Aran Sei

போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு மரண தண்டனை – ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசு

ரான் அரசை கவிழ்க்க முயற்சித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என தி இந்து தெரிவித்துள்ளது.

இரானைச் சேர்ந்த பத்திரிகையாளர் 47 வயதான ருஹொல்லா ஸாம். 2017 ஆம் ஆண்டு இரானில் பொருளாதார வீழ்ச்சியினால், மக்கள் பல இடங்களில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திய போது, போராட்டங்களை ஒருங்கிணைக்க ஸாம் செயல்பட்டார். திடீரென உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்ததுதான் போராட்டத்திற்கு முதல் காரணமாக இருந்தது. தொடக்கத்தில் இரானிய தலைவர் ஹசன் ருஹானிக்கு எதிராக எழுந்த கோபம், ஒரு கட்டத்தில் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கோபமாக மாறியது என்கிறது தி இந்து.

தன்னுடைய இணையதளமான அமத்நியூஸ் மற்றும் டெலிகிராம் செயலியில் உருவாக்கிய சேனல் வழியே போராட்டங்கள் நடக்கும் நேரத்தையும், அதிகாரிகளின் முறைகேடான நடவடிக்கையையும் மக்களுக்குத் தெரியப்படுத்தினார் என அல் ஜசீரா இணையதளம் சொல்கிறது.

இதைத் தொடர்ந்து தலைமறைவான ஸாம், 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பிரான்ஸில் தஞ்சம் புகுந்திருந்த ஸாமை, புலனாய்வு ஆபரேஷன் நடத்தி இரானின் புரட்சிகர ராணுவப்படை கைது செய்தது. அக்டோபர் 2019-ல் கைது செய்யப்பட்ட ஸாம், ஜூலை மாதம் ஒரு பேட்டியில் 30 கிலோ எடை குறைந்திருப்பதாகச் சொன்னார்.

அரசு சொத்துக்களைச் சேதம் செய்தார், நாட்டின் பொருளாதார அமைப்பில் தலையிட்டார், அமெரிக்க அரசிற்காக வேலை செய்தார், பிரெஞ்சு உளவுத்துறைக்காக வேலை செய்தார், இரான் அரசைக் கவிழ்க்க முயற்சித்தார் என்று பல குற்றச்சாட்டுகள் ஸாம் மீது வைக்கப்பட்டிருந்தன.

இரானின் அதிகாரப்பூர்வ செய்தி தளமான மிஸானில், “இரான் மக்களின் பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படுத்தும் விதத்தில் அரசைக் கவிழ்க்க அமத் செய்தி சேனல் நடத்தி இரான் மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்திற்கு எதிராக இந்நபர் குற்றங்கள் செய்திருக்கிறார்” என்றும் “பயங்கரவாத நடவடிக்கைகளால் பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்த போராட்டத்தை வழி நடத்தியதை ஸாம் விசாரணையின் போது ஏற்றுக்கொண்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசைக் கவிழ்க்க முயற்சி செய்ததால், ஜூன் மாதம், ஸாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தனக்கு எதிராகவைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அத்தனையையும் ஸாம் மறுத்தார். நான்கு நாட்கள் முன், மரண தண்டனையை உறுதி செய்தது இரான் நீதிமன்றம்.

மத ஆட்சி நடக்கும் இரானில் பத்திரிகையாளர் ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருப்பது, உலகம் முழுதும் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலின் அடையளமாக இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் இதுவரை நாற்பதற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் வேலை காரணமாக சிறையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்