Aran Sei

கத்தார் எல்லை தடைகளை நீக்கியது சவுதி அரேபியா – இன்று வளைகுடா உச்சிமாநாட்டில் கத்தார் பங்கேற்பு

Image Credit : ft.com

த்தாருடனான தனது நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகளை போக்குவரத்துக்கு திறப்பதாக சவுதி அரேபியா ஒத்துக் கொண்டிருக்கிறது.

சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் மோசமான மோதலினால், வளைகுடா பிராந்தியத்தில் நிலவிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் முதல் படி இது என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கச்சா எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா பகுதியில் உள்ள இந்த இரு அண்டை நாடுகளும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகள். கத்தார், உலகிலேயே அதிக அளவு திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், தனிநபர் வருமான அடிப்படையில் உலகிலேயே மிகப் பணக்கார நாடு என்றும் ft செய்தி கூறுகிறது.

வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளம் கத்தாரில் உள்ளது.

இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வந்த குவைத், சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையேயான எல்லைகள் திங்கள் மாலையிலிருந்து திறக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளது. இதற்கு பதிலாக, கத்தார் உலக வர்த்தகக் கழகம், சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையம் போன்றவற்றில் எதிர்த்தரப்பு மீது போடப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்.

இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, சவுதி அரேபியாவில் இன்று நடைபெறவிருக்கும் வளைகுடா உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிக விபரங்கள் அறிவிக்கப்படும்.

2017-ம் ஆண்டில் கத்தார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், ஈரானுக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பிற கூட்டணி நாடுகளும் கத்தாருடனான அரசு ரீதியான மற்றும் பொருளாதார உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. நிலவழி, நீர்வழி, மற்றும் வான்வழி எல்லைகளையும் தடுத்து விட்டன.

அவை கத்தாரிடம் அசாதாரணமாக 13 கோரிக்கைகள் முன் வைத்தன என்று கூறுகிறது ஃபைனான்சியல் டைம்ஸ். அவற்றில் கத்தார் நிதியில் இயங்கும் தொலைக்காட்சி சேனலான அல் ஜசீராவை மூடுவது, ஈரானுடனான உறவுகளை குறைத்துக் கொள்வது, துருக்கிய இராணுவ தளத்தை மூடுவது ஆகியவை அடங்கும்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த கத்தார், தனது நிதி ஆதாரங்களை பயன்படுத்தி தனது பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகளைக் குறைத்துக் கொண்டது.

இப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு தரப்பும் ஒப்பந்தத்தை எட்டும்படி வலியுறுத்தி வந்தார். அடுத்து அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடனும், சவுதி அரேபியாவின் மனித உரிமை மீறல்களை விமர்சித்து வரும் நிலையில், அவரது ஆதரவை பெறுவதற்கு சவுதி அரேபியா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று பார்வையாளர்கள் கருதுவதாக ft.com தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையேயான பகைமையின் காரணமாக, கத்தாரிலிருந்து செல்லும் விமானங்களும் கத்தாருக்கு வரும் விமானங்களும் ஈரானிய வான்வெளியை பயன்படுத்த வேண்டியிருப்பது ஈரானுக்கு ஆதாயமாக உள்ளது என்பதும் அமெரிக்க அரசுக்கு தொந்தரவாக இருந்ததாக அச்செய்தி கூறுகிறது.

ஆனால், கத்தாருக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் இந்த உடன்பாட்டை எதிர்த்து வந்தது.

இவ்வளவு மோசமான நெருக்கடியை முழுமையாக தீர்ப்பதற்கு கணிசமான காலம் பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுவதாக ft.com தெரிவிக்கிறது.

அல் ஜசீராவின் ஜமால் அல்-ஷய்யல் இது தொடர்பாக கருத்து கூறும் போது, “நியாயமற்ற, சட்ட விரோதமான முடக்கத்தை எதிர்கொள்ளும் போது விவாதிப்பதோ, ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதோ அர்த்தமற்றது என்று கத்தார் தரப்பு முன் நிபந்தனை விதித்திருந்தது.” என்று கூறியுள்ளார்.

“இப்போது எல்லைப் புற தடைகளை நீக்குவது பற்றிய அறிவிப்பு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான முக்கியமான படி” என்றும் அவர் கூறியுள்ளதாக அல் ஜசீரா தெரிவிக்கிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்