Aran Sei

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு – ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்த இராணுவம்

Image Credit : ndtv.com

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி-ம் ஆளும் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, ஆளும் கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

திங்கள் கிழமை அதிகாலையில் தலைநகர் நேபிடாவுக்கான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஜனநாயகத்துக்கான தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றி பெற்ற பிறகு,  இன்று நாடாளுமன்றம் கூடவிருந்தது.

மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி? – சுகியின் தேர்தல் வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பும் ராணுவம்

மியான்மர் அல்லது பர்மா தென்கிழக்காசியாவில் உள்ள, இந்தியாவின் அண்டை நாடாகும். 1948-ல் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற மியான்மரில், 1962-ம் ஆண்டு இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1990-ல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் கட்சி 492 இடங்களில் 392 இடங்களில் வெற்றி பெற்றாலும் இராணுவம் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மறுத்து, ஆங் சான் சுகியை வீட்டுக் காவலில் வைத்தது.

ஜனநாயகத்துக்காக அமைதியான முறையில் போராடிய அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

மியான்மரின் இப்போதைய அரசியல் அமைப்புச் சட்டம் 2008-ம் ஆண்டு இராணுவத்தால் உருவாக்கப்பட்டு அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொது கருத்துக் கேட்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயகத்துக்கான தேசிய கூட்டமைப்பு இந்த கருத்துக் கேட்பிலும், 2010-ல் நடந்த தேர்தலிலும் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தது.

ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சுகி, 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்திருந்தார்.

2017-ல் மியான்மரின் மேற்கு மாநிலமான ராக்கைனில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரோகிங்யாக்கள் அகதிகளாக தப்பி ஓடியதைத் தொடர்ந்து அவுங் சன் சுகி-ன் சர்வதேச மதிப்பு பாதிக்கப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது. ஆனால், அவர் உள்நாட்டில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வருகிறார்.

சென்ற நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக ராணுவம் குற்றம் சாட்டியிருந்தது. தேர்தலில் செலுத்தப்பட்ட சுமார் 90 லட்சம் வாக்குகள் போலியானவை என்று அது கூறியிருந்தது.

மியான்மரின் தேர்தல் ஆணையம் அல்லது அரசாங்கம் அல்லது முந்தைய நாடாளுமன்றம் பிப்ரவரி 1-ம் தேதி கூடி தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்ட என்று நிரூபிக்க வேண்டும் என்று ராணுவம் கோரியிருந்தது.

இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 25% இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் சார்பிலான ஒரு அரசியல் கட்சியும் தேர்தல்களில் போட்டியிடுகிறது. இப்போதைய தேர்தலில் அந்தக் கட்சியின் இடங்கள் மேலும் குறைந்து விட்டன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்ட 2020 தேர்தலின் முடிவுகள், அரசியல் அமைப்புச் சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை அளித்திருப்பதாக ஆளும் கட்சி கருதியுள்ளது. அதன் மூலம், அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் இராணுவத்தின் பங்கை ஒழித்துக் கட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்