Aran Sei

ஜோ பைடன் அமைச்சரவைக்கு நியமித்த இந்தியப் பெண் – எதிர்ப்பை தொடர்ந்து விலகிக் கொண்டார்

Image credit : theguardian.com

மெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிதிநிலை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட நீரா டண்டன், அவருக்கு எதிரான கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அதிலிருந்து விலகிக் கொண்டார். இந்தப் பதவியில் அவர் அமெரிக்க ஒன்றிய அரசின் நிதிநிலையை கண்காணிக்கும் பணியை செய்ய வேண்டியிருந்திருக்கும் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்த நீரா டண்டன், இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் கிளின்டன், ஹிலாரி கிளின்டன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். 2016-ல் மேலவை உறுப்பினர் பெர்னி சாண்டர்சை தோற்கடித்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனம் பெறுவதற்கு அவர் ஹிலாரி கிளின்டனுக்கு உதவி செய்திருந்தார்.

அதிபரின் நிதிநிலை இயக்குநர் பதவி நியமனத்துக்குப் பிறகு நீரா டண்டன் 1000-க்கும் மேற்பட்ட தனது ட்வீட்டுகளை அழித்து விட்டார் எனவும், அவரது நியமனம் தொடர்பான மேலவை உறுதிப்படுத்தும் விசாரணையில் அந்தக் கருத்துக்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் தி கார்டியன் தெரிவிக்கிறது.

டண்டனின் நியமனத்தை உறுதி செய்வதற்கான குழுவின் தலைவரான ,ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், அமெரிக்க முன்னேற்றத்துக்கான மையத்துக்கு பெறப்பட்ட பெருமளவு கார்ப்பரேட் நன்கொடைகள் குறித்தும், வெளிநாட்டு நன்கொடைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

செல்வாக்கு மிகுந்த மேற்கு விர்ஜினியா மேலவை உறுப்பினர், ஜனநாயகக் கட்சியின் ஜோ மன்சின், நீரா டண்டனின் ட்வீட்டுகள் காரணமாகவும் அவரது கடந்த கால நடத்தை காரணமாகவும் அவரை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

அமெரிக்க முன்னேற்றத்துக்கான மையம் என்ற நிறுவனத்தின் பொறுப்பில் நீரா டண்டன் இருந்த போது

  • ஒரு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை வெளியேற்றியுள்ளார்,
  • ஒரு ஊழியரை உடல்ரீதியாக தாக்கியுள்ளார்,
  • அந்த நிறுவனம் கார்ப்பரேட்டுகளிடமிருந்தும், வெளிநாட்டு அரசுகளிடமிருந்தும் நிதியை குவித்தது,
  • நன்கொடை கொடுத்த ஒரு பில்லியனரின் வக்கிரமான கண்காணிக்கும் கொள்கை தொடர்பாக பரிசீலனையை அவர் எதிர்கொள்வதை தவிர்க்கும் வகையில் ஒரு அறிக்கை திருத்தப்பட்டது

என அவர் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளது தி கார்டியன் கட்டுரை ஒன்று.

மேலும் அவர் ஊடகவியலாளர்களுக்கான ஒரு சங்கத்தை உடைக்கும் வேலையைச் செய்தார் என்று நீரா டண்டன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியினர், வேலை இழந்தவர்களுக்கு அமெரிக்க அரசு நிதி வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தில்  வெட்டுகளை தவிர்க்க முயற்சித்துக் கொண்டிருந்த போது, நீரா டண்டன் அத்தகைய வெட்டுகளை முன் வைத்தார் என்றும் தி கார்டியன் தெரிவிக்கிறது.

லிபிய அதிபர் கடாஃபி கொல்லப்பட வேண்டும் என்று அவர் ட்வீட் செய்திருந்தது சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. மேலும், ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு பிரிவின் மீதும் மேலவை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் மீதும் அவர் வெறுப்பு நிறைந்த பிரச்சாரம் செய்திருந்தார்.

மேலும், 2008-ல் அதிபர் தேர்தல் நியமன பிரச்சாரத்தின் போது, ஹிலாரி கிளின்டனிடம் அவரது ஈராக் போர் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பிய ஃபயிஸ் ஷக்கிர் என்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரை மார்பில் குத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தான் அவரை தள்ள மட்டுமே செய்ததாக நீரா டண்டன் விளக்கம் அளித்திருந்தார்.

Image credit : theguardian.com
பெர்னி சாண்டர்ஸ் – Image credit : theguardian.com

அமெரிக்க வர்த்தக மையம் என்ற முதலாளித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு நீரா டண்டனின் நியமனத்தை ஆதரித்திருந்தது.

அமெரிக்க மேலவையில் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் தலா 50 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நிலையில் , பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி பதவி நியமனம் உறுதி பெற முடியாத நிலையில், நீரா டண்டனே முன் வந்து அதிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்