Aran Sei

`பிரான்ஸ் ஆதரவு அளிப்பது கொடுஞ்செயல்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

நபிகள் நாயகம் பற்றிய கேலிச் சித்திரத்தைப் பிரெஞ்ச் பத்திரிகை வெளியிட்டிருப்பதும் அதற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்ரோன் தலைமையிலான அரசு ஆதரவு அளிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்க கொடுஞ்செயல்கள் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டித்துள்ளார்.

பிரான்ஸ் பள்ளி ஆசிரியர் சாமுவேல் பேட்டி, கருத்துச் சுதந்திரம் குறித்து பாடம் எடுத்தபோது, இஸ்லாமியர்கள் தங்கள் இறுதித் தூதராகக் கருதும் முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தை மாணவர்களிடம் காட்டியுள்ளார்.

அந்தக் கேலிச்சித்திரம் சார்லி ஹப்தோ என்ற பிரெஞ்ச் இதழில் 2015-ம் ஆண்டு வெளியானது. அதைத்தொடர்ந்து அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் மீது ஆயுதம் தாங்கிய இரண்டுபேர் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி, பள்ளிக் குழந்தைகளுக்கு மும்மது நபியின் படத்தைக் காண்பித்த ஆசிரியர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையைச் செய்த செசன்யாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிரெஞ்சு ஆசிரியர் தலை துண்டிப்பு – மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலா?

முன்னணி அரசியல்வாதிகள், சமூக உரிமை அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பாரிஸில் உள்ள ‘குடியரசுச் சதுக்கத்தில்’ அணிவகுத்து, “நான் சாமுவேல்” என்று பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தினர்.

இந்தக் கொலை “ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலின் அடையாளங்களைக் கொண்டுள்ளது” என்று இம்மானுவேல் மக்ரோன் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கூறியுள்ளார்.

இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்து – பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்தக் கேலிச்சித்திரம் கடந்த வெள்ளியன்று, பிரான்ஸ் அரசு அலுவலகக் கட்டடங்களில் மீது ஒளிரச் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரிட்டன் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணிப்போம் இஸ்லாம் மற்றும் அரபு மொழியிலும் ஹாஷ் டாக்குகள் உலக அளவில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 29), பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாநகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்ர டேம் பேசிலிக்கா எனும் தேவாலயத்தில் நுழைந்து கத்தியால் மூன்று பேரைக் கொலை செய்து பலரையும் காயப்படுத்தியுள்ளதாக அல் ஜசீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் தேவாலயத்தில் மூவர் கொலை : மீண்டும் பதற்றம்

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நபிகள் நாயகம் பற்றிய கேலிச் சித்திரத்தை பிரெஞ்ச் பத்திரிகையான சார்லி ஹெப்டே வெளியிட்டிருப்பதும் அதற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்ரோன் தலைமையிலான அரசு ஆதரவு அளிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க கொடுஞ்செயல்கள் என்று கண்டித்துள்ளார்.

தேவாலயத்தில் மூன்று நபர்களைப் படுகொலை செய்யப்பட்டது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் அரசின் இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடி என்ற அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் ஒரு தேவாலயத்தில் புகுந்து ஒரு பெண் உட்பட மூன்று நபர்களைப் படுகொலை செய்ததும் மன்னிக்கமுடியாத, வன்மையாகக் கண்டிக்கத்தக்க படுபாதகச் செயல் ஆகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ பாரீஸ் நகரில் புறநகர்ப் பகுதியில் ஒரு பள்ளிக்கூட வகுப்பில் சாமுவேல் பேட்டி என்ற ஆசிரியர் நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்களை வகுப்பில் காட்டிய தவறான செயலுக்காக அவரது தலையை வெட்டியிருப்பது காட்டுமிராண்டித்தனமான  நடவடிக்கை ஆகும். இத்தகைய வன்முறைக்கும் கொலைவெறிக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் அணுவளவும் இடமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பன்மைச்சமூகத்தில் வாழும் அனைவருக்குமான ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர் கருணையுடன் நடக்க வேண்டும் என்று போதித்து, அந்த அடிப்படையில் ஆட்சி செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்று கூறியுள்ளார்.

இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற மதத்தவர்களிடம் கருணையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக நினைவு கூறுகிறார்.

இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயின் யூதர்களுக்குச் சுவர்க்க பூமியாக இருந்தது என யூரி அவ்னெரி என்ற இஸ்ரேல் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளரும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “பன்முகச் சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படைகளை வகுத்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை பிரான்ஸ் அரசு ஊக்குவிப்பதும் இதற்கு எதிர்வினையாக இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளையும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களையும் புறந்தள்ளிவிட்டு வன்முறையைக் கையில் எடுத்துக் கொலை பாதகச் செயலில் ஈடுபடுவதும் மனிதநேயத்திற்கு விரோதமான நடவடிக்கைகளே ஆகும்.” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படுபாதகச் செயல்களின் பின்னணியில் உண்மையான இஸ்லாமிய அமைப்புகள் ஒருபோதும் இருக்கமுடியாது என்றும் பிரான்ஸ் வன்முறைகளையும் அதற்கு வழிவகுக்கும் பொறுப்பற்ற அரசாங்கத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்