Aran Sei

” தொழிற்சங்க உரிமையில் முதலாளிகள் தலையிட முடியாது ” – அமேசான் ஊழியர்களுக்கு ஆதரவாக ஜோ பைடன்

Image Credit : theguardian.com

மெரிக்க அதிபர் ஜோ பைடன், தொழிலாளர்கள் தொழிற்சங்களில் அணி திரள்வதை ஆதரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் இணைய வர்த்த நிறுவனமான அமேசான் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஜோ பைடனின் இந்த ஆதரவு அறிக்கை வெளியாகியுள்ளது.

“அலபாமாவிலும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் இன்றைக்கும் வரப் போகும் நாட்களிலும் வாரங்களிலும் தொழிற்சங்கமாக அணி திரள வேண்டுமா என்பதை முடிவு செய்ய வாக்களிக்க உள்ளனர். இது மிகவும் முக்கியமான ஒரு தேர்வு” என்று அவரது ட்வீட் குறிப்பிட்டுள்ளது.

அலபாமா மாநிலத்தின் பெஸ்ஸமரில் உள்ள அமேசானின் வினியோக மையத்தில் வேலை செய்யும் 5,800 ஊழியர்கள், “சில்லறை, மொத்த, சிறப்பங்காடி தொழிற்சங்கம்” (RWDSU)-ல் சேருவதைப் பற்றி மார்ச் 29-க்குள் முடிவெடுக்கவுள்ளனர் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

“ஒவ்வொரு தொழிலாளருக்கும் தொழிற்சங்கத்தில் சேருவதா இல்லையா என்று முடிவெடுக்கும் உரிமை உள்ளது” என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவை உருவாக்கியது வால்ஸ்ட்ரீட் [நிதி நிறுவனங்கள்] இல்லை. அமெரிக்கா நடுத்தர வர்க்கத்தால் உருவாக்கப்பட்டது, தொழிற்சங்கங்கள் நடுத்தர வர்க்கத்தை உருவாக்கின” என்று அவர் கூறியுள்ளார்

“தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை தருகின்றன. நிர்வாகத்துடனான அவர்களது உறவை சமநிலைப்படுத்துகின்றன.” என்று கூறியுள்ள அவர்,  “உங்கள் ஆரோக்கியத்துக்கும், பாதுகாப்புக்கும், கூடுதல் ஊதியத்துக்கும், இன பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்புக்கும் தேவையான அதிகாரத்தை அவை வழங்குகின்றன” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

“யூனியனில் சேர்ந்த தொழிலாளர்களை மட்டுமின்றி, யூனியனில் சேராத தொழிலாளர்களையும், குறிப்பாக கருப்பின, பிற சிறுபான்மை இன தொழிலாளர்களை யூனியன்கள் கைதூக்கி விடுன்றன” என்று அவர் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொழிற்சங்கமாக அணிதிரள்வதையும் கூட்டுபேர உரிமையையும் ஆதரிக்கும் கொள்கையை தனது அரசு பின்பற்றும் என்று கூறியிருந்ததை குறிப்பிட்ட அவர், “தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டம்” தொழிற்சங்கங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று மட்டும் சொல்லவில்லை, நாம் அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டியது நான் இல்லை. அதே நேரம் அதை முடிவு செய்ய வேண்டியது முதலாளிகளும் இல்லை. மாறாக, தொழிற்சங்கங்களில் சேருவதைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது தொழிலாளர்களே. இது பற்றிய விவாதத்துக்கே இடமில்லை” என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்.

அமேசான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அந்நிறுவன ஊழியர்களின் தொழிற்சங்க முயற்சிகளை குறிப்பிட்டு பேசிய ஜோ பைடன், “அமெரிக்கா கொரோனா பெருந்தொற்றுடனும், பொருளாதார நெருக்கடியுடனும், இன பாகுபாடு தொடர்பான பிரச்சினைகளுடனும் போராடிக் கொண்டிருக்கும் போது இது மிகவும் முக்கியமானது” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

அமேசான் ஊழியர்களின் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவாக, அலபாமா மாநில ஜனநாயகக் கட்சி ட்வீட் செய்துள்ளது.

“முதலாளிகள் தரப்பிலிருந்து எந்த ஒரு மிரட்டலும், அச்சுறுத்தலும், பயமுறுத்தலும், யூனியன் எதிர்ப்பு பிரச்சாரமும் இருக்கக் கூடாது. எந்த ஒரு மேலாளரும் ஒரு ஊழியரின் தொழிற்சங்க விருப்பம் குறித்து அவரை மிரட்டக் கூடாது” என்று ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

“ஒவ்வொரு தொழிலாளருக்கும் தொழிற்சங்கத்தில் சேருவதா இல்லையா என்று முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை எந்த நிறுவனமும் பறிக்க முடியாது. எனவே, உங்கள் குரலை கேட்கச் செய்யுங்கள்.” என்று அவர் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்