Aran Sei

மாமனாரின் உடலை காட்சிக்கு வைத்தவர் கிம் – டொனால்டு ட்ரம்ப்

Image Credits: NBC News

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவரது மாமனாரின் தலையற்ற சடலத்தை அந்நாட்டின் உயர் அதிகாரிகளுக்குக்  காட்சிப்படுத்தினார் என்று விரைவில் வெளிவரவிருக்கும் ஒரு புத்தகத்தின் ஆசிரியரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரில் சந்திக்கும்போது  தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பை சந்தித்தபோது வாஷிங்டன் போஸ்ட்டின் புலனாய்வு பத்திரிகையாளர் பாப் உட்வார்ட் அவர் கூறிய தகவல்களை தொகுத்து புத்தகமாக வெளியிடவிருக்கிறார்.

கிம்-ன் மாமனாரும் ஆட்சியில் மிகச் சக்திவாய்ந்த நபருமான ஜாங் சாங் தேக் 2013-ம் ஆண்டு தேசத்துரோக குற்றச்சாட்டு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் கொல்லப்பட்டார். இதில் கிம் தனது அதிகாரத்தை இரக்கமின்றி பயன்படுத்தியதாகப் பலரும் கருதினார்கள் என பத்திரிக்கைகள் கூறுகின்றன.

“கிம் எனக்கு எல்லாவற்றையும் சொல்வார், எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்” என ட்ரம்ப் தெரிவித்ததாக பாப் உட்வார்ட், அவரது புத்தகமான “ரேஜ்”ல் குறிப்பிட்டுள்ளார்.

“கிம் அவரது மாமனாரைக் கொன்று அவரது சடலத்தை உயர் அதிகாரிகள் உபயோகிக்கும் கட்டிடத்தின் படிக்கட்டில் வைத்துவிட்டார்” என ட்ரம்ப் சொன்னதாக அதில் கூறப்பட்டுள்ளது.

“கிம் தனது மாமனாரின் மார்பில் அமர்ந்து அவரது தலையை வெட்டினார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக பிரான்சின் எ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாங் எப்படி இறந்தார் என்று வட கொரியா இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் விமான எதிர்ப்பு பீரங்கியைப் பயன்படுத்தியதாகப் பல செய்திக்குறிப்புக்கள் கூறுகின்றன.

கிம்முடனான தனது நெருக்கத்தை நிரூபிப்பதற்காக ட்ரம்ப் இவற்றைக் கூறியிருந்தாலும், உயர் மட்டத்தில் இருப்பவர் கொலையைப் பற்றிப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஆண்டு வட கொரியா மீது விதிக்கப்பட்டிருந்த அரசியல் பொருளாதாரத் தடையை விலக்கக் கோரி நடைபெற்ற ஹனோய் உச்சி மாநாட்டில், தடையை நீக்கினால் அதற்கு ஈடாக வட கொரியா என்ன திருப்பி வழங்கும் என்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. இந்த மாநாட்டின் தோல்விக்கு பிறகு பியோங்யாங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அணுசக்தி ஆயுதங்களை அகற்றிக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நின்று போயுள்ளன.

பியோங்யாங் அதிகாரிகள் “யோங்பியோன் பகுதியில் உள்ள அனைத்து அணுசக்தி உற்பத்தி நிலையங்களையும்  அகற்ற” முன்வந்ததாகக் கூறியுள்ளார்கள், ஆனால் வட கொரியாவில் இன்னும் பல அணுசக்தி தளங்கள் உள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புத்தகத்தில் ட்ரம்ப் 5  அணுசக்தி தளங்களை தளங்களை விட்டுத்தரக் கோரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “கேளுங்கள், ஒன்று உதவாது, இரண்டு உதவாது, மூன்று உதவாது, நன்கு உதவாது, ஐந்து உதவும்” என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

இக்கோரிக்கையை மறுத்த கிம் “யோங்பியோன் தான் வட கொரியாவின் மிக பெரிய தளம்” என்றும் “அது உங்களது மிகப் பழைய தளம்” என்று ட்ரம்ப் கூறியதாக புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக எதையும் வழங்க கிம் முன்வராததால் “நீங்கள் உடன்பாட்டுக்கு வர தயாராகவில்லை. எனவே நான் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்று ட்ரம்ப் சொன்னதாக ரேஜ் புத்தகம் குறிப்பிடுகிறது.

முன்கூட்டியே இரண்டு தரப்பை சார்ந்தவர்களுக்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையிலும், கொரிய தீபகற்பதை பிரிக்கும் ராணுவ கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பகுதியில் (DMZ) நடைபெற்ற இவ்விருவரது சந்திப்பிற்கு பல மாதங்களுக்கு பிறகும் அணுசக்திமயமாக்கலை வட கொரியா முழுமையாக தவிர்க்கக்கோரி ட்ரம்ப் வலியுறுத்தியதாக புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் சந்தித்த இரு நாட்களுக்கு பிறகு “உங்களது நாட்டுக்கு வந்தது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது” வட கொரிய அதிபருக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். வட கொரியாவில் கால்வைத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

“உங்களது அணுசக்தி பிரச்சினையில் இருந்து வெளியே வர இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்” என்று கிம்-ஐ ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் இந்தப் புத்தகத்தில் இவர்களுக்கிடையிலான 25 கடிதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ட்ரம்ப்-ஐ புகழ்ந்து கிம் எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும்.

இருவருக்கும் இடையிலான DMZ கூட்டம் மீண்டும் நடைபெறவிருந்த நிலையில் ஒரு வாரம் கழித்து அமெரிக்காவும் வட கொரியாவும் ராணுவ பயிற்சிகளை நடத்தின. இதற்கிடையில் “நான் புண்பட்டிருக்கிறேன், இந்த உணர்வை உங்களிடம் இருந்து மறைக்க விரும்பவில்லை. நான் உண்மையில் மிகவும் புண்பட்டிருக்கிறேன்” என்று ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தில் கிம் குறிப்பிட்டிருக்கிறார்.

பியோங்யாங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நின்றுபோய்உள்ள நிலையில், “எனக்கும் கிம்-கும் இடையே நல்லுறவு நிலவுகிறது” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

“அவருக்கு என்னைப் பிடிக்கும், எனக்கு அவரை பிடிக்கும். நாங்கள் இணைந்துவிடுவோம்” என ட்ரம்ப் கூறியதாக அப்புத்தகத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்