Aran Sei

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு – டிரம்ப் தரப்பு எதிர்ப்பு தொடர்கிறது

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் - Image Credit : theguardian.com

மெரிக்க அதிபர் தேர்தலில் நேற்று, மாநில வாரியாக தேர்வாளர்கள், ஜோ பைடனை அதிபராகவும், கமலா ஹாரிசை துணை அதிபராகவும் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி நடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வாளர் குழுக்கள் அளித்த வாக்குகளின்படி, ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் 306 வாக்குகளையும், இப்போதைய அதிபர்-துணை அதிபர் டொனால்ட் டிரம்ப் – மைக் பென்ஸ் 232 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். “ஒரு பெருந்தொற்றோ அதிகார முறைகேடுகளோ எதுவும் நமது ஜனநாயக விளக்கை அணைத்து விட முடியாது” என்று அவர் கூறியுள்ளதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

டொனால்ட் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகளும் மோசடிகளும் நடந்ததாகக் கூறி தனது தோல்வியை இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் பிரச்சாரம் செய்து வருகிறார். டிரம்ப் தரப்பில் பல்வேறு மாநிலங்களிலும் அமெரிக்க உச்சநீதி மன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் பல தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவை மாற்றும் முயற்சிகளில் பின்னடைவு, டிரம்ப் தலைமறைவு

தேர்வாளர் குழு வாக்கெடுப்பில் பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளப் போவதாக டிரம்ப் சென்ற மாதம் கூறியிருந்தார். ஆனால், திங்கள் கிழமை அவர் தேர்தல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

“நெருக்கமான போட்டி நிலவிய மாநிலங்கள் நள்ளிரவில் வாக்கு எண்ணுவதை ஏன் நிறுத்தவில்லை” என்ற கேள்வியை முன் வைத்து, “மோசடியான தேர்தல் முடிவை திருடுவதற்கு எத்தனை வாக்குச் சீட்டுகளை உருவாக்க வேண்டும் என்று கண்டு பிடிப்பதற்காக” என்று டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்

“அவர்கள் மிகவும் பின்தங்கியிருந்ததால், அதிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு கூடுதல் நேரமும், ஒரு போலியான இடைவேளையும் தேவைப்பட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தியும் கட்சியின் தொண்டர்களில் பெரும்பாலானவர்களும் உள்ளதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?

கடந்த வார இறுதியில் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற “திருட்டைத் தடுப்போம்” என்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அதில் வன்முறை வெடித்தது.

ட்ரம்ப் ஆதரவுப் பேரணியில் வன்முறை – ஒருவர் சுட்டுக்கொலை – மூன்றுபேர் கைது

அதிபர் தேர்வாளர்கள் கூடவிருக்கும் மாநில அவைகளுக்கு வெளியே வன்முறையும் போராட்டங்களும் வெடிக்கும் என்ற அச்சத்தால், தேர்வாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் கூடுதல் ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

மிச்சிகன் மாநிலத்தில் திங்கள் கிழமை தேர்வாளர்கள் வாக்களிக்கும் போது, மாநில தலைமை அலுவலகத்துக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

மிச்சிகன் தலைநகர் லான்சிங்-ல் உள்ள அரசு கட்டிடத்துக்கு வெளியே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து ஒரு டிரம்ப் ஆதரவாளர்கள் குழு இணையவழி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், ஒரு சிலரே திரண்டனர் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

விஸ்கான்சின் மாநிலமும் கேப்பிட்டல் (Capitol) கட்டிடத்தை பொதுமக்களுக்கு மூடி விட்டது. அரிசோனாவின் தேர்வாளர்கள் “பொதுவில் அறிவிக்கப்படாத ஒரு இடத்தில்” கூடி வாக்களித்திருக்கின்றனர்.

இருப்பினும் 50 மாநிலங்களையும் தலைநகர் வாஷிங்கடன் டிசியையும் சேர்ந்த தேர்வாளர்கள் தமது வாக்குகளை முறைப்படி செலுத்தி, நவம்பர் மாத தேர்தல் முடிவுகளை உறுதி செய்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

அதிபர் டொனல்ட் டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் நெருக்கமான போட்டி நிலவிய பல்வேறு மாநிலங்களில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை மீறி, மாற்று தேர்வாளர்களை நியமித்து டிரம்புக்கு வாக்களிக்க வைக்குமாறு, அந்தந்த மாநில ஆளுநர்களையும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தி வந்தனர். எந்த மாநிலமும் அந்த உத்தியை ஏற்றுக் கொள்ளவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் – முழுமையடையாத வெற்றி அறிவிப்பு

தேர்வாளர்களின் வாக்குச் சீட்டுகள் தலைநகர் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டு, வரும் ஜனவரி 6-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டு அமர்வில் எண்ணப்பட்டு, முடிவை கூட்டு அமர்வின் தலைவராக அதை நடத்தும் துணை அதிபர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்