Aran Sei

140 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு – இந்த ஆண்டின் மிக கோரமான விபத்து

மேற்கு ஆப்பிரிக்காவின் செனெகல் நாட்டில் இருந்து அகதிகளுடன் கிளம்பிய படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது. அந்தப் படகில் சுமார் இருநூறு பேர் வரை பயணம் செய்துள்ளனர். அதில், சுமார் 140 பேர் வரை இறந்துள்ளனர். இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய கப்பல் விபத்து இது என ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) அறிவித்துள்ளது.

செனகல் தலைநகரமான டாகாரிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போர் எனும் இடத்தில் இருந்து கேனரி நோக்கி பயணத்தை தொடங்கிய படகு, சில மணி நேரங்களிலேயயே விபத்துக்குள்ளானதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது.

செனகலில் இருந்து படகு கிளம்பிய சில மணி நேரங்களிலேயே கப்பலில் இருந்து திடீரென்று அடர்த்தியான கரும்புகை வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மக்கள் கரையை நோக்கி வேகமாக நீந்தி வந்துள்ளனர். செனகல் மக்கள் மற்றும் ஸ்பானிஷ் கடற்படையினர் சுமார் 60 பேரை காப்பாற்றியுள்ளனர். மீதமிருந்த 140 பேரும் கடலில் மூழ்கிவிட்டனர் என ஐஒஎம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்காவின் செனகலில் இருந்து கேனரி தீவுகளுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 2019 ஐ ஒப்பிடும் போது இந்த ஆண்டு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 11,000 பேர் கேனரி தீவுகளுக்கு வந்துள்ளதாக ஐஓஎம் தெரிவித்துள்ளது. வறுமையில் இருந்து தப்பிப்பதற்கே மக்கள் கேனரி தீவுகள் நோக்கி பயணம் செய்துள்ளனர் என ஐஓஎம் கூறியுள்ளது.

மத்தியதரைக் கடலின் குறுக்கேயும் தெற்கு ஐரோப்பாவின் வழியாக மக்கள் வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், லிபியா அல்லது அல்ஜீரியா வழியாக அகதிகள் வருவதற்கு பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை எனவு ஐஒஎம் தெரிவித்துள்ளது.

செனகல் மக்களிடம் ஐரோப்பிய விசா இல்லாததால் இந்த ஆபத்தான (1400 கி.மீ) வழித்தடத்தில் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் மட்டும் இதுவரை 663 பேர் 14 படகுகளில் செனகலில் இருந்து கேனரி தீவுகளுக்கு சென்றுள்ளனர். படகுகளில் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டத்தினாலும் படகுகளின் மோட்டர்கள்  சரியாக பராமரிக்கபடாமல் இருப்பதாலும் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு தடவை கப்பல் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஐஓஎம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்