Aran Sei

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு உறுதியானது

image credit : indianexpress.com

நேபாள நாட்டின் ஆளும் கட்சிக்கு நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை பயன்படுத்த உரிமை இல்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீர்ப்பு அளித்திருந்தது.

புஷ்ப கமல் தகால் என்ற பிரச்சந்தா தலைமையிலான முன்னாள் மாவோயிஸ்ட் போராளிகளின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்)யும், பிரதமர் கே.பி ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – யூஎம்எல்-ம் ஆகிய இவ்விரு கட்சிகளும் இணைந்து, 2018-ம் ஆண்டு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.

இந்தப் பெயர் ரிஷி கட்டெல் என்பவர் தலைமையிலான கட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், இணைந்த கட்சிக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை வழங்கியது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, நேபாளத்தின் தேர்தல் ஆணையமும் உறுதி செய்ததைத் தொடர்ந்து, ஆளும் கட்சியின் இரண்டு பிரிவுகளும் தனிக் கட்சிகளாகி விட்டன.

2018-ம் ஆண்டில் இவ்விரு கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு  பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து கே.பி ஷர்மா ஒலி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது.

இப்போது, கே.பி.ஷர்மா தலைமையிலான கட்சியும் (121 நாடாளுமன்ற உறுப்பினர்கள்), பிரச்சந்தா தலைமையிலான கட்சியும் (53 நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மீண்டும் தனித்தனியாக ஆகி விட்டதால், நாடாளுமன்றத்தில் (மொத்த உறுப்பினர்கள் 275) பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியின் கட்சிக்கு பெரும்பான்மை  போய் விட்டது.

அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பதைப் பற்றி கட்சிக்குள் விவாதித்து வருவதாக பிரச்சந்தாவின் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்)-ன் உறுப்பினர்  கிரிராஜ்மணி பொக்கரல் கூறியிருப்பதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

பிரதமர் கே.பி ஷர்மா ஒலி கடந்த டிசம்பர் மாதம், தனது கட்சி உறுப்பினர்கள் (பிரச்சந்தா குழுவினர்) ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல்களை நடத்த முடிவு செய்ததை அடுத்து நேபாளம் அரசியல் நெருக்கடியில் சிக்கியது.

பிரதமர் ஒலி கட்சியிலிருந்து நீக்கம் – நேபாளத்தில் அரசியல் சட்ட நெருக்கடி

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று நாடாளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பித்து நேபாள உச்சநீதிமன்றம் பிப்ரவரி 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேபாள நாடாளுமன்றம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூடியுள்ளது.

நேபாளம் – கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பித்தது உச்சநீதிமன்றம்

இந்த நாடாளுமன்ற கூட்டத்தை பிரச்சந்தா தலைமையிலான குழு புறக்கணித்தது என்று லைவ்மின்ட் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்