Aran Sei

பிரேசில் – இடதுசாரி முன்னாள் அதிபர் லூலா மீதான பொய் வழக்குகள் தள்ளுபடி – இப்போதைய வலதுசாரி அதிபருக்கு சவால்

image credit : theguardian.in

பிரேசிலின் முன்னாள் அதிபரும், இடதுசாரி தலைவரும், தொழிற்சங்க இயக்கத் தலைவருமான லூலா டா சில்வா, அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மீண்டும் அரசியல் அரங்கில் நுழைந்திருப்பதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரமான பிரேசிலின் அதிபராக, லூலா 2003-க்கும், 2011-க்கும் இடையே இரண்டு முறை  பதவி வகித்துள்ளார். உலகச் சந்தையில் சரக்கு விலைகளின் உயர்வை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிப் பாதையையும், ஏழ்மை குறைப்பையும் அவரது ஆட்சியில் பிரேசில் கண்டது என்று தி கார்டியன் சுட்டிக் காட்டுகிறது.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா, 2018-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர் சிறையிலிடப்பட்டார். பிரேசிலின் தற்போதைய அதிபரான தீவிர வலதுசாரியும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெய்ர் போல்சொனாரோ 2018-ல் பெரு வெற்றி பெறுவதற்கு அது வழி வகுத்தது.

எனக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை – பிரேசில் அதிபர்

580 நாட்கள் சிறையில் கழித்த பிறகு நவம்பர் 2019-ல் லூலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், ஊழல் வழக்குகளின் காரணமாக அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது.

இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதிபர் போல்சொனாரோவுக்கு எதிராக 2022 அதிபர் தேர்தலில் லூலா போட்டியிடுவது உறுதி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுவதாக தி கார்டியன் குறிப்பிடுகிறது.

சென்ற ஆண்டு தி கார்டியனுக்கு பேட்டி அளித்த லூலா, 2022-ல் இடது சாரி அரசாங்கம் அமைவது உறுதி என்று கூறியிருந்தார். அதிபர் போல்சொனாரோவின் நிர்வாகம் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை மோசமாகக் கையாண்டதால் பிரேசில் மக்கள் சாவுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் விமர்சித்திருந்தார்.

போல்சொனாரோவின் நிர்வாகத்தின் கீழ் 2.65 லட்சத்துக்கும் அதிகமான பிரேசில் மக்கள் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றனர்.

‘கொரோனா தடுப்பு மருந்து உங்களை முதலைகளாக மாற்றலாம்’ – மக்களை எச்சரித்த வலதுசாரி அதிபர்

ரியோ-டி-ஜெனைரோவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் தாமஸ் ட்ரவ்மன், “போல்சொனாரோவை எதிர்ப்பவர்களுக்கு லூலாவின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி” என்று கூறியுள்ளார். “லூலா சந்தேகத்துக்கிடமில்லாமல் வலுவான, பிரபலமான வேட்பாளர், போல்சொனரோவை தோற்கடிக்கும் வல்லமை உடையவர்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

லூலாவின் ஆதரவாளர்கள் #LulaPresident2022 என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைத்தளங்களில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்