Aran Sei

கொரோனாவுக்கு எதிரான போர் – பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசியை மறுக்கும் இஸ்ரேல்

Image Credit : thewire.in

புத்தாண்டின் முதல் நாளில், ஜெருசலம் ஷாலோம் கல்லூரியின் மூத்தத் துணைத் தலைவரான டேனியல் கோர்டிசின் ” தடுப்பூசி அதிசயம் இஸ்ரேலை மீண்டும் அதன் வேர்களுக்கு கொண்டு வருகிறது” என்ற தலைப்பிலான ஒரு கருத்துக் கட்டுரையை புளூம்பெர்க் வெளியிட்டது.

இஸ்ரேலின் தீவிர கொரோனா வைரஸ் தடுப்பூசித் திட்டம் அதனை உலகிலேயே, தனிநபர் தடுப்பூசி போடும் விகிதத்தில் முன்னணிக்கு உந்தி தள்ளியுள்ளது என்பதுதான் அந்த “அதிசயம்”.

இஸ்ரேலின் உண்மையான வேர்கள் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்வதிலும் அவர்களை வேரோடு அழிப்பதிலும் இருக்கும் போது, இஸ்ரேலின் பழைய புராணக் கதையை புரட்ட விரும்புகிறார் கோர்டிஸ்: “ஆரம்பகால சோசலிச வேர்கள்”, “சமூக ஒத்திசைவையும், பகிர்ந்து கொள்ளும் இலக்குகளையும்” வளர்த்தது. அந்த நாடு “தன்னை ஒரு குடும்பமாகப்” பார்த்தது. மேலும் “ஒரு மரண எதிரியை எதிர்கொள்ள எவ்வாறு ஒன்றிணைவது” என அதற்குத் தெரிந்திருந்தது.

கோர்டிஸ் தனது சொந்த “கடந்தகால இஸ்ரேலை” தனக்கு தடுப்பூசிப் போடப்பட்ட ஜெருசலம் விளையாட்டு அரங்கில் காண முடிந்தது.” என்கிறார். “நான் முகங்களை முகக்கவசங்களால் மறைத்துக் கொண்டு வரிசையில் காத்திருக்கும் மற்றவர்களின் கண்களைப் பார்த்த போது, இந்த நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதில் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் இருந்தது நான் மட்டுமல்ல என்பதை என்னால் கூறமுடியும்.” பழைய இஸ்ரேலும் கூட, “ஒருவருக்கு அடுத்து ஒருவர் என மிகத் திறமையாகத் தடுப்பூசி போடும் செவிலியர்கள் மருத்துவ தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்ட சிறிய படையைக் கொண்டிருந்தது.” என்கிறார்.

செயல்திறன் மிக்கதோ இல்லையோ, இந்தத் தடுப்பூசி இயக்கம் பாலஸ்தீனிய அடக்குமுறையில் இஸ்ரேலின் வேர்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் வாழும் 50 லட்சம் பாலஸ்தீனியர்களைக் தனது தடுப்பூசித் திட்டத்தில் இருந்து அரசு குரூரமாக விலக்கி வைத்துள்ளது..

நான்காவது ஜெனீவா மாநாட்டின் 56-வது பிரிவின்படி, ஆக்கிரமிக்கப்பட்டப் பகுதிகளில் பொது சுகாதாரத்தையும் சுத்தத்தையும் பராமரிக்க, மருத்துவம், மருத்துவ நிறுவனங்களையும் சேவைகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக் காட்டுகிறது.
அதிலும் குறிப்பாக, வருமுன் காப்பது, தொற்றுநோய்களையும் தொற்று நோய்ப் பரவலையும் தடுப்பது போன்ற தேவையான காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

பாலஸ்தீனிய மருத்துவ நிறுவனங்களுக்கும் சேவைகளுக்கும், எப்போதும் எதுவும் இஸ்ரேல் செய்ததில்லை என்பது மட்டுமல்ல, மருத்துவமனைகள், மருத்துவ ஊர்திகள், மருத்துவ பணியாளர்கள் மீது குண்டுவீசித் தாக்குவதுடன், காசா பகுதியை கடந்த 13 ஆண்டுகளாக முற்றுகையில் வைத்திருக்கிறது, இஸ்ரேல். அது தேவையான மருத்துவக் கருவிகள், மருந்துகள் இறக்குமதி செய்வதையும் தடுத்துள்ளது.

தொற்று நோய்க்கு முன்பே, கடலோரப் பகுதியின் சுகாதாரப் பாதுகாப்பு முறை சீர்குலைவின் விளிம்பில்தான் இருந்தது. தங்கள் சொந்த தடுப்பூசிகளை ஏற்பாடு செய்து கொள்வதற்கு பாலஸ்தீனியர்களே பொறுப்பு என்று ஆஸ்லோ உடன்படிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறது இஸ்ரேல் அரசு.

