Aran Sei

பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்

ரு செயலின் விளைவுகளை மட்டும் நோக்காமல் அச்செயல் நிழந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து சிக்கல்களைத் தீர்ப்பதே மாற்றத்திற்கான வழி. இன்று உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் நெருக்கடிநிலைக்கு ஆளாகியுள்ளனர். இஸ்லாமிய அடையாளங்கள் வெறுப்போடும் அச்ச உணர்வோடும் மக்களால் பார்க்கப்படுகின்றன. வரலாற்றுப்பூர்வமாய் ஆராய்ந்தால் இஸ்லாமிய வெறுப்புக்குப் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கங்களின் நலன்களே காரணம் என்று கண்டறிய முடியும்.

உலகம் முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் ஓர் இனஅழிப்பு நடவடிக்கையாக நடந்துகொண்டு வருகிறது.

கொரோனா பேரிடர் மரணங்களுக்கு இடையிலும் பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவும் எழுப்பப்படும் முழக்கங்கள் அச்சம் தருபவையாக உள்ளன. “மக்ரோனின் பிரஞ்சு அரசு வேகமாக நாஸிச அரசாக மாறிவருவதாக” லண்டன் பல்கலைக்கழகத்தின் (UCL) பிரஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் துறை பேராசியர் பிலிப் மர்லியே குறிப்பிடுள்ளார்.

பிரான்சில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்குப் பின்னர் உரையாடிய மக்ரோன் ” உலகம் முழுக்க இஸ்லாமிய மதம் நெருக்கடிக்கு உள்ளாவதாகக் குறிப்பிட்டார். கிறிஸ்தவ வெள்ளையின பயங்கரவாதியால் 77 அப்பாவிப் பொதுமக்கள் 21.06.2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட போது , கிறிஸ்தவம் உலகம் முழுவதிலும் நெருக்கடியில் உள்ளது என்று எந்தத் தலைவரும் குறிப்பிடவில்லை.

பிரான்ஸ் நாட்டில் 2006 ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோ என்கிற வாராந்திரப் பத்திரிகை முகமது நபியை அவமானப்படுத்தும் வகையில் கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு ஊடகங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தன.

இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் இஸ்லாமிய மதத்தின் பெயரிலான பயங்கரவாதம் 1990 களிலேயே அல்ஜீரியாவில் ஆரம்பித்துவிட்டது. 1993 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தீவிரச் செயற்பாட்டிலிருந்த ஜீ.ஈ.ஏ என்ற அமைப்பு இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று பல்வேறு கோரமான படுகொலைகளை அரங்கேற்றியது. பிரான்சில் கிளைகளைக் கொண்டிருந்த அந்த அமைப்பு பிரெஞ்சு நாட்டில் பல்வேறு குண்டு வெடிப்புக்களை நடத்தியது.

2005 ஆம் ஆண்டில் பிரான்சின் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் அரசிற்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. பிரான்ஸின் புறநகர்ப் பகுதிகளிலுள்ள அரசக் குடியிருப்புக்களின் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய இளைஞர்களே இந்த வன்முறைக்குக் காரணம் என அப்போதைய பிரெஞ்சு அரசு குற்றம் சுமத்தியது. 2007 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய உள்துறை அமைச்சர் நிக்கொலா சார்க்கொசியிடம் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்கள் குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது “அந்த இடங்களைச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் ” இந்நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2015 ஆம் ஆண்டு ஐ.ஏஸ் பயங்கரவாத அமைப்பினால் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்டதாகக் கருதப்படும் தாக்குதலில் 128 அப்பாவிப் பிரெஞ்சு பொது மக்கள் பலியானார்கள். இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான ஊடகங்களின் தாக்குதல்கள் அப்போதே ஊடக அறம் தொடர்பான கேள்விகளை எழுப்பியது.

பிரான்சின் எல்லையில் இருக்கும் மக்ரேபியன் நாடுகளான அல்ஜீரியா, மரோக்கோ, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பிரான்சில் பலர் குடியேற ஆரம்பித்துவிட்டனர்.

16 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் முதலாளித்துவம் உருவான காலத்தில் பிரஞ்சு மொழி அரசு மொழியாக அறிவிக்கப்பட்டது. ஏனைய சிறிய இனக் குழுக்கள் பிரெஞ்சு தேசத்துடன் இணைந்த அக்காலப்பகுதியே பிரெஞ்சு தேசம் உருவான காலம். அப்போதுதான் பிரான்சு தேசியமும் தோன்றியது. மார்சைல், துலூஸ் போன்ற பகுதியில் குடியேறியிருந்த மக்ரேபியன் முஸ்லிம்கள் பிரஞ்சு தேசத்துடன் இணைந்தனர். இன்று அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லர். இன்றைய பிரஞ்சு நிறவாதிகளுள் அவர்களில் சிலரும் ஒளிந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

அல்ஜீரியாவில் பிரெஞ்சு அரசு நடத்திய இனச்சுத்திகரிப்பு

1830 ஆம் ஆண்டு அல்ஜீரியாவை ஆக்கிரமித்த பிரெஞ்சு அரசு அங்கே ஒரு இராணுவ ஆட்சியை நிறுவியது. பல பிரெஞ்சு நிர்வாகிகள் அல்ஜீரியாவில் குடியேறினர். ஆக்கிரமிப்பு நடத்தப்பட்ட கால் நூற்றாண்டில் அலிஜீரியாவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் பிரெஞ்சு இராணுவத்தால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பெருமளவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர். இளைஞர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அல்ஜீரியாவின் தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தின் பலனாக 1962 ஆம் ஆண்டு அல்ஜீரியாவை விட்டு பிரெஞ்சு கொடுங்கோல் இராணுவம் வெளியேறியது.

