Aran Sei

‘விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமல்ல’ – பிரிட்டன் மேல்முறையீட்டுக் கழகம் தீர்ப்பு

பிரிட்டனின், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டுக் கழகம், பிரிட்டன் உள்துறை அமைச்சகம், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பது தவறு என்றும் சட்டவிரோதம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு பிரிட்டனில் வெளிப்படையாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து வழக்கில், மேல்முறையீட்டுக் கழகம், அந்த அமைப்பிற்குச் சார்பாகத் தீர்ப்பளித்தது. கடந்த 20 ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.

முதல்கட்ட விசாரணை முடிவுற்ற நிலையில், மனுதாரர்கள் கோரிய நிவாரணம் குறித்து மேல் முறையீட்டுக்கழகம் இரண்டாம் கட்ட விசாரணையைத் தொடங்கவுள்ளது.

இதைத்தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலிலிருந்து நீக்கும் மசோதாவை உள்துறை அமைச்சகம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய, மேல்முறையீட்டுக் கழகம் உத்தரவிடலாம் என்று ‘தமிழ் கார்டியன்’ இணையதளம் தெரிவித்துள்ளது. அல்லது, தடை விதிக்கப்பட்டதை ஆதாரங்களின் அடிப்படையில் மறு பரிசீலினை செய்து முடிவெடுக்க உள்துறை அமைச்சகம் மேல்முறையீட்டுக் கழகத்திடம் அனுமதிகோர வாய்ப்பிருப்பதாகவும் தமிழ் கார்டியன் கூறியுள்ளது.

மேல்முறையீட்டுக் கழகத்தின் இந்தத் தீர்ப்பு, இந்த வழக்கை தொடர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக தமிழ் கார்டியன் கூறியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஒருவர் “அரசு விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை நீக்கும் என்று நம்புகிறேன். விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் விடுதலைப்போராட்ட வீரர்கள்” என்று தமிழ் கார்டியனிடம் தெரிவித்துள்ளார்.

“ஒரு அமைப்பு தற்போது தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதாக உள்துறை அமைச்சகம் உறுதி செய்யும்பட்சத்திலேயே அந்த அமைப்பின் மீது தடை விதிக்க முடியும்” என்று வழக்கறிஞர் ஜாமி போட்டர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்கம் தவறாக வழிநடத்தப்பட்டதும், அதன் கருத்து தவறு என்பதும் தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆகவே சட்டத்திற்குப் புறம்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று வழக்கறிஞர் ஜாமி போட்டர் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்