Aran Sei

சீனா முயற்சியில் உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா, அமெரிக்கா நிலை என்ன?

Image Credit - scmp.com

சீனா மற்றும் 14 ஆசிய நாடுகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளன. வியட்னாம் தலைநகரம் ஹனோயில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியாவில் உள்ள சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 10 நாடுகள் “பிராந்திய முழுமையான பொருளாதார கூட்டமைப்பு (RCEP)” என்ற இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.

இணைய வழியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் RCEP நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்களின் பின்னே அந்தந்த நாட்டு தலைவர்கள் நின்று கொண்டிருந்தனர். கையெழுத்திட்ட பின்னர் ஒப்பந்தத்தை ஊடகங்களுக்கு தூக்கிக் காட்டினர் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

“கையெழுத்திட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை தத்தமது நாடுகளில் நிறைவேற்றிய பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இது கொரோனா நோய்த்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பு செய்யும்” என்று வியட்னாம் பிரதமர் தெரிவித்திருக்கிறார். வியட்னாம் இப்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது, இந்த பிராந்திய உச்சி மாநாட்டை நடத்துகிறது.

இந்தக் கூட்டமைப்பில் வளர்ந்த, வளரும், ஏழை நாடுகள் பங்கேற்றுள்ளன. குறைந்த வளர்ச்சி கொண்ட நாடுகளான லாவோஸ், மயன்மார், கம்போடியா போன்ற நாடுகளுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட சிறப்பு விதிகளும், மாறிச் செல்லும் கட்டத்துக்கான ஏற்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று scmp.com தெரிவிக்கிறது.

இந்த மாபெரும் வர்த்தகக் கூட்டமைப்பு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வணிகத்துக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

இந்த “சுதந்திர வர்த்தக ஒப்பந்த” நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் 30% பங்கையும் உலக மக்கள் தொகையில் 30%-ஐயும் கொண்டிருக்கும், இந்த வர்த்தக ஒப்பந்தம் 220 கோடி நுகர்வோரை சென்றடையும் என்று வியட்னாம் தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் மூலம் உலகப் பொருளாதாரத்திற்கு $18,600 கோடி (சுமார் ரூ 13.95 லட்சம் கோடி) பங்களிப்பு கிடைக்கும் என்று நியூசிலாந்தின் வர்த்தக மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி அமைச்சர் கூறியிருப்பதாக scmp.com தெரிவிக்கிறது.

“பிராந்திய முழுமையான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது, கிழக்கு ஆசிய பிராந்திய ஒப்பந்தத்துக்கு மட்டுமின்றி சர்வதேசவாதத்துக்கும், சுதந்திர வர்த்தகத்துக்கும் ஒரு மைல் கல். இது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்துதலைக் கொடுக்கும்” என்று சீன பிரதமர் லி கெ சியாங் கூறியுள்ளார்.

“சீனாவும் ஜப்பானும் முதல் முறையாக ஒரு வரிக் குறைப்பு ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கின்றன. இது ஒரு வரலாற்று சாதனை” என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வர்த்தகக் கழக விதிகளின் கீழ் இரு நாடுகளும் பெருமளவு இருதரப்பு வர்த்தகம் செய்து வந்தாலும் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இதுவரை போடப்படவில்லை என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஒபாமா அதிபராக இருந்த போது அமெரிக்கா முன் வைத்திருந்தது. பசிபிக் கூட்டமைப்பு (TPP) என்ற அந்த கூட்டமைப்பிலிருந்து 2017-ல் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியேறியது. 11 நாடுகளைக் கொண்ட இந்தக் கூட்டமைப்பு 2018-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இப்போது அமெரிக்காவானது, உலகின் முக்கியமான ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் இரண்டு வர்த்தகக் கூட்டமைப்புகளிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.

Image Credit - thehindu.com
Image Credit – thehindu.com

இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தையிலிருந்து கடந்த நவம்பர் மாதம் விலகிக் கொண்டது. கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிந்தைய உலகில் சீனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இந்தியா பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்கவில்லை. RCEP உறுப்பினர்கள் வேண்டுதல் விடுத்தும் கூட இந்தியா பேச்சு வார்த்தைக்குத் திரும்பவில்லை என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

இனிமேல், இந்தியா இதில் இணைய விரும்பினால் தான் இந்த ஒப்பந்தத்தில் இணைய விரும்புவதாக என்ற இந்தியா கோரிக்கையை அனுப்பிய பிறகு RCEP கூட்டமைப்பு அதை பரிசீலிக்கும் என்று அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 12-ம் தேதி தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, இந்த பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாலும், RCEP தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லைப் பகுதியில் மோதல் நடந்து பதற்றம் நிலவும் நிலையில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா நாற் தரப்பு கடற்படை பயிற்சியை சமீபத்தில் நடத்தியது. ஆனால், இந்த நடவடிக்கைகள் ஆஸ்திரேலியா, ஜப்பான் இரண்டும் RCEP வர்த்தகக் கூட்டமைப்பில் இணைவதை பாதிக்கவில்லை என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

“இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மிகவும் முக்கியமானது. ஜப்பான் மற்றும் தென் கொரிய சந்தைகளில் சீனா பங்கேற்பதற்கு இது பெருமளவு உதவி செய்யும். கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது சீனாவுக்கு மிகவும் சாதகமானது” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர் அமிதேந்து பாலித் கூறியிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்