நீண்ட போராட்டத்தின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை  “அல்ஜீரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரான்ஸிடம்  கோரியது”. பெருந்திரளான இராணுவம் அல்ஜீரியாவை விட்டு வெளியேற மறுத்தது. பிரெஞ்சு அரசின் கட்டளையையும் மீறித் தன்னிச்சையாகச் செயற்பட்ட இராணுவ ஆட்சியாளர்கள் பிரெஞ்சு அரசை கையகப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.

அல்ஜீரியாவில் பிரெஞ்சு இராணுவம் பல்வேறு படுகொலைகளை நிகழ்த்தியது. இறுதியாக அந்நாட்டிலிருந்து பிரெஞ்சு இராணுவம் வெளியேறிய போது 100000 வரையிலான பிரெஞ்சு இராணுவத்தில் இணைந்திருந்த அல்ஜீரிய முஸ்லிம்கள் பிரான்சிற்கு சென்றடைந்தனர்.

1961ஆம் ஆண்டு அல்ஜீரிய விடுதலைக்கு ஆதரவாகப்  பாரிஸ் தலை நகரில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் பாரிஸ் போலிஸ் துப்பாக்கியால் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர். இப்படுகொலை தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது . தொடர் போராட்டங்களின் விளைவாகப் படுகொலைகள் நிகழ்ந்த 37 வருடங்கள் கழித்து 1998 ஆம் ஆண்டு  “பிரெஞ்சு அரசு அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட 30 பேர் போலிசாரால் படுகொலை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியது”

அல்ஜீரியாவிலிருந்து பிரான்ஸ் வெளியேறிய வேளையில் அங்கு நிரந்தரமாகக் குடியேறிய பிரெஞ்சு நாட்டவரின் எண்ணிக்கை ஒரு மில்லியன். அல்ஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர்களும் அதில் அடங்குவர்.  பிரான்சிற்கு மீள்  குடியேறியவர்கள் 800000 பேர் . மீள் குடியேறியவர்களை கறுப்புக் கால்கள் (pied noir)என இன்றும் பிரான்சில் அழைக்கப்படுகின்றனர். அல்ஜீரியாவில் இவர்கள்  குடியிருந்த காலப்பகுதியில்  மொரோக்கோ நாட்டையும் பிரான்ஸ் ஆக்கிரமிக்க வேண்டும் என தொடர்ச்சியான பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர்களின் அழுத்தம் காரணமாகவே மொரோக்கோவை ஆக்கிரமிப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்து.  1901 ஆம் ஆண்டு மொரோக்கோவை ஆக்கிரமிக்க பிரெஞ்சு அரசின் கொடிய இராணுவம் அல்ஜீரிய எல்லை வழியாக மொரோக்கோவினுள் நுழைந்தது. 6 ஆண்டுகளின் பின்னர் பிரெஞ்சு இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் மொரோக்கோ வந்தது.

முஸ்லீம்களுக்கு எதிரான பிரெஞ்சு மேலாதிக்கம்

பிரெஞ்சு தேசத்தின் தொழிற் புரட்சிக்குப் பிந்தைய வரலாறு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வரலாறாகவே காணப்படுகிறது. 5.7 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் பிரெஞ்சு நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு என்பது அரசுகளின் ஆட்சிக் கோட்பாடாகவே இருந்து வந்துள்ளது. பொதுவாக வெளி நாட்டவர்களுக்கு எதிராகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஆரம்பிக்கப்பட்ட நிறவாதக் கட்சியான தேசிய முன்னணி(Front National), பிரான்ஸின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளது. பிரெஞ்சு அரசு அந்நாட்டின் குடியுரிமை பெறும் வெளி நாட்டவர்களைத் தமது சொந்த அடையாளங்களைத் துறந்து பிரெஞ்சு சமூகத்தோடு இரண்டறக் கலந்துவிடுமாறு (assimilation)கோருகிறது. பிரித்தானியா போன்ற நாடுகளில் இருக்கும் ஒருங்கிணைப்புச் சட்ட(integration) முறைமைப் பின்பற்றப்படுகிறது.

