Aran Sei

’ஜோ பைடனுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினேன்’ – பிரதமர் மோடி

நேற்று (நவம்பர் 17) மாலை (இந்திய நேரம்) , அமெரிக்க அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ  பைடனுடன், இரு நாட்டு உறவுகள் குறித்து தொலைப்பேசியில் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், “அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனை தொலைபேசியில் வாழ்த்தினேன். ’இந்திய-அமெரிக்க’  உறவு, கோவிட் தொற்று நோய், கால நிலை மாற்றங்கள், இந்தோ-பிசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட வேண்டிய ஒற்றுமைகள் போன்றவற்றை குறித்து விவாதித்தோம்.” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸை வாழ்த்தியுள்ளார்.

அதில், ”துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது வெற்றி இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. மேலும் இந்திய-அமெரிக்க சமூக மக்களுக்கு மிகுந்த பெருமையையும் உக்கத்தையும் அளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸின் தாய்  தமிழ்நாட்டில் இருந்தும் , அவரது தந்தை ஜமைக்காவிலிருந்தும் அமெரிக்காவில் குடியேறியவர்கள்.

ஜோ பைடனுடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​ அவர் 2014-ம் ஆண்டு துணை அதிபராக இந்தியாவிற்கு வந்ததையும் , பின் ​​2016-ம் ஆண்டில், அமெரிக்க காங்கிரசின் கூட்டு மாநாட்டிற்கு தலைமை தாங்கிய போது வந்ததையும், ​​பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார் என்று ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் அழைப்பு குறித்து, ஜோ பைடனின் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,”பிரதமரின் வாழ்த்துக்களுக்கு அதிபர் (தேர்வு) நன்றி தெரிவித்தார். மேலும் தெற்காசிய பூர்வீகத்தை சேர்ந்த முதல் துணை அதிபருடன்,  அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.” என்று கூறப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

நன்றி : Twitter

மோடி – ட்ரம்ப் உறவு

பிரதமர் மோடியும் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பகிரங்கமாகவே தங்கள் நட்பை  வெளிக்காட்டிக் கொண்டனர். 2019-ம் ஆண்டு ஹூஸ்டனிலும், 2020-ம் ஆண்டு அகமதாபாத்திலும் நடந்த பேரணிகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, இந்திய அமெரிக்க வாக்காளர்களை கவர, இதை ட்ரம்ப் பயன்படுத்திக்கொண்டார் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்