விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கனடா நாட்டுப் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான கனடத் தூதர் நதீர் பட்டேலை நேரில் அழைத்து வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் இருப்பதாகவும், கனடத் தூதரிடம் வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், இந்தியாவுக்கும் கடனாவுக்கும் இடையிலான உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கனடா தூதரிடம் தெரிவித்துள்ளதாக, வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று (01.12.2020) காணொலி வாயிலாகக் குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட கனடப் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, “இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி வெளிவரும் செய்திகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்குக் கனடா எப்போதும் ஆதரவளிக்கும்” எனக் கூறினார்.
விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர், பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆதரவு
“உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்ட அறிக்கையில் “விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா நாட்டின் தலைவர் வெளியிட்டுள்ள தவறான தகவல்கள் குறித்து அறிந்துகொண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்கள் பற்றிய இது போன்ற கருத்துகள் தேவையற்றவை. அரசியல் நோக்கங்களுக்காக நியாயமான உரையாடல்கள் திரித்துக்கூறப்படக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜஸ்டீன் ட்ரூடோவின் கூட்டணிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவர்கள் தனியார்மயத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இவற்றுடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் குடிமக்கள், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கனடாவில் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், கனடத் தூதரிடம் கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை, கனடா அரசின் தலைவர்கள் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் “கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் முன்பு, தீவிரப் போராட்டம் நடத்துவதற்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இதனால் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது” என்று கவலை தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.