Aran Sei

`டிரம்ப்பின் விசா முடிவில் நீங்களும் சிக்கியிருக்கலாம்’ – ஜோ பிடன்

Image Credits: Business Insider

மெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இரு முக்கியக் கட்சிகளும் அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றன. தனது கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் இந்தியப் பின்புலம் குறித்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் பேசியுள்ளார்.

2016 தேர்தலின் போது கடுமையான போட்டி நிலவிய சில மாநிலங்களில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானித்தன.

தனது கட்டுரையில் ‘தொற்று பரவலைத் தவறாகக் கையாளுதல், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல்’ போன்ற பல பிரச்சனைகள் குறித்து எழுதிய ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸின் இந்தியத் தோற்றம் குறித்தும் எழுதியுள்ளார்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன் நவம்பரில், எனது துணை ஜனாதிபதி இல்லத்தில் நான் கடைசியாக நடத்திய நிகழ்வுகளில் ஒன்று தீபாவளி அன்று நடந்த வரவேற்பு. அப்போது அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கன் ஆகிய நான் பாரம்பரியமாக இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் கடைப்பிடிக்கும் ஒரு விழாவுக்கு எனது வீட்டில் விருந்தளித்தேன். அதில் புலம்பெயர்ந்தோரின் பன்முகத்தன்மையைக் குறிக்கும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்கள் கலந்துகொண்டனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

“கமலா புத்திசாலி, திறமையானவர். இப்போது தேர்தலுக்குத் தயாராக உள்ளார். ஆனால் கமலாவை மிகவும் பிடிப்பதற்கான மற்றொரு காரணம் அவரது தாயார் ஷியாமளா கோபாலன். கமலா அவரது தாயைப் பற்றிப் பேசும்போது கமலாவுக்கு இருக்கும் பெருமையை உணரமுடிகிறது. அவரது பிறப்பிடம் சென்னை…” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் நீங்கள் பெருமை அடைந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவளுடைய கதை உங்கள் கதையும் கூட. இது ஒரு அமெரிக்கக் கதை. அதனால்தான் பராக் ஒபாமா என்னிடம் கூறியதைக் கமலாவிடம் கூறுகிறேன். `சாத்தியக்கூறுகளின் நம்பிக்கையை ஒன்றாகப்  பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய இந்திய அமெரிக்கர்கள் மனப்பான்மையைக் குறித்த கணக்கெடுப்பு, கமலாவை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் கண்டறிந்துள்ளது. இந்திய அமெரிக்கர்களில் 49% பேர் கமலாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வால் பிடனின் வெற்றி குறித்து அதிக ஆர்வம் ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 15% பேர் இது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர்.

டிரம்பின் இனம் தொடர்பான பேச்சு, சட்டப்பூர்வ குடியேற்றத்தை இறுக்கும் சமீபத்திய கொள்கைகள் (எச் 1 பி திட்டத்தின் தற்காலிக இடைநீக்கம் மற்றும் புதிய குடியேற்ற விசாக்கள் போன்றவை) பற்றியும் ஜோ பிடன் எழுதியுள்ளார்.

“அமெரிக்காவில் எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் ஜனாதிபதி டிரம்ப்பின் சட்டப்பூர்வமான குடியேற்றம் குறித்த முடிவுகள் மற்றும் எச்-1 பி விசா திட்டத்தில் அவர் எடுத்த முடிவுகளுக்கு இடையில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சிக்கியிருக்கலாம். புலம்பெயர்ந்தோரைப் பற்றிய அவரது ஆபத்தான மனநிலை வெள்ளை மேலாதிக்கவாதிகளுக்கு வலு சேர்த்துள்ளது. மேலும் இந்திய அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்புக்குற்றங்களை இது தூண்டியது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 3 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாளுக்கு முன்கூட்டியே பலர் மின் அஞ்சல் மூலம் வாக்களிக்க உள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்