இது சிறகை ஒடித்து விட்டுப் பறவையை பறக்கச் சொல்வது போன்றது/ கால்களை உடைத்துவிட்டு கயிற்றைத் தாண்டக் கூறுவது போன்றது. பாலஸ்தீன சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட உதவுமாறு உலக சுகாதார நிறுவனம் விடுத்த “அதிகாரபூர்வமற்ற வேண்டுகோளை” இஸ்ரேல் மறுத்து விட்டதாகவும், அவர்களில் 8,000 பேர் கோரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இங்கிலாந்தின் ‘இண்டிபெண்டன்ட்’ தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் ஃபைசர் (Pfizer) நிறுவனத்திடமிருந்து 60 லட்சம் ‘மாடேர்னா’ தடுப்பூசிகளையும், ஆக்ஸ்ஃபோர்டின் அஸ்ட்ரா ஜெனக்காவிடமிருந்து 1 கோடி முறைக்கான மருந்துகளையும் வாங்கி உள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவிக்கிறது. (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதான்யாகுவின்
இந்த பரபரப்பான அவசரத்துக்கு, வரப்போகும் தேர்தலுக்குள் தனது அழிந்து வரும் பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்)

இந்த அழகான முதலாளித்துவ உலகில், பணக்கார நாடுகள் தடுப்பூசியைப் பெறுகையில் ஏழை நாடுகள் கைவிடப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக இல்லைதான். இஸ்ரேல் அரசு மேற்குக் கடற்கரையின் மிக உட்புறத்தில் உள்ள சட்டவிரோத யூத குடியேறிகளுக்குத் தடுப்பூசிகள் போடும்போது, மேற்குக் கடற்கரையில் பாதுகாப்பற்ற நிலையில் (அல்லது இஸ்ரேல் அரசு கொடுமைப்படுத்தி, படுகொலை செய்து, அவர்கள் வீடுகளை இடித்துத் தள்ளுவதால் மிக அதிக பாதுகாப்பற்ற நிலை என்று கூட கூறலாம்)  வாழும் 27 லட்ச பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசி போட மறுப்பது வயிற்றைக் குமட்டும் அளவு அருவருப்பானது.

பாலஸ்தீனப் பகுதிகளில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 1,700 பேருக்கும் மேல் இறந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், அந்த சிறிய நிலப்பரப்பில் 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை 470 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

பெரும்பாலும் “திறந்த வெளிச் சிறைச்சாலை” என்று வர்ணிக்கப்படும் காசா நிலப்பகுதி உலகில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒன்றாகும். இஸ்ரேல் அரசு இந்த மக்களை நெருக்கமாக, சுகாதாரமற்ற நிலையில் வாழ கட்டாயப்படுத்திருப்பது, இந்தப்பகுதியை வைரஸ் எளிதில் பரவுவதற்கான தளமாக மாற்றி உள்ளது. டிசம்பர் மாதத் துவக்கத்தில், வைரஸ் கட்டுப்பாட்டை மீறிப் பரவிக் கொண்டிருந்த போது, காசா பகுதியில் ஆக்சிஜன், தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், கொரோனா வைரஸ் பரிசோதனைகள் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதற்கெல்லாம் மேலாக, வழக்கமான முற்றுகையால் ஏற்பட்ட பற்றாக்குறையும், அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டும் சேர்ந்து, “நாங்கள் இதுவரை சந்தித்திராத மிக மோசமான சுகாதார நெருக்கடி இது,” என ஒரு மூத்த சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டம் இந்த பாலஸ்தீனியர்களில் ஒரு பகுதியினருக்கு உதவும் வகையில் தடுப்பூசி போட உறுதி பூண்டுள்ளது; எனினும், அது வெகு தொலைவில் உள்ள எதிர்காலத்தில் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. இஸ்ரேலில் வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கும்போது இஸ்ரேலின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசி தரப்படும் எனத் தெரிகிறது.

ஆனால், பாலஸ்தீனர்களை நோயுற்றவர்களாகக் காட்டுவது, அரசியல் ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிச்சயமாக அறிந்துள்ளது இஸ்ரேல் அரசு. மேலும் இந்த கொரோனா வைரஸ் யுகம் ஏற்கனவே இஸ்ரேலுக்கு சிவில் உரிமைகளை காலின் கீழ் போட்டு மிதித்து நசுக்குவதற்கும், அரசின் கண்காணிப்பு திறனை மேலும் முழுமையாக்கிக் கொள்ளவும் அற்புதமான வாய்ப்புகளை வழங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக, இஸ்ரேலின் ‘ஷின் பெட்’ எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக ஐயப்படும் பாலஸ்தீனியர்களை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மூலமாகவும் தொழில்நுட்பம் மூலமாகவும் “வேட்டையாடுவதை” குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தனது புளூம்பெர்க் கட்டுரையின் முடிவில் கோர்டிஸ், கலீலி நாட்டைச் சேர்ந்த ஒரு அரபு மருத்துவரைப் பற்றிய மனதைக் கவரும் கொரோனா வைரஸ் கதையை கோர்டிசின் நண்பரிடம் கூறியதைப் பற்றி எழுதி உள்ளார்: “வழக்கமாக இஸ்ரேல் போருக்குச் செல்லும் போது, நாங்கள் அதன் படையில் இருக்க மாட்டோம். நாங்கள் அவர்களுக்கு உதவவும் முடியாது. ஆனால் இம்முறை இஸ்ரேல் மீண்டும் போருக்குச் சென்றது, அராபியர்களான நாங்களும் படை வீரர்களாக இருந்தோம்,” என்று கூறியதாக எழுதியுள்ளார்.

இதனை படிப்பவர்கள் இஸ்ரேலி அராபியர்கள், இஸ்ரேல் அரசு தங்கள் சக அராபியர்களை கொல்லும் போது உதவ முடியாதது என்பது தவிர, பிற சமயங்களில் இரண்டாந்தர குடிமக்களாகவே இருப்பதில் திருப்தி கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என முடிவு செய்து கொள்ளலாம்.

ஒன்றை மட்டும் மறுக்க முடியாது: இஸ்ரேலின் கொரோனா வைரஸுக்கு எதிரானப் போர் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போரும் கூடத்தான். எப்படியிருந்தாலும் கொரோனா இன ஒடுக்கு முறை என்பதில் வியப்பொன்றுமில்லை.

www.thewire.in இணையத்தில் பெலன் ஃபெர்ணான்டஸ் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்