Aran Sei

நேபாளம் – எல்லை பேச்சுவார்த்தை நடத்த இந்தியா மறுப்பு

Image Credit : thehindu.com

காலாபானி, லிபுலேக், லிம்பியுதாரா பகுதிகளில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வந்திருந்த நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“பிரச்சினை இல்லாத, அமைதியான, நிலையான எல்லையை உறுதி செய்ய நேபாளம் இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புகிறது. இந்த வரலாற்று சுமைகளிலிருந்து எதிர்கால சந்ததியினர் விடுதலை பெறுவதற்கு இது அவசியம்” என்று அவர் பேசியுள்ளார்.

பிராந்திய வர்த்தக உறவைப் பாதிக்கும் எல்லைப் பிரச்சனை

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்த நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் க்யாவாலி, சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களிடம் பேசியுள்ளார்.

முன்னதாக, இந்தியா-நேபாளம் கூட்டு ஆணைய சந்திப்பில் அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் கலந்து கொண்டார். சனிக்கிழமை, திரு பிரதீப் கியாவாலி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கத்துக்கு மாறாக, பிரதமர் மோடி திரு பிரதீப் கியாவாலியை சந்திக்கவில்லை என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

இந்திய-நேபாள எல்லை தொடர்பான பிரச்சினை வெடித்த பிறகு இது முதல் நேபாள அமைச்சர் மட்டத்திலான வருகை என்று தி ஹிந்து குறிப்பிடுகிறது.

பிரதமர் ஒலியின் அரசு ஒரு சார்பாக தனது நில வரைபடத்தை திருத்தியதை, மாற்றிக் கொள்ளாதது வரை இந்தியா எல்லை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்று இந்திய தரப்பு கூறி விட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

நேபாள் ஒரு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறிய பிரதீப் கியாவாலி, நவம்பர் 2019-ல் இந்தியா தனது நில வரைபடத்தை வெளியிட்ட பிறகுதான் நேபாளம் தனது வரைபடத்தை வெளியிட்டது என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் தொடர்ந்து வரும் அரசியல் நெருக்கடியில் இந்தியா தலையிட விரும்பவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது. நேபாளத்தின் உள்நாட்டு அரசியலில் ஒரு காரணியாக இருக்க விரும்பவில்லை என்று இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது.

நேபாளத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் கே பி ஷர்மா ஒலி தரப்புக்கும் கட்சித் தலைவர் பிரச்சந்தாவக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழு ஒன்று நேபாள தலைநகர் காட்மாண்டு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு! 

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரச்சந்தா, பிரதமர் ஒலிக்கும் இந்திய அரசுக்கும் கூட்டு இருப்பதாகவும் அதுதான் இப்போதைய அரசியல் பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் கூறியிருப்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.

நேபாளம் சென்றுள்ள சீனக் குழு – ‘ கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவை தவிர்க்க முயற்சி’

குளிர்காலம் முடிவுக்கு வரும் போது, நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமடையும் என்றும், பிரச்சாந்தா தரப்பு மட்டுமின்றி எதிர்க்கட்சியான நேபாள காங்கிரசும் நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு கோருவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்