அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குறைந்தது 140 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர் குழு வாக்குகளை எண்ணுவதை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
நவம்பர் 3-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், இப்போதைய அதிபரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மாநில வாரியான தேர்வாளர் வாக்குகளில் 232-ஐ பெற்றார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு – டிரம்ப் தரப்பு எதிர்ப்பு தொடர்கிறது
ஆனால், தேர்தலில் பரவலான முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப் தரப்பு, முக்கியமான இழுபறி மாநிலங்களில் பைடனுக்கு ஆதரவான பெரும்பான்மையை மாற்றுவதற்கு லட்சக்கணக்கான வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்தனர். அவை அனைத்தும் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
ஆனாலும், டொனால்ட் டிரம்ப், மாநில அளவில் பொறுப்பில் இருக்கும் குடியரசுக் கட்சியினரை தொடர்பு கொண்டு தனது வெற்றிக்கு வழி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் ட்ரம்ப் : பராக் ஒபாமா கண்டனம்
கடந்த டிசம்பர் 14-ம் தேதி மாநில வாரியாக வேட்பாளர் குழு வாக்குகள் சான்றளிக்கப்பட்டு நாட்டின் தலைநகர் வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 50 மாநிலங்களிலிருந்தும் கொலம்பியா மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட வாக்குகள், நாளை ஜனவரி 6-ம் தேதி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் எண்ணப்பட்டு பைடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்படும்.
வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?
இந்தக் கூட்டத்துக்கு இப்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமை வகிப்பார்.
ஆனால், வழக்கமாக யாருமே கவனிக்காமல் நடந்து முடியும் இந்த சடங்கு, டிரம்பின் எதிர்ப்பு நடவடிக்கைகளால் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது என்று கூறுகிறது தி கார்டியன் செய்தி.
அதிபர் டிரம்ப் விடாப்பிடியாக, குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர்கள் மூலமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் தனது தேர்தல் தோல்வியை வெற்றியாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதும், அதற்கு ஆதரவாக குடியரசுக் கட்சித் தொண்டர்களை கலகம் செய்யத் தூண்டுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
கூட்டுக் கூட்டத்தில் அரிசானோ, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மாநிலங்களின் வேட்பாளர் குழு பட்டியலை எதிர்க்கப் போவதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 11 மேலவை (செனட்) உறுப்பினர்களும், 140க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களும் கூறியுள்ளனர். ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய ஒரு மேலவை உறுப்பினரும், ஒரு பிரதிநிதிகள் சபை உறுப்பினரும் இணைந்து அதை முன் வைக்க வேண்டும்.
தேர்தல் முடிவை மாற்ற அதிகாரியை மிரட்டும் ட்ரம்ப் : கமலா ஹாரிஸ் கண்டனம்
ஒரு மாநிலத்தின் தேர்வாளர் பட்டியல் தொடர்பாக இத்தகைய எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டால், அடுத்த மாநிலத்தின் பட்டியல் பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்கு முன், கூட்டுக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு, இரு அவைகளும் தனித்தனியாக கூடி எதிர்ப்பின் மீது வாக்களிக்க வேண்டும். இதற்கு 2 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
இரு அவைகளும் எதிர்ப்பை அங்கீகரித்தால், குறிப்பிட்ட மாநிலத்தின் வாக்குகள் எண்ணப்படாமல் ஒதுக்கி வைக்கப்படும்.
மேலவையில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. எனவே, மேலவையில் எதிர்ப்புகள் அங்கீகரிக்கப்பட்டாலும், பிரதிநிதிகள் சபையில் அவை தோற்கடிக்கப்பட்டு பைடனின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்படும் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?
மேலும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பல மேலவை உறுப்பினர்களும், இத்தகைய எதிர்ப்பு தெரிவிப்பை நிராகரித்து பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளார்கள்.
ஆனால், இவ்வாறு 5 மாநிலங்களின் தேர்வாளர் பட்டியல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், மதியம் 1 மணிக்குக் கூடும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பல மணி நேரம் தொடர்ந்து இந்தப் பிரச்சனையை விவாதித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருக்கும்.
இது அமெரிக்க அரசியலில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு இன்னும் தொடர்வதைக் காட்டுவதாக தி கார்டியன் கருத்து தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.