Aran Sei

`தமிழக மீனவர்களைத் தாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது’ – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று இலங்கைக் கடல்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

கடந்த செவ்வாய்கிழமை (அக்டோபர் 27) ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் வழக்கம் போல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்தனர்.

தாக்குதல் நடத்தும் இலங்கைக் கடற்படையினர்

அவர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி கற்கள் மட்டும் பாட்டில்களைக்கொண்டு தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளைச் சேதப்படுத்தினர். மேலும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பெருத்த  நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

இலங்கைக் கடற்படையினரின் இந்தத் தாக்குதலில் மீனவர் சுரேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் உதவியுடன் சுரேஷ், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

உடனே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாரம்பரிய இடத்தில் பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தாக்குதல் குறித்து, மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று நேற்று அல்ல; கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்.” என்று இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

இந்தத் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, திமுக-வின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது” எனக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையில்,  நிலவும் பிரச்சினை குறித்து, கிளிநொச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையின் கடல் தொழிற்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசினார்.

அப்போது, “தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு, தாக்குதல் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படை அதிகாரியைத் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.” என்று கூறியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா, கடந்த தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாக ‘தி இந்தி’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ஒருவேளை தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடித்தனர் என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் கூட, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களைத் தாக்க எந்தப் பன்னாட்டு மீன்பிடிச் சட்டமும் அனுமதிப்பதில்லை. எல்லை தாண்டிய மீனவர்களை எச்சரித்து அனுப்பலாம்; கைது செய்து அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம்; கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்பதுதான் சட்டம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்