Aran Sei

ஜோ பைடன் ஒரு போர்க் குற்றவாளியா?

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றதா என்பது குறித்து சோதனை நடத்த, ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்ட ஆயுத கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஸ்காட் ரிட்டர், 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஈராக் அரசு தனக்கு உரிய ஒத்துழைப்பு தரப்படவில்லை என்பது அவர் முன்வைத்த குற்றச்சாட்டு.

ஆனால், ஸ்காட் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் சோதனை மேற்கொள்கிறார் என்றும் அவருடன் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஏராளமானோர் செல்கிறார்கள் என்றும் ஈராக் அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஸ்காட், ஈராக்கை உளவு பார்க்கிறார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அமெரிக்கரான ஸ்காட் ரிட்டர், பதவி விலகிய அடுத்த மாதமே அமெரிக்க செனட் சபை முன்பு அவர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயம், செனட் அவையின் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவில் ஜோ பைடன் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

ஸ்காட்டை விசாரித்த ஜோ பைடன் அவரிடம் “சதாம் உசேன் பதவியில் இருக்கும்வரை நீங்களோ அல்லது வேறு எந்தக் கண்காணிப்பாளரோ, சதாம் உசேனின் பேரழிவைத் தரும் ஆயுதங்களை வெளிக்கொண்டு வர முடியாது” என்று கூறினார். அத்துடன் சதாம் உசேனை பதவியிலிருந்து இறக்க ஒரே வழி, அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதுதான் என்று ஜோ பைடன் வெளிப்படையாகக் கூறினார்.

2003ஆம் ஆண்டு, அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. சதாம் உசேனின் அரசு வீழ்த்தப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார். ஈராக்கைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அமெரிக்கா, ஈராக் முழுவதும் சல்லடை போட்டுத் தேடிப்பார்த்தும் பேரழிவு தரும் ஆயுதங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஜனநாயகத்தை மீட்கிறோம் என்ற பெயரில், அமெரிக்க ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈராக் மக்கள் பேரழிவைச் சந்தித்தனர்.

2004 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் டெல்வர் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜோ பைடன், ஈராக் போர் குறித்த தனது முந்தைய நிலைபாட்டிற்கு நேர் எதிரான கருத்தைத் தெரிவித்தார். சதாம் உசேனுக்கும் அல் கொய்தாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிய அவர், ஈராக்கில் பேரழிவு தரும் ஆயுதங்கள் இருந்ததற்கான சாட்சிகளும் இல்லை என்று கூறினார்.

அந்தக் கூட்டத்தில் “சதாம் உசேன் ஒவ்வொரு வாக்குறுதியையும் காப்பாற்றத் தவறினார். ஆகவே, நாமும், சர்வதேசச் சமூகமும் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய தேவை இருந்தது. இதுவே ஈராக் மீது போர் தொடுக்கக் காரணம்” என்று கூறினார்.

இதன் மூலம் பேரழிவு ஆயுதங்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணான கருத்தைத் தெரிவித்ததுடன், ஈராக் ஆக்கிரமிப்பை ஜோ பைடன் ஆதரித்துள்ளது வெளிப்படையாகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஜோ பைடன் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகளில், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கருத்தை அவர் தெரிவிக்க மறக்கவில்லை.

பழுத்த அரசியல் அனுபவம் பெற்ற ஜோ பைடன், இஸ்ரேலின் இன அழிப்பிற்கோ, எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் மனித உரிமை மீறல்களுக்கோ எதிரான நிலைபாட்டை எடுத்ததில்லை. வெளிநாடுகளில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தும் போர்க் குற்றங்களிலிருந்து, ராணுவ வீரர்களைக் காப்பாற்றும், அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர் எதிர்த்ததில்லை.

தேர்தல் பரப்புரையின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளரும் அதிபருமான டொனால்டு ட்ரம்ப், ஜோ பைடனை ‘கம்யூனிஸ்ட்’ என்று அழைத்தார். பைடனின் அரசியல் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ட்ரம்பின் குற்றச்சாட்டில் ஒரு துளி அளவு கூட உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

ஆகஸ்ட் மாதத்தின் மையப் பகுதியில், அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஒன்றிணைந்து, ஜோ பைடனுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கையொப்பமிட்ட 70 பேரும், முன்னாள் அதிபர்கள் ரீகன், சீனியர் புஷ், ஜூனியர் புஷ் ஆட்சிக் காலத்தில் சிஐஏ, ஃஎபிஐ, என்எஸ்ஏ உட்பட பல முக்கிய அரசு நிறுவனங்களில் பணியாற்றிய குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஜோ பைடன் குறித்து அல் ஜசிரா இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் டேஃபி மஹாகா “ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா, முன் எப்பேதையும் விட பயங்கரமாக இருக்கப் போகிறது” என்று எழுதியுள்ளார். மேலும், கிளிண்டன், புஷ், ஒபாமா என்று யாரை எடுத்துக் கொண்டாலும், உலகத்திற்குச் சிறந்த தலைமையை வழங்கும் அமெரிக்க அதிபராக இதுவரை யாரும் இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை என்று டேஃபி கூறுவது, யாராலும் எளிதில் மறுப்பு தெரிவிக்க முடியாத ஒரு கருத்து.

(அரண்செய் ஆசிரியர்க் குழு)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்