ஸ்பெயினின் வடக்கு பகுதியான பாஸ்க் நாட்டின் தலைநகரான விட்டோரியாவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 50 சொகுசு கார்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
பாஸ்க் நாடு ஐரோப்பாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்பெயினின் ஒரு சுய ஆட்சி பகுதியாகும். அதன் நாடாளுமன்றமும், பாஸ்க் அரசாங்க அலுவலகங்களும், பாஸ்க் ஜனாதிபதியின் இருப்பிடமும் விட்டோரியா நகரில் அமைந்துள்ளன.
இந்த நகருக்கு வெளியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் சொகுசு கார்களை உற்பத்தி செய்து விற்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது
அந்தத் தொழிற்சாலையில் முன்பு வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர், தொழிற்சாலைக்கு ஜேசிபி ஒன்றை ஓட்டிச் சென்று 50-க்கும் மேற்பட்ட புத்தம் புதிய கார்களை நொறுக்கியிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஜேசிபியை அவர் லெகுடியானோ பகுதியில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளார். அந்தத் தொழிலாளி தனது வேலை தொடர்பாக நிர்வாகத்துடன் முரண்பட்டிருந்தார் என்று செய்தி தெரிவிக்கிறது.
சேதப்படுத்தப்பட்ட கார்களில் £90,000 பவுண்ட் (சுமார் ரூ 90 லட்சம்) மதிப்புள்ள மெர்சிடஸ் – பென்ஸ் V பிரிவு கார்களும் அடங்கும்.
சென்ற வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல் வேலை தொடர்பானது என்ற அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. “குற்றவியல் சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் ஜேசிபியை ஓட்டி வந்தவர் கைது செய்யப்படுள்ளார்” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சேதங்களின் மொத்த மதிப்பு €17.8 லட்சத்திலிருந்து €44.5 லட்சம் வரை (சுமார் ரூ 16 கோடியிலிருந்து ரூ 40 கோடி வரை) இருக்கும் என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.