Aran Sei

” அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் ஐரோப்பிய பயணம் ரத்து ” – நாடாளுமன்ற வன்முறை எதிரொலி

Image Credit : theguardian.com

மெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடனான சந்திப்பை ஐரோப்பாவின் குட்டி நாடான லக்சம்பர்க் ரத்து செய்துள்ளது, அவருக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு என்று தி கார்டியன் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஐரோப்பாவின் பிரஸ்ஸல்சுக்கும் லக்சம்பர்க்கும் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், லக்சம்பர்கின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், சென்ற வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடந்த கும்பல் தாக்குதலை தூண்டி விட்ட அதிபர் டிரம்ப் ஒரு “கிரிமினல்” என்று அழைத்திருந்ததைத் தொடர்ந்து அங்கு செல்வது திங்கள் கிழமை ரத்து செய்யப்பட்டது.

‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்

“அதிபர் டிரம்ப் ஒரு அரசியல் கழைக்கூத்தாடி, அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று அசெல்போர்ன் கூறியிருந்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பை லக்சம்பர்க் தரப்புதான் ரத்து செய்தது என்று வெளியுறவுத் துறை ஆதாரங்களைக் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரத்தை நிலை நாட்டி விட்டதாக கூறிக்கொண்ட மைக் பாம்பியோவுக்கு இது மோசமான மூக்குடைப்பு என்று தி கார்டியன் கூறுகிறது.

பெல்ஜியம் நாட்டின் துணை பிரதமரும் அதன் வெளியுறவுத் துறை அமைச்சருமான சோஃபி வில்லியம்சை மைக் பாம்பியோ சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. வாஷிங்டனில் நடந்த தாக்குதலின் போது, “இந்த காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அவை ஜனநாயக இலட்சியங்களுக்கு ஊறு விளைவிக்கின்றன” என்று சோஃபி வில்லியம்ஸ் ட்வீட் செய்திருந்தார்.

‘ஹவுடி மோடியின் விளைவு – இந்தியா அசுத்தமானது’

மைக் பாம்பியோவுடன் ஒரு விருந்தில் கலந்து கொள்ளவிருந்த நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், வாஷிங்டனில் இருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாகவும் “ஜனநாயகரீதியான தேர்தல் முடிவு மதிக்கப்பட வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

மைக் பாம்பியோ தனது ஐரோப்பிய பயணத்தை ரத்து செய்து விட்டதாக ஒரு நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக தி கார்டியன் தெரிவிக்கிறது. புதிய அதிபரின் பதவி ஏற்பை  மைக் பாம்பியோ காரணமாக காட்டியுள்ளார்.

” டிரம்பை பதவி நீக்க முயற்சித்தால், வன்முறை வெடிக்கும் ” – அமெரிக்காவில் வன்முறை அபாயம் நீடிக்கிறது

மைக் பாம்பியோ சென்ற முறை ஐரோப்பாவுக்குச் சென்ற போது, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அவரைச் சந்திக்க மறுத்து விட்டனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தாய்வானுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததும் ரத்து செய்யப்படுவதாக செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

” கியூபா பயங்கரவாதத்தைத் தூண்டும் நாடு ” – டிரம்ப் அரசு

கெல்லி கிராஃப்ட் தாய்வானுக்குச் செல்வது சீனாவுக்கு எதிரான பகைமையை தூண்டி விடுவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்வானை சீனாவுக்கு உட்பட்ட மாநிலம் என்று கூறும் சீனா, தாய்வான் தலைவர்களுடன் பிற நாடுகள் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதை கடுமையாக எதிர்க்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்