Aran Sei

அமைதிக்கான நோபல்: வறுமையை எதிர்த்துப் போராடும் அமைப்பு

றுமையில் துன்பப்படும் மக்களுக்கு 58 ஆண்டுகளாக உணவு அளித்து உதவியுள்ள உலக உணவுத் திட்ட அமைப்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பசியை எதிர்கொண்டு உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதில் இந்த அமைப்பு பெரும் பங்காற்றி உள்ளது. 2019-ம் ஆண்டில் மட்டும் 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு இந்த அமைப்பு உதவியுள்ளது.

பசியை எதிர்த்துப் போராடும் முயற்சி, மோதல்கள் மிகுந்த பகுதிகளில் அமைதிக்கான சூழலை மேம்படுத்துவதில் செலுத்தியுள்ள பங்களிப்பு, பசி மற்றும் வறுமையைப் போருக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுத்து வந்துள்ள காரணங்களுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

 

”கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினால், உலகம் முழுக்கப் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளாது. இதை எதிர்கொள்ளவும் உலக உணவுத் திட்ட அமைப்பு தனது முயற்சிகளை வெகுவாகத் தீவிரப்படுத்தி இருக்கிறது.” என நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசினை உலக உணவுத் திட்ட அமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களை நோக்கி உலகின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும் குழு தெரிவித்துள்ளது.

Credits: The Nobel Prize Twitter
“மருத்துவத் தடுப்பு மருந்து கிடைப்பது வரை, குழப்பங்களுக்கு எதிரான மிகச் சிறந்த தடுப்பு மருந்து உணவுதான்”

அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டுள்ளது குறித்து உலக உணவுத் திட்ட அமைப்பின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லே, “உலகம் முழுவதும் இருக்கும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள, உதவி தேவைப்படும் மக்களை நாம் மறந்துவிடக் கூடாது.” என்று கூறியிருக்கிறார்.

Credits: AP News

”இந்த வேளையில் உலகுக்கு இந்தச் செய்தியை எடுத்துரைப்பதை மிக அவசியமாகக் கருதுகிறேன். அமைதிக்கான பரிசு எல்லா ஆண்டுகளும் வழங்கப்படுவதுதான் என்றாலும், இது எங்கள் அமைப்புக்கு, மக்களுக்காகப் பாடுபட்டு உழைத்து வரக்கூடிய எங்கள் அமைப்பினர் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அங்கீகாரம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

தனிநபருக்கு அல்லாமல் ஒரு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது இது முதல்முறை இல்லை.

1977-ம் ஆண்டு மனித உரிமைக்காகச் செயல்பட்டு வரும் அம்னெஸ்டி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.

1999-ல் பல்வேறு நாடுகளில் மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களின் குழுவான ‘எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்’ குழுவுக்கு வழங்கப்பட்டது.

அதே போல 2017-ம் ஆண்டு அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சார அமைப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இதனிடையே, நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் கடந்த செப்டம்பர் மாதம், 2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்-க்கு வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்து இருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்