பிரான்சில் வாழுகின்ற இஸ்லாமியர்கள் மீதான வராலாற்று ரீதியான யுத்தம் இஸ்லாமியச் சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாகவே கருதுகிறது. இதுவே அடிப்படைவாதிகளின் உருவாக்கத்திற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. தனது சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்றதாக உணரும் சமூகத்தின் ஒரு பகுதியினர் அனைத்து இஸ்லாமியர் அல்லாதவர்களையும் எதிரிகளாகக் கருதுகின்றனர். இந்த அடிப்படை வாதத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரவர்க்கம் தமது இருப்பை உறுதி செய்துகொள்ள இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது .

மக்ரோன்

மக்ரோன்

இன்றைய பிரெஞ்சு அதிபர் மக்ரோன் அரசியல் செயல்பாட்டாளர் அல்லர் . முதலீட்டு வங்கியில் வேலைபார்த்த அவர், முன்னாள்  அதிபர் பிரன்சுவா ஒல்லோந்தின்  அரசில்  முக்கிய நிர்வாகியாகவும் ஆலோசரகவும் 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப் பட்டார். அதன் பின்னர் அரசில் பல பதவிகளை வகித்தார். 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “மைய அரசியல்” (centre politics ) இயக்கத்தின் உறுப்பினரானார் . ஊழலுக்கு எதிராக அரசியலற்ற நிர்வாகமே பிரான்சின் தேவை என தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்ரோன்  2017 ஆம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோல்வியடைந்த மைய அரசியல் என்ற கோட்பாட்டை இன்று அரவிந் கெஜ்ரவால், கமலஹாசன் போன்றவர்கள் முன்வைக்கின்றனர். அரசியல் வேண்டாம் என ஆட்சியை கைப்பற்ற எண்ணும் இவர்கள் அதிகாரவர்க்கத்தின் நேரடி அடியாட்கள் மட்டுமல்ல சமூகத்தின் எதிரிகள். ஐரோப்பாவில் மைய அரசியலின் முன்னோடியாகக் கருதப்படும் ரொனி பிளேயர் இன்று பிரித்தானியாவில் அதிகம் வெறுக்கப்படும் அரசியல்வாதிகளில் முதலிடத்திலிருக்கிறார்.

மக்ரோன் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பிரான்ஸ் போராட்ட களமாகவே காணப்படுகிறது. உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராகவும் அரசு துறைகளில் ஆள் குறைப்பிற்கும் ஊதியக் குறைப்பிற்கும் எதிராகவும் போராட்டங்களைத் தொழிற்சங்கங்கள் நடத்தின.  மே26  2018 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் மீது பிரெஞ்சு அரசு தாக்குதல் நடத்தி பரிஸ் நகரம் முழுவதும் போராட்டக்காரர்களைக் கைது செய்தது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட மஞ்சள் சட்டைப் போராட்டம், மக்ரோன் அரசால் கோரமாக ஒடுக்கப்பட்டு  போராட்ட அமைப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா தொற்று ஆரம்பித்த ஜனவரி  2020 இறுதியில் நடைபெற்ற தீயணைப்புப் படையின் போராட்டம், பிரெஞ்சு போலீஸின்  கொடூரமான ஒடுக்குமுறையால் வன்முறையில் முடிவடைந்தது.

இன்று மக்ரோனின் பாசிசக் கருத்துக்களுக்கு ஆதரவாக ஒரு பகுதி மக்கள் தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளனர். அப்பாவி இஸ்லாமிய மக்கள் மீது மக்ரோன் அரசு நடத்தும் யுத்தம் மோசமானது. மருத்துவமனைகளில் முஸ்லீம் பெண்கள் , ஆண் மருத்துவர்களை நிராகரித்தால் அவர்களுக்கு 15 வருடம் வரையிலான சிறைத் தண்டனையும், 75 ஆயிரம் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.  மேலும், பிரான்சிலிருக்கும் மசூதிகளை அரசு கண்காணிக்கும் எனவும் அவற்றிற்கான நிதி உதவிகளை அரசு கட்டுப்படுத்தும் எனவும் மக்ரோனின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் La Voix du Nord என்ற செய்தி இதழிற்கு உள்துறை அமைச்சர் வழங்கிய நேர்காணலில் “தீவிர இஸ்லாமிற்கு எதிரான போராட்டத்தை தாம் ஆரம்பித்துவிட்டதாக” அவர் கூறியுள்ளார்

பிரான்சின் மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் மக்ரோனின் நிறவாதத்தை நோக்கி மடை மாற்றப்பட்டுவிட்டது.  04/11/2020 பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்காங்கு போராட்டங்களை நடத்தினாலும், மக்ரோனின் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப் படுத்தவே அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் துணை சென்றுள்ளன என்பதே உண்மை. இன்று வரைக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதம், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கே துணை செய்துள்ளது. இனப்படுகொலைகளை ஆளும் அரசுகளே ஒழுங்கு செய்கின்றனவா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழுகின்றன. சமூக நலத் திட்டங்களுக்கு எதிரான நாடாக ஐரோப்பாவை மாற்ற பிரான்ஸ் இன்று மையப் புள்ளியாகச் செயற்படுகிறது. இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் துணை செல்கிறது.

சபா நவலன் http://inioru.com/  இணையத்தில் வந்த விரிவாக்கப்பட்ட பதிவு.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்