சியாட்டில் மாநகர கவுன்சில் கூட்டத்தில், இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் தீர்மானம் டிசம்பர் 14-ம் தேதி (திங்கள் கிழமை) விவாதத்திற்கு வந்தது.
தெரசா மாஸ்குவேடா, சாமா சாவந்த் ஆகிய சியாட்டில் மாநகர கவுன்சில் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தனர். இது தொடர்பாக, பொது மக்கள் கருத்துக் கேட்பும் நிகழ்ந்தது. சியாட்டில் மாநகர் இடம் பெற்றுள்ள வாசிங்டன் மாநிலத்தில் வசிப்பவர்களுக்குக் கருத்து சொல்ல வாய்ப்பளிக்கப்பட்டது.
பெருந்தொகையானோர் கலந்து கொண்டு கருத்துக்கள் பகிர்ந்தனர். 9 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
சியாட்டில் நகர்மன்றத் தீர்மானம்
இந்தியாவில் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நமது ஆதரவை தெரிவிப்பதற்கும் பாதிக்கப்பட்ட சியாட்டில் நகரின் தெற்காசிய சமூகத்தினருக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்குமான தீர்மானம்.
வாஷிங்டன் மாநிலம் பெருமையுள்ள விவசாய சமுதாயமாக நீடித்திருப்பதாலும்;
வாஷிங்டன் மாநிலம், நாடுகளுக்கு உணவளிப்பதில் விவசாயிகளுக்கு உள்ள பெரும் பங்கை புரிந்து கொண்டு மதிப்பதாலும்;
வாஷிங்டன் மாநிலம் தங்கள் முன்னோர்களின் நாடுகளில் இன்னும் விவசாய நிலங்களை சொந்தமாக வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்விடமாக இருப்பதாலும்;
இந்திய அரசு செப்டம்பர் 2020-ல் நிறைவேற்றி உள்ள சட்டங்கள் மூலம், இந்தியாவில் விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் ஒழுங்குமுறைகளை நீக்கியுள்ளதுடன், விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முறையை ஒழித்துக் கட்டி, கார்ப்பரேட்டுகள் விவசாய நிலங்களை வாங்குவதற்கு இருந்த தடைகளை விலக்கியிருப்பதுடன் விவசாய உற்பத்திப் பொருட்களை பெருமளவு சேமித்து வைத்துக் கொள்வதற்கான வரம்புகளை நீக்கிவிட்டதாலும்;
இந்த சட்டங்கள், வட இந்தியா எங்கும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், போராட்டங்களை உருவாக்கி, நவம்பர் மாதம் முதல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கு வெளியே போராடி போக்குவரத்தை முடக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளதாலும்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஒடுக்குவதாக விமர்சிக்கப்படுவதாலும், இந்தக் கொள்கைகள் பஞ்சாபின் உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும்;
சியாட்டில் நகரத் தீர்மானம் 31926 ல் குறிப்பிட்டுள்ளது போல, தொழிற்சங்கங்களும், தனிநபர்களும் கிராமப்புறங்களில், வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்த்து வரும், விவசாயிகளை அடக்குவதையும், சுரண்டுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ள மோடி அரசின் கொள்கையின் தொடர்ச்சியாகவே இந்த சட்டங்கள் இருப்பதாலும்;
இந்தச் சட்டங்கள் குறிப்பான மத – சாதி தாக்கங்களை கொண்டிருப்பதாலும்;
பெரும்பாலான சீக்கியர்கள் பஞ்சாபில் வாழ்கின்றனர், பெரும்பாலான பஞ்சாபிகள் விவசாய நிலங்களில் உரிமையாளர்களாகவும், உழைப்பாளர்களாகவும் இருப்பதாலும்;
மேலும் சமத்துவமற்ற, நியாயமற்ற விவசாயக் கொள்கைகள், ஏராளமான விவசாயிகளை நிலத்தை விட்டு விரட்டி, பிழைப்பிற்காக சியாட்டில் மற்றும் வாஷிங்டன் மாநிலம் உள்ளிட்ட அயல்நாடுகளுக்குச் சென்று சொந்த நாட்டில் வாழும் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாலும்;
தலித் உழைப்பாளர்கள் தொடர்ந்து அரசின் அடக்குமுறைக்கு மட்டுமன்றி சொந்த விவசாய சமூகத்தாலும் அவதூறுகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வருவதாலும், இவை சாதியத்தை உள்ளடக்கமாக கொண்டிருப்பதாலும்;
இந்தச் சட்டங்கள் இந்திய விவசாய சந்தைகளை தனியார்மயமாக்குவதற்கு இட்டுச் செல்லும், வாஷிங்டனிலும் உள்ள தெற்காசிய சமூகத்தினர் மற்றும் இன்னும் பல வாஷிங்டன் வாசிகளின் மற்றும் சொந்த நாட்டில் உள்ள அவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமையை மிக மோசமாக பாதிக்கும் என்பதாலும்;
இந்தியாவின் $2.9 லட்சம் கோடி பொருளாதாரத்தில் விவசாயம் 15 விழுக்காடு மட்டுமே பங்களிப்பு செய்தாலும், விவசாயத்தில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருப்பதாலும்;
86% விவசாயிகள் இரண்டு அல்லது அதற்கும் குறைவான விவசாய நிலத்தை வைத்துக் கொண்டு, ஆண்டிற்கு சுமார் $1,400 (ஒரு லட்சம் ரூபாய்)க்கும் குறைவாகவே வருமானத்தை ஈட்டுபவர்களாக இருப்பதால் பெரிய, தனியார் கார்ப்பரேட்டுகளிடம் பேரம் பேசும் நிலையில் இல்லை என்பதாலும்;
விவசாயிகள் விரோத கொள்கைகள், கடன் மற்றும் மோசமாகிச் செல்லும் நிதி நிலைமைகளால் கடந்த 1995 விருந்து 2019 வரை 3,63,726 விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதாலும்;
விவசாயிகளுக்கு அமைதிவழியில் போராட உரிமை உள்ளது, அவர்கள் மீது காவல்துறை வன்முறையை சியாட்டில் நகர மன்றம் கண்டனம் செய்கின்றது என்பதாலும்;
வாஷிங்டன் மாநிலம் எங்கும் இந்த சட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள் சமீபத்தில் நடைபெற்று வருவதாலும்;
நகர மன்றம் நீண்ட காலமாகவே இங்கு வாழும் பல்வேறு சமூகங்களை சார்ந்த மக்களின், வெளிநாடுகளில் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதாலும்
இப்போது,
பிரிவு 1. இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய சட்டங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சியாட்டில் மற்றும் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக சியாட்டில் மாநகரம் நிற்கிறது.
பிரிவு 2. தற்போது ஒன்றிய அளவில் சியாட்டிலை பிரதிநிதித்துவப்படுத்தும் இப்போதைய அமெரிக்க செனட்டர்கள் பட்டி முர்ரே, மரியா கான்ட்வெல் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் பிரமிளா ஜெயபால், ஆடம் ஸ்மித் ஆகியோரும் விவசாயிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மீதான எந்தவித தாக்குதல்கள் அல்லது காவல்துறையின் மிருகத்தனத்தையும் எதிர்க்க வேண்டும் எனவும் சியாட்டில் நகர் மன்றம் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது என
சியாட்டில் நகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
தலைவர்
சியாட்டில் நகர் மன்றம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.