Aran Sei

மதம் தேசபக்தி பெயரால் பெண்கள் உரிமை மறுப்பு – போலந்தில் பரவும் போராட்டம்

பெண்கள் தம் வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதற்கான உரிமையை மேலும் மட்டுப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போலந்து நாட்டில் ஒரு வாரமாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல பத்தாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற வாரம் வியாழக்கிழமை வெளியான நீதிமன்றத் தீர்ப்பின்படி “கருவில் குறைபாடுகள் இருப்பதன் காரணமாகக் கருக்கலைப்பு செய்வது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது”. இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய முடியாது.

இதுவரை போலந்து சட்டத்தின்படி கருவிற்கு அசாதாரணமான குறைபாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டாலோ, தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலோ, பாலியல் வல்லுறவு, முறைகேடான கர்ப்பம் ஆக இருந்தாலோ கருக்கலைப்பு செய்யலாம். ஆனால், சென்ற ஆண்டு நடத்தப்பட்ட 1,100 கருக்கலைப்புகளில் 1,074 கருவில் இருக்கும் குறைபாடுகள் காரணமாகச் செய்யப்பட்டன.

1990-களுக்கு முன்பு, கம்யூனிஸ்ட் ஆட்சியில் போலந்திலும் சோவியத் முகாம் அரசுகளிலும் மிகவும் தாராளமான கருக்கலைப்புச் சட்டங்கள் அமலில் இருந்தன. பெண் உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஸ்வீடனைச் சேர்ந்த பெண்கள் போலந்துக்குச் சென்று கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு உதவி வந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, 1993-ல் போலந்தில் கருக்கலைப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. அது மேலே சொன்னபடி விதிவிலக்கான நிலைமைகளைத் தவிர்த்து கருக்கலைப்பை தடை செய்தது.

பல மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுத்து விடுவதாலும், நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் பல பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றே கருக்கலைப்பு செய்துகொள்ள வேண்டிய நிலை இருந்தது என்கிறது நியூயார்க் டைம்ஸ். போலந்து சட்டத்தின்படி, சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்வதற்குக் கூட மறுக்கும் உரிமை மருத்துவர்களுக்கு உள்ளது. மத காரணங்களைக் காட்டி கருத்தடைச் சாதனங்களைப் பரிந்துரைக்க மறுக்கவும் மருத்துவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தற்போது, கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், கர்ப்ப காலத்தின் குறிப்பிட்ட கட்டம் வரையில் பெண்கள் கோரும்போது கருக்கலைப்பை அனுமதிக்கின்றன. அமெரிக்காவிலும் அத்தகைய சட்டம் இருந்தாலும், பல மாநிலங்கள் கருக்கலைப்பை செய்து கொள்வதில் பல முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியுள்ளன.

போலந்தில் 2015-ல் ஆட்சியைப் பிடித்த சட்டம் மற்றும் நீதிக் கட்சி தன்னைப் பாரம்பரிய, கத்தோலிக்க மரபுகளைப் பாதுகாக்கும் காவலனாகக் கூறிக் கொள்கிறது. தனது எதிர்ப்பாளர்களைப் போலந்து விரோதிகள், கிருத்துவ விரோதிகள் என்று பழிக்கிறது. போலந்து பெண்களை மனைவியராகவும், தாய்மார்களாகவும் பார்ப்பது அவர்களது உலகப் பார்வையின் மையமாக உள்ளது, பெண்கள் உரிமைக் குழுக்களை மேற்கத்திய பிரச்சாரத்துக்கான அபாயகரமான ஏஜென்டுகள் என்று சித்திரிக்கிறது.

இத்தகைய, பழமைவாத அரசு கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தை மேலும் கடுமையாக்குவதற்குப் பலமுறை முயன்று நாடாளுமன்றத்தில் அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. இந்நிலையில் ஆளும் கட்சி நீதிமன்றத்தின் மூலமாக தனது கொள்கையை நிறைவேற்றியிருக்கிறது.

