தென் அமெரிக்க நாடான பெருவில், புதிய இடைக்கால அதிபர் பிரான்சிஸ்கோ சாகஸ்தி, கடந்த நவம்பர் 17 அன்று கடுமையான சூழ்நிலையில் பதவியேற்றுள்ளார்.
பெருவில் ஒரே வாரத்தில் மூன்று அதிபர்கள் மாறியுள்ளனர். மூன்றாவதாகப் பிரான்சிஸ்கோ சாகஸ்டி பதவியேற்றுள்ளார். இதற்கு முன், அதிபர் மார்ட்டின் விஸ்கார்ரா மீது வைக்கப்பட்ட ‘தார்மீக இயலாமை’ எனும் அரசியல் குற்றச்சாட்டின் காரணமாக அவர் பதவி விலகினார். பெருவைச் சேர்ந்த பலர் இதைக் காங்கிரஸின் சதித்திட்டமாகக் கருதினர். அதன் பிறகு, காங்கிரஸ் தலைவர் மானுவல் மெரினோ அதிபராகப் பதவி ஏற்றார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்குத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதிய அதிபர், 2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பெரு மக்களைத் தயார் செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும்.
இது ஒரு பெருவிய தலைவருக்குப் புதிதாக ஏற்படும் சூழ்நிலை அல்ல. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் அதாவது சர்வாதிகாரி ஆல்பர்டோ புஜிமோரியின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெருவில் பல அரசியல் தலைவர்கள் இதே போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டனர். ஆனால், இறுதியில் தோல்வியடைந்தனர்.
நவம்பரில் 6 நாட்களுக்கு அடக்குமுறை நிலவியது ஏன் என்பதை 20 ஆண்டுகளுக்கு முன் தலைவர்கள் எதிர்கொண்ட தோல்வி விளக்குகிறது என்று அரசியல் விஞ்ஞானி ஆல்பர்டோ வெர்கரா கூறியுள்ளார். தற்போது, போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமான கொடிய வன்முறையை எதிர்கொள்கின்றனர். கடத்தல், சித்ரவதை, சட்டவிரோதத் தடுப்புக்காவல் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளனர். பெரு காவல்துறையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்தன
1990-ம் ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டுக்கு இடையே, ஆல்பர்டோ புஜிமோரியின் ராணுவ ஆட்சியின் போது, பெருவின் ஜனநாயக நிறுவனங்கள் தகர்க்கப்பட்டு அதன் மதிப்புகள் அழிக்கப்பட்டன. கருத்து வேறுபாடு உள்ளவர்கள் கடத்தப்பட்டனர், அவர்கள் மரணம் மற்றும் சித்ரவதைகளை எதிர்கொண்டனர்.
தேர்தல் மோசடி மற்றும் வெகுஜன மக்கள் எழுச்சியின் காரணமாக ஆல்பர்டோ புஜிமோரியின் ஆட்சி 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அவர் காங்கிரஸால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகக் காங்கிரஸ் தலைவர் வாலண்டன் பனியாகுவா நியமிக்கப்பட்டார்.
தற்போது பிரான்சிஸ்கோ சாகஸ்திக்கு ஏற்பட்டுள்ளது போல் ஒரு நிர்பந்தம் வாலண்டன் பனியாகுவாவுக்கும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டிருந்த தேசத்தை முறையான ஜனநாயக மாற்றத்திற்கு இட்டுச் சென்று சமூகத்தை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு அவரிடம் இருந்தது.
ஆல்பர்டோ புஜிமோரியின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த வாலண்டன் பனியாகோவா 2001-ம் ஆண்டில் ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். எதிர்காலத்திலும் பெருவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தேவையான கட்டமைப்பு மாற்றங்களை அடையாளம் காணும் வகையில் ஓர் அரசியலமைப்பு ஆணையத்தை உருவாக்கினார்.
வாலண்டன் பனியாகோவாவுக்குப் பிறகு வந்தவர்கள் அவரது முயற்சிகளைக் பொருட்படுத்தவில்லை.
இந்த உண்மையறியும் ஆணையக்குழு அரசின் குற்றங்களை மிக நுணுக்கமாக ஆவணப்படுத்தியது. 2009-ம் ஆண்டு ஆல்பர்டோ புஜிமோரி மனித உரிமை மீறலுக்காகத் தண்டனை பெற்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாக ஏழை, கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்கான நிவாரணங்கள் போதுமானதாக இல்லை.
வாலண்டன் பனியாகோவாவுக்குப் பின் வந்தவர்கள் பெருவுக்குப் புதிய அரசியலமைப்பு தேவை எனும் வாதத்தை மறுத்துவிட்டனர். புதிய அரசியலமைப்பை ஏற்றியிருந்தால் காங்கிரஸைக் கலைப்பது எளிதாக இருந்திருக்காது.
அதற்குப் பதிலாக, ஆல்பர்டோ புஜிமோரிக்குப் பிறகு ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான அலெஜான்ட்ரோ டோலிடோ, ‘தேசிய ஒப்பந்தத்தில்’ சில சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அரசு, சிவில் சமூகம் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்த ஆவணம், பெருவின் ஜனநாயக மாற்றத்திற்கான அடிப்படையை அமைத்தது. மேலும், தேசிய நலனுக்கான முன்னெடுப்பாகக் கருதப்பட்டது.
ஆனால் பெருவின் நீண்டகால நிர்வாகச் சிக்கல்களைச் சமாளிக்க இது சிறிதும் உதவவில்லை. பொது மற்றும் தனியார் முதலீடு மீதான சமூகக் கட்டுப்பாடுகள் பலவீனமாகவே இருந்தன. ஊழல் நிறைந்த நீதித்துறை நியமனங்கள் காரணமாகப் பெருவின் நீதிமன்றங்களும் அவ்வாறே செயல்பட்டன.
சீரற்ற வளர்ச்சி
பெருவில் நடைபெற்ற சீர்த்திருத்தங்களில் உள்ள குறைபாடு, சமீபத்தில் வெளியாகியுள்ள லாவா ஜாடோ ஊழலின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் கட்டுமான நிறுவனங்கள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள அரசியல்வாதிகளுக்குப் பெரும் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர்.
2016 முதல், நான்கு பெருவியன் ஜனாதிபதிகள் மற்றும் ஆல்பர்டோ புஜிமோரியின் சொந்த மகள் லாவா ஜாடோவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் 85% மக்கள், “அதிகாரம் படைத்த சிலர் தங்கள் சொந்த நலனுக்காக ஆளுகிறார்கள்” என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஊழலால் சுமார் 6.5 பில்லியன் டாலரை பெரு இழக்கிறது என்று தேசியத் தணிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கனிம, எரிவாயு அஸ்பாரகஸ், திராட்சை போன்றவற்றின் உற்பத்தியால், பெருவின் பொருளாதாரம் 2000-ம் ஆண்டிலிருந்து வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் நிகழ்ந்தாலும், பெருவின் கிராமப்புறங்கள் மிகவும் ஏழ்மையில் உள்ளன.
பிரான்சிஸ்கோ சாகஸ்திக்கு முன்னுள்ள பணி
அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் காவல்துறையின் சீர்த்திருத்தம் ஆகியவை போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
2000-ம் ஆண்டு எழுந்த கோரிக்கையைப் போல், தற்போதும் அரசியலமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கை எழுந்துள்ளது.
இன்று, விழிப்போடு இருக்கும் பெருவின் இளம் போராட்டக்காரர்கள் ஜனநாயக எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள்.
(தி கான்வர்சேஷனில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.