Aran Sei

பாகிஸ்தானில் இந்து கோயிலுக்கு அனுமதி – இஸ்லாமிய மதகுருக்கள் முடிவு

Image Credits: Deccan Herald

பாகிஸ்தான் அரசின் மதகுருக்கள் குழு, அங்கு ஒரு புதிய இந்துக் கோவில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இக்குழு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு மத பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும். தற்போது, இந்தக் குழு, அங்குள்ள சிறுபான்மை இந்துக்களுக்காக ஒரு புதிய கோவில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமிய சட்டம் அவர்களுக்கான வழிபாட்டுத் தலத்தை அனுமதிப்பதாகவும் குழுவினர் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானின் நாடாளுமன் உறுப்பினரும் முக்கிய இந்து தலைவருமான லால் மல்ஹி இந்த முடிவை வரவேற்றுள்ளார். ஆனால், தனியார் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதில் பொது நிதியை நேரடியாகச் செலவிட வேண்டாம் என்றும் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் ஜூன் மாதம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோயில் கட்டுமானத்தைத் திடீரென நிறுத்தியதை அடுத்து இஸ்லாமிய மத குருக்கள் குழுவின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இம்ரான் கான் கோயில் கட்டுமானத்தை நிறுத்தினார் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சில அடிப்படைவாதிகள் கோயில் கட்டுமானத்தைத் தடுப்பதற்கான சபதத்தை எடுத்தனர். இது பதட்டத்தை அதிகரித்தது. ஆகையால், கோயில் கட்டுமானத்தில் பொது நிதியைச் பயன்படுத்தலாமா என்பதை குறித்து முடிவெடுக்க இம்ரான் கான் மதகுருக்கள் குழுவை நாடினார். முன்னதாக, கட்டுமானத்துக்கு 6,00,000 டாலர் வழங்குவதாக அவர் உறுதி அளித்தார்.

குழுவின் முடிவுக்கு இணங்க, இம்ரான் கான் நிதியை வழங்குவாரா என்பதை பற்றிய செய்தி உடனடியாக வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், குழுவின் முடிவுப்படி, இந்து சமூகத்திற்கு நிதியை விநியோகிக்க வாய்ப்புள்ளது.

சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ள இம்ரான் கான், கோவிலின் கட்டுமானத்தை அனுமதிக்க முறையான உத்தரவைப் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​இஸ்லாமாபாத்தில் இந்துக் கோவில் எதுவும் இல்லை. ஒரு பழங்கால கோவில் உள்ளது, இருப்பினும் இந்துக்கள் தாக்குதல்களுக்கு அஞ்சி அதைப் பயன்படுத்துவதில்லை என தி இந்து செய்தி குறிப்பிட்டுள்ளது.

10 லட்ச மக்கள் தொகையைக் கொண்ட இஸ்லாமாபாத்தில், சுமார் 3,000 இந்துக்கள் வசிக்கிறர்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்