வலது சாரி அரசு நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பெண்களின் உரிமைகளையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஐரோப்பாவில் நிகழ்ந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள் நெருக்கடியின் போது சட்டம் மற்றும் நீதிக் கட்சி புலம்பெயர்ந்தவர்களைக் கிருத்துவ நாகரிகத்துக்கு எதிரானவர்கள் என்று சித்திரித்தார். அதைத் தொடர்ந்து சமீபத்திய அரசியல் இயக்கங்களில் ஓரின இணையரை போலந்து வாழ்க்கைமுறைக்கும் மதிப்பீடுகளுக்கும் எதிரானவர்கள் என்று தாக்கினர் என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

பெரும்பாலான போலந்து மக்கள் கருக்கலைப்பு மீதான கட்டுப்பாடுகளை எதிர்க்கின்றனர். கருக்கலைப்பு உரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முறையும் அவை மக்கள் போராட்டத்தை எதிர் கொண்டிருக்கின்றன என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஐரோப்பாவிலேயே மிகவும் கடுமையான போலந்தின் கருக்கலைப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துச் சென்ற வியாழக்கிழமை போராட்டங்கள் தொடங்கின. ஆனால், இந்தப் போராட்டங்கள் வலதுசாரி அரசுக்கு எதிரான பொதுவான எதிர்ப்பாக மாறின.

போராட்டத்துக்கு டாக்சி ஓட்டுநர்கள், விவசாயிகள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்கிறது நியூயார்க் டைம்ஸ் செய்தி. போராட்டத்தின் 6-வது நாளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் பத்தாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டும் அலுவலகங்களை விட்டும் வெளியேறிப் போராட்டத்தில் குதித்தனர். பிரதான சாலைகளையும் பாலங்களையும் மறித்து அரசு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியும் வருகின்றனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த துணை பிரதமர் ஜரோஸ்லா கசின்ஸ்கி, “போலந்தை பாதுகாப்போம், தேசபக்தியைப் பாதுகாப்போம், போலந்து திருச்சபைகளைப் பாதுகாப்போம்” என்று தனது பழமைவாத ஆதரவாளர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். “இதன் மூலம்தான் நாம் இந்தப் போரில் வெற்றி பெற முடியும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

கிராக்கோவில் ஆயிரக்கணக்கானோர் பேரணி
கிராக்கோவில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் உரிமைப் போராட்டக்காரர்கள் “இது போர்”, “இதற்கு மேல் பொறுக்க மாட்டோம்” என்ற பதாகைகளைத் தாங்கிச் சென்று போலந்து முழுவதும் சர்ச் வழிபாட்டுக் கூட்டங்களைச் சீர்குலைத்தனர்.

ஆண்களும் பெண்களும் சில இடங்களில் மதகுருக்களை எதிர்த்து நின்றனர். சர்ச்சுகளின் சுவர்களில் எதிர்ப்பு ஓவியங்களை வரைந்தனர். போலந்து தலைநகர் வார்சாவின் புறநகர்ப் பகுதியில் போப் ஜான் பால் II-ன் சிலை மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது. கத்தோலிக்க தேசமான போலந்தில் இது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயலாக முன்பு இருந்தது.

தீவிர பழமைவாதச் செயல்பாட்டாளர்கள் சர்ச்சுகளைப் பாதுகாத்தும் போராட்டக்காரர்களை எதிர்த்தும் சில சமயம் வன்முறையைப் பயன்படுத்தித் தாக்கி வருகின்றனர். இது அரசுக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் தீவிர வலதுசாரி குழுக்களுக்கும் இடையேயான கூட்டணியைக் காட்டுகிறது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

லோட்சில் உள்ள கதீட்ரலில் போராட்டக்காரர்கள்
லோட்சில் உள்ள கதீட்ரலில் போராட்டக்காரர்கள்

அரசியல் சட்ட தீர்ப்பாயம் தனது தீர்ப்பை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றும் கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தைத் தாராளமயமாக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.

போலந்தில் கருக்கலைப்பு உரிமையை மட்டுப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அதே நாளில் அமெரிக்கா மற்றும் உகாண்டா, பெலாருஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் கருக்கலைப்பு உரிமையை எதிர்க்கும் ஜெனீவா கருத்து பிரகடனத்தை வெளியிட்டிருக்கின்றன.

செய்தி & படங்கள் – நன்றி nytimes.com

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்