Aran Sei

‘ பிரெக்சிட் ஒப்பந்தம் ‘ எட்டப்பட்டது – ” மிகக் குறைந்த அளவு மோசமானது “

ஐக்கிய முடியரசு பிரதமர் போரிஸ் ஜான்சன் - Image Credit : ndtv.com

ங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து அடங்கிய ஐக்கிய முடியரசு (யுகே), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய (பிரெக்சிட்) பிறகான உறவுகள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் கடைசிக் கட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.

யுகே பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக செயல்படும் உர்சுளா வான் டெர் லேயனுக்கு இடையேயான, இணைய வழி உரையாடலைத் தொடர்ந்து இரு தரப்பும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக ஒப்பந்தம் 2000 பக்கங்களைக் கொண்டது என்றும் அது அமைதிக்கான அணுசக்தி ஒத்துழைப்பு முதல், எரிசக்தி தொடர்புகள், மீன் பிடித்தல், விமான போக்குவரத்து உள்ளிட்டு பல துறைகளை உள்ளடக்கியது என்றும் தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

ஐரோப்பிய ஒற்றைச் சந்தை மற்றும் ஒன்றுபட்ட சுங்கப் பகுதியில் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 27 நாடுகள்  (ஐக்கிய முடியரசைச் சேர்க்காமல்) இணைந்துள்ளன. இந்த நாடுகளுக்கிடையே பொருட்கள், சேவைகள், தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தன.

எனவே, தொழில் நிறுவனங்களின் பொருட்களும், இந்த நாடுகளின் குடிமக்களும் நாட்டு எல்லையைத் தாண்டிச் செல்லும் போது எந்த விதமான சோதனைகளோ, வரி விதிப்போ, கட்டுப்பாடுகளை இல்லாமல் சுதந்திரமான வர்த்தகம், இடம் பெயர்தல் நடந்து கொண்டிருந்தது.

உலக மக்கள் தொகையில் 5.8%-ஐக் (சுமார் 44 கோடி) கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆண்டு உற்பத்தி 2019-ல் $15.5 லட்சம் கோடியாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் 24 மொழிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய சமுதாயங்கள் அமைப்பில் 1973-ல் இணைந்த ஐக்கிய முடியரசு, கடந்த 2016-ல் நடந்த ஒரு பொதுக் கருத்துக் கேட்பில், அதிலிருந்து வெளியேறுவதாக முடிவு செய்தது. அந்தக் கருத்துக் கணிப்பில் 1.7 கோடி (52%) பேர் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை ஆதரித்தும், 1.61 கோடி (48%) பேர் அதை எதிர்த்தும் வாக்களித்தனர்.

இதை பிரெக்சிட் என்று அழைக்கிறார்கள் (பிரிட்டன் எக்சிட் – பிரிட்டன் வெளியேறுவது).

அந்த முடிவின்படி, 2017-ம் ஆண்டு ஐக்கிய முடியரசு விலகுவது தொடர்பான அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கொடுத்தது. இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி ஐக்கிய முடியரசு அதிகார பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது. அதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து அது துண்டித்துக் கொண்டது.

இருப்பினும், மாறிச் செல்லும் கால கட்டத்தில் பொதுச் சந்தை, சுங்க ஒன்றியம் தொடர்பான பொது விதிகள் ஐக்கிய முடியரசுக்கு பொருந்தும். அது வரும் டிசம்பர் 31-ம் தேதியோடு முடிவடைகிறது.

ஜனவரி 1 முதல் ஐக்கிய முடியரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே பொருட்கள் போக்குவரத்து, மக்கள் போக்குவரத்து தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தன. கடைசி கட்டம் வரை உடன்பாடு ஏற்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது.

முக்கியமாக, அயர்லாந்து தீவில் உள்ள ஐக்கிய க்முடியரசின் வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையேயான எல்லை தொடர்பாகவும், பிரிட்டனைச் சுற்றிய கடலில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை தொடர்பாகவும், அரசு மானியங்கள் தொடர்பாகவும், தொழிலாளர் மற்றும் சுற்றுச் சூழல் ஒழுங்குமுறை தொடர்பாகவும் உடன்பாடு ஏற்படுவது இழுபறியாக இருந்து வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இப்போது உடன்பாடு ஏற்பட்டு, ஜனவரி 1 முதல் இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தக மற்றும் குடிமக்கள் உறவுகளுக்கான புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இதன் மூலம், ஐக்கிய முடியரசின் வெளியேற்றத்துக்குப் பிறகு அந்நாட்டுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் குழப்பமும் பதற்றமும் நிலவும், வர்த்தகமும் தொழில்களும் கடுமையாக பாதிக்கும் என்ற அச்சம் ஓரளவு தணிக்கப்பட்டுள்ளது.

இது தனது மகத்தான வெற்றி என்று ஐக்கிய முடியரசின் பிரதமரான டோரிக் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், மிகக் குறைந்த அளவு மோசமான ஒப்பந்தம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கருத்து கூறியுள்ளதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 2019-ல் 66,800 கோடி யூரோ அளவிலான பொருட்களுக்கான வர்த்தகத்துக்கு “சுங்க வரி இல்லாத, ஒதுக்கீடு இல்லாத” வர்த்தகத்தை ஐக்கிய முடியரசுக்கு உத்தரவாதம் செய்கிறது. ஆனால், ஏற்றுமதி நிறுவனங்கள் பல எல்லைச் சோதனைச் சாவடிகளோடு தொடர்புடைய செலவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும்பாலான ஐக்கிய ராஜ்ய குடிமக்கள் ஐரோப்பிய முடியரசுக்குள் சுதந்திரமாக பயணிப்பது முடிவுக்கு வரும் என்றும் தி கார்டியன் செய்தி கூறுகிறது.

ஐக்கிய முடியரசின் நிதிநிலை பொறுப்பு அலுவலகம் பிரெக்சிட் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மத்திய கால நோக்கில் 4% வரை குறையும் என்று மதிப்பிட்டுள்ளது.

பிரிட்டன் தீவின் கரைகளில் இருந்து 12 மைல்கள் தூரம் வரையிலான மீன்பிடிக்கும் பகுதியின் கட்டுப்பாட்டை பெறத் தவறியது குறித்து பிரிட்டிஷ் மீனவர்கள் பிரதமர் ஜான்சன் மீது அதிருப்தி தெரிவித்துள்ளதாக தி கார்டியன் செய்தி கூறுகிறது.

இந்த ஒப்பந்தத்துக்கு ஐக்கிய முடியரசு நாடாளுமன்றத்திலும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்