Aran Sei

ஜோ பைடன் பதவியேற்பு – அமெரிக்க தலைநகரில் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Image Credit : poynter.org

மெரிக்க அதிபர் பதவியேற்பு நாளை நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் நடைபெறவுள்ளதை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத தீவிரத்துடன் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த புதிய அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவுக்கு பாதுகாப்பு அளிக்க ஆயிரக்கணக்கான காவல் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். உள்ளிருந்தே தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்தால், அமெரிக்காவின் ஒன்றிய புலனாய்வு அலுவலகம், பாதுகாப்பு படை வீரர்களின் பின்னணிகளை சரிபார்த்து வருகிறது என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

தேசிய பாதுகாவல் படையினர் பகுதி நேர பயிற்சி பெற்றவர்கள், வேறு வேலைகளில் இருப்பவர்கள் அல்லது கல்லூரியில் படிப்பவர்கள். முந்தைய பதவி ஏற்புகளை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக சுமார் 25,000 தேசிய காவல் படையினர் நாடு முழுவதிலிருந்தும் வாஷிங்டனுக்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தலைநகரை பாதுகாப்பதற்கு என்று நிறுத்தப்பட்ட படையினரில் ஒரு சிலரே, புதிய அதிபருக்கும் பிற பிரமுகர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற கவலைகள் உள்ளன என்று அசோசியேடட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே, அவர்களது பெயர்கள் ஒன்றிய புலனாய்வு அலுவலகத்தின் (எஃப்பிஐ) தரவு தளத்தில் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு ஏதாவது விசாரணை, பயங்கரவாதம் அல்லது வேறு தடை செய்யப்பட்ட விஷயங்கள் உடன் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Image Credit : www.dw.com
Image Credit : www.dw.com

ஜனவரி 6-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக, பணியில் இருக்கும் இரண்டு தேசிய காவல் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது. அந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலருக்கு ராணுவ பயிற்சி உள்ளது என்றும், குறிப்பிடத்தக்க அளவு திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் நடந்துள்ளது என்றும் தெரிய வருவதாக கார்டியன் கூறுகிறது.

தேர்தலில் தோல்வியடைந்த இப்போதைய அதிபர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்வதன் மூலம் பல மாநிலங்களில் ஜோ பைடனின் வெற்றியை ரத்து செய்வதற்கு குடியரசுக் கட்சி சார்பில் முயற்சி செய்யப்பட்டது

அவை அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ம் தேதி, அதிபர் டிரம்ப், ஜோ பைடன் இருவரும் பெற்ற தேர்வாளர் வாக்குகளை இறுதி செய்து அறிவிப்பதற்கான அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது, அதிபர் டிரம்பால் தூண்டி விடப்பட்ட கும்பல் ஒன்று நாடாளுமன்றக் கட்டிடத்தினுள் புகுந்து கூட்டத்தை கலைத்து நாச வேலைகளில் ஈடுபட்டது.

தேர்தல் மோசடி நடந்துள்ளது என்ற அதிபர் டிரம்பின் பிரச்சாரத்தால் தூண்டப்பட்ட வெள்ளை ஆதிக்கவாதியினரும் தீவிர வலதுசாரிகளும் பிற தீவிர குழுக்களும் நடத்திய இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், ஜோ பைடனின் வெற்றி நாடாளுமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு, இப்போது நாளை ஜோ பைடனின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்வுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் வாஷிங்டன் நகரின் பல பகுதிகளை கோட்டைகளாக மாற்றியுள்ளன. தடுப்பரண்கள், முள்கம்பிகள், 7 அடி உயரமான வேலிகள் ஆகியவை அமைக்கப்பட்டு, ஜனவரி 6-ம் தேதி நடந்தது போன்ற வன்முறை நடந்து விடாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தி கார்டியன் கூறுகிறது.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் இருந்து சுமார் ஒரு மைல் (சுமார் ஒன்றரை கிலோமீட்டர்) தொலைவில் உள்ள வீடற்றவர்களின் முகாமில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக, பதவியேற்புக்கான ஒத்திகை நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த தீயிலிருந்து மேலெழும்பிய புகை பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்பியது என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

இந்தத் தீவிபத்தினால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அதீத எச்சரிக்கை காரணமாகவே சில பங்கேற்பாளர்கள் வெளியேற வைத்து, நாடாளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்