Aran Sei

இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஈரான் ஏவுகணை – செய்தி அறிக்கை

image credit : timesofisrael.com

ந்தியாவுக்கு வரும் இஸ்ரேலிய கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்கியுள்ளது என்று சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தான்சானியாவிலிருந்து இந்தியாவுக்கு சென்று கொண்டிருக்கும் அந்தக் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடிந்தது என்று சேனல் 12 செய்தி கூறியுள்ளது.

இந்தக் கப்பல் ஹைஃபாவைச் சேர்ந்த எக்ஸ்டி மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி தெரிவிக்கிறது.

வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை அதிகரித்திருப்பதாக இஸ்ரேலும் ஈரானும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவிக்கிறது.

பிப்ரவரி 26-ம் தேதி இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹீலியோஸ் ரே என்ற பஹாமா கொடி ஏந்திய சரக்குக் கப்பல் மீது ஒரு குண்டு வெடிப்பு தாக்கியது. ஈரான் கப்பலை தாக்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நதான்யாகு குற்றம் சாட்டினார். ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஊடகங்களிடம் பேசிய ஈரான் விசாரணையாளர் ஒருவர் மத்திய தரைக் கடலில் ஈரானின் கப்பல் ஒன்றை சேதப்படுத்திய தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் உள்ளது என்று கூறியிருந்தார்.

2019-லிருந்து ஈரானிய கச்சா எண்ணெயை எடுத்துக் கொண்டு சிரியாவை நோக்கிச் சென்ற 12 கப்பல்களை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விற்று வரும் நிதியை ஈரான் பிராந்திய தீவிரவாத குழுக்களுக்கு வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்