து ஒற்றை அரசாக மாறியது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து + வட அயர்லாந்து

2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் நடந்த பிரிந்து செல்வது பற்றிய கருத்துக் கேட்பில் 55% பேர் ஐக்கிய முடியரசில் தொடர்வதற்கும், 45% பேர் வெளியேறுவதற்கும் வாக்களித்திருந்தனர். இந்த கருத்துக் கேட்பு மூலமாக இந்தப் பிரச்சினை முடித்து வைக்கப்பட்டு விட்டது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகிறார்.

2016-ம் ஆண்டில் ஐக்கிய முடியரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.

‘ பிரெக்சிட் ஒப்பந்தம் ‘ எட்டப்பட்டது – ” மிகக் குறைந்த அளவு மோசமானது “

14 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தின் ஆட்சி செய்து வரும் ஸ்காட்லாந்து தேசிய கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து இருப்பதை ஆதரிக்கிறது. 2016-ல் அது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்பில் ஸ்காட்லாந்தில் பெரும்பான்மை மக்கள் வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், ஒட்டு மொத்த ஐக்கிய முடியரசின் வாக்குகளில் பெரும்பான்மை வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்ததால் சென்ற ஆண்டில் ஐக்கிய முடியரசு ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொதுச் சந்தையிலிருந்து வெளியேறி விட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய முடியரசு வெளியேறிய பிறகு, ஸ்காட்லாந்தின் சுதந்திரம் பற்றிய பிரச்சினை அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று புளூம்பெர்க் கருத்து தெரிவித்துள்ளது.

“ஸ்காட்லாந்து மக்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். நான் எதை விரும்புகிறேன் அல்லது போரிஸ் ஜான்சன் [ஐக்கிய முடியரசின் பிரதமர்] எதை விரும்புகிறார் என்பது முக்கியம் அல்ல” என்று நிக்கலா ஸ்டர்ஜன் கூறியுள்ளதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

“பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனநாயகத்தைக் கண்டு பயப்படுகிறார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஐக்கிய முடியரசின் அரசு கருத்துக் கேட்பை நடத்துவதற்கு தொடர்ந்து மறுத்தாலும் ஸ்காட்லாந்தின் சட்டப் பேரவை அதை வலியுறுத்தும் என்று நிக்கலா ஸ்டர்ஜன் கூறியுள்ளார்.

” விவசாய போராட்ட பிரச்சினையை இந்தியத் தரப்பிடம் எழுப்புக ” – போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தும் பிரிட்டிஷ் எம்பிக்கள்

வரப் போகும் சட்டப் பேரவை தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெற்று புதிய அரசாங்கம் அமைந்துவுடன் பிரிந்து செல்வது பற்றிய கருத்துக் கேட்பை நடத்துவதற்கு நிக்கலா ஸ்டர்ஜன் அறுதியாக உள்ளார்.

“ஸ்காட்லாந்து மக்கள் பொருளாதாரத்தை தேக்கத்திலிருந்து மீட்க விரும்புகிறார்கள், கருத்துக் கேட்புகளை அல்ல” என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் பழமைவாதிகளின் கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் ராஸ் கூறியுள்ளதாக புளூம்பெர்க் தெரிவிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய முடியரசு வெளியேறிய பிறகு, ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிய வருகிறது. சுதந்திரத்துக்கு ஆதரவாக 49%-மும், இணைந்திருப்பதற்கு ஆதரவாக 44%-மும், இன்னும் முடிவு செய்யவில்லை என 7%-மும் உள்ளதாக சண்டே டைம்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சண்டே டைம்ஸ் நடத்திய நான்கு தேச கருத்துக் கணிப்பில் ஸ்காட்லாந்திலும், வட அயர்லாந்திலும் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வது தொடர்பான கருத்துக் கேட்பு வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

போரிஸ் ஜான்சன் பிரதமராக தொடர்ந்தால் ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கான ஆதரவு அதிகரிக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவதாக புளூம்பெர்